முகக்கவசம் அணிந்த இராணுவத்தினர் முகக்கவசம் அணிந்த இராணுவத்தினர்  

போர்கள், தீர்வுகளையும் பாதுகாப்பையும் தருவதில்லை

மக்களின் பாதுகாப்பிற்கு இன்று அச்சுறுத்தலாக இருப்பவைகளை, ஆயுதங்களின் துணைகொண்டு ஒழிக்கமுடியாது என்பதை தற்போதைய அனுபவம் வழியாக உணர்ந்துவருகிறது உலகு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆயதங்களுக்கென செலவழிக்கப்படும் பணம், கொரோனா தொற்று நோய் எதிர்ப்புத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என 18 அமைதி காப்பு அமைப்புகளுடன் இணைந்து Pax Christi கத்தோலிக்க அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இராணுவத் தளவாடங்கள் வழியாக மக்களைக் காப்பாற்றமுடியாது என்பதை, தற்போதைய கொள்ளை நோய் பிரச்சனை நமக்கு தெளிவாக படம்பிடித்துக் காட்டியுள்ளது எனக்கூறும் திறந்ததொரு மடல் ஒன்றை வெளியிட்டுள்ள இந்த அமைப்புகள், தற்போது, இராணுவத்தின் துணைகொண்டு, புதிய இரு மருத்துவமனைகள் இங்கிலாந்தில் கட்டப்பட்டுள்ளதும், Babcock ஆயுத நிறுவனம், சுவாசக்கருவிகளை உற்பத்திசெய்ய துவக்கியிருப்பதும், நல்லதொரு முதல்படி என அதில் குறிப்பிட்டுள்ளன.

மக்களின் பாதுகாப்பிற்கு இன்று அச்சுறுத்தலாக இருப்பவைகளை ஆயுதங்களின் துணைகொண்டு ஒழிக்கமுடியாது என்பதை தற்போதைய அனுபவம் வழியாக உணர்ந்துவரும் உலகம், ஆயுதங்களுக்கென ஒதுக்கும் பணத்தை நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவேண்டிய நேரமிது என Pax Christi உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்துள்ளன.

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நல ஆதரவுப் பணியாளர்கள் சிரமப்படும் வேளையில், பலகோடி டாலர்களை செலவழித்து, அணுசக்தி நீர்முழ்கிக் கப்பலில், பாதுகாப்பு ரோந்து வருவதன் வழியாக கொள்ளை நோயை எதிர்த்து போரிட முடியாது எனவும் கூறுகிறது இந்த அறிக்கை.

குண்டு வீச்சுகளின் துணைகொண்டு ஆழமான பிரசனைகளுக்கு தீர்வு காணமுடியாது என்பதை ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும் அண்மையப் போர்கள் நிரூபித்துள்ளன என்பதையும், போர்கள், உலகை, மேலும் பாதுகாப்பற்ற ஒரு நிலைக்கே தள்ளுகின்றன என்பதையும், இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன, Pax Christi உள்ளிட்ட அமைதி காப்பு அமைப்புக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2020, 14:17