வெனிஸ் புனித மார்க் பெருங்கோவிலில் கர்தினால் பிரான்செஸ்கோ மொராலியா வெனிஸ் புனித மார்க் பெருங்கோவிலில் கர்தினால் பிரான்செஸ்கோ மொராலியா  

சிறிதுநேரம் நின்று சிந்திக்க கொடுக்கப்பட்டுள்ள நேரம் இது

நாம் ஒவொருவரும், மனிதன் குறித்த ஒரு புதிய கண்ணோட்டத்துடன், ஒப்புரவாகும் ஒரு வரலாற்றை படைக்க நம்மை அழைக்கிறார் இயேசு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்த மாதங்களில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும், கொரோனா தொற்று நோய் உயிரிழப்புக்களையும், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே சேவையாற்றி உயிர்த்தியாகம் செய்துள்ள மருத்துவப்பணியாளர்களையும் உயிர்ப்புப் பெருநாள் திருப்பலிப் பீடத்தில் இறைவன் முன் வைப்பதாக, வெனிஸ் முதுபெரும் தந்தை, பேராயர் பிரான்செஸ்கோ மொராலியா அவர்கள் தெரிவித்தார்.

உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை மக்களுடன் இணைந்து நிறைவேற்ற முடியா நிலையில், காணொளி வழியாக திருப்பலி நிறைவேற்றி மறையுரையும் வழங்கிய பேராயர் மொராலியா அவர்கள், பல்வேறு விடயங்களில் வெற்றியடைந்துவிட்டோம் என பெருமிதம் கொண்டுவந்த இன்றைய சமூகம், சிறிது நேரம் நின்று சிந்திக்க கொடுக்கப்பட்டுள்ள நேரம் இது, என்றார்.

பல்வேறு பாதுகாப்பு வளையங்கள் நம்மைச் சுற்றி நிற்பதாக எண்ணிக்கொண்டு, நிலையான தன்மை குறித்த நிச்சயத்தில் வாழ்ந்த நம்மை, இந்த கொள்ளை நோய் உலுக்கி எடுத்துள்ளது மட்டுமல்ல, உண்மைத் தன்மைகள் குறித்து சிந்திக்கவும் அழைப்பு விடுத்துள்ளது என உரைத்தார், இத்தாலியின் வெனிஸ் நகர முதுபெரும் தந்தை மொராலியா.

மண்ணில் விழுந்த விதை மடிந்த பின்னரே முளைவிட்டு கனிதரும் என்ற உண்மையை உணர்த்தி நிற்கும் இவ்வுயிர்ப்புப் பெருவிழா நாளில், அனைத்துத் தடைகளையும் வெற்றிகொள்ள முடியும் என உரைக்கும் இயேசு, நாம் ஒவ்வொருவரும் மனிதர் குறித்த ஒரு புதிய கண்ணோட்டத்துடன், ஒப்புரவாகும் ஒரு வரலாற்றை படைக்க நம்மை அழைக்கிறார் என்றார், வெனிஸ் முதுபெரும் தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2020, 14:35