தேடுதல்

Vatican News
இயேசு, எருசலேமில் நுழைதல் இயேசு, எருசலேமில் நுழைதல் 

குருத்தோலை ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

இயேசு, எருசலேமில் நுழைந்தபோது, மக்கள், எவ்விதத் தூண்டுதலுமின்றி, தாங்களாகவே கூடிவந்து, அவரை வரவேற்றனர்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

குருத்தோலை ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

கோவிட்-19 தொற்றுக்கிருமியால், நாம் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த தொற்றுக்கிருமி, மரணத்தையும், நோயையும் கொண்டுவந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், கண்ணுக்குத் தெரியாத இந்தக் கிருமி, நாம், இதுவரை, வாழ்வில், காண மறந்த, அல்லது, காண மறுத்த பல உண்மைகளையும் நமக்குச் சொல்லித்தந்தவண்ணம் உள்ளது என்பதையும் மறுக்க இயலாது.

நாம் இதுவரை ஓடிக்கொண்டிருந்த அவசரமான வாழ்வில், காண மறந்த, அல்லது, காண மறுத்த பல உண்மைகளை அசைபோட, இந்த 'முழு அடைப்பு' நேரம் நம்மை அழைக்கிறது. இந்த முழு அடைப்பு நேரத்தில், நம் இல்லங்களில் இருந்தவண்ணம் புனித வார நிகழ்வுகளில் கலந்துகொள்வதை, அருள் நிறைந்த ஒரு தருணமாக நாம் ஏற்றுக்கொள்வோம்.

கோவிட்-19 தொற்றுக்கிருமியின் தாக்கம், குருத்தோலை ஞாயிறன்று ஒரு சூறாவளியாக வீசுவதை எண்ணிப்பார்க்கும்போது, ஒரு வரலாற்றுப்பதிவு என் நினைவுக்கு வருகிறது. அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The Palm Sunday Tornado 1920… குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920. அவ்வாண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல மாநிலங்களில், குருத்தோலை ஞாயிறன்று வீசிய 37 சூறாவளிகளைப் பற்றிய செய்தி அது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஒவ்வோர் ஆண்டும், மார்ச் மாதம் முதல், ஜூன் மாதம் முடிய, பல்வேறு இடங்களில் சூறாவளிகள் வீசுவது வழக்கம்தான். எனவே, பொதுவாக மார்ச் மாதம் இடம்பெறும் குருத்தோலை ஞாயிறன்று பலமுறை அந்நாட்டில் சூறாவளிகள் வீசியுள்ளன. இவ்வாண்டோ, அந்நாட்டில் வீசும் வழக்கமான சூறாவளிகளுடன், கோவிட்-19 என்ற கூடுதல் சூறாவளியும் வீசிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

குருத்தோலை ஞாயிறு, சூறாவளி... இவை இரண்டையும் இணைத்து, நம் சிந்தனைகளை ஆரம்பிப்போம். சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும்; தன் பாதையில் உள்ள அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு, எருசலேமில், பலவற்றைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது என்பதை உணரலாம்.

இயேசு, எருசலேமில் நுழைந்தபோது, மக்கள், எவ்விதத் தூண்டுதலுமின்றி, தாங்களாகவே கூடிவந்து, அவரை வரவேற்றனர். தானாகவே கூடும் கூட்டங்கள், தங்கள் குறிக்கோள்களை அடைய முயலும். காசு கொடுத்து சேர்க்கப்படும் கூட்டங்களோ, கொடுத்த காசுக்கு கூச்சல் போட்டுவிட்டு, கலைந்துவிடும். எருசலேமில், அன்று, தானாகவே உருவான மக்கள் கூட்டம், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை உருவாக்கியது. இயேசுவைச் சுற்றி உருவான அந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டது.

இயேசு, தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்தே, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வுக்குச் சவால்விடும் வண்ணம், மாற்றங்கள் உருவாயின. அந்த மாற்றங்களின் சிகரமாக, எருசலேம் நகரில், இயேசு, மக்களின் வரவேற்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து, மதத் தலைவர்களின் அரணாக விளங்கிய எருசலேம் கோவிலில் அவர் நுழைந்து, அங்கு குவிந்திருந்த அவலங்களை, சாட்டையைச் சுழற்றி, சுத்தப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும், தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே!

இரண்டாவது, நமது சிந்தனைகளில் வலம்வரும் கருத்து, புனித வாரம். குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா வரை உள்ள இந்த எழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம் என்று அழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்கவேண்டும்? இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாள்கள் இவை என்பதாலும், நம் மீட்பு வரலாற்றின் உச்சக்கட்ட நிகழ்வுகள், இந்த வாரத்தில் நிகழ்ந்ததாலும், இதை, புனிதவாரம் என்றழைக்கிறோம்.

அந்த இறுதி நாள்களில் நிகழ்ந்தவை எதிலும், புனிதம், வெளிப்படையாகத் தெரியவில்லையே! இயேசுவின் நண்பர்களில் ஒருவர் காட்டிக்கொடுத்தார். மற்றொருவர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள், ஒளிந்துகொண்டனர். மனசாட்சி விலைபோனதால், பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர், என்று தெரிந்தும், தவறாக, தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் தொங்கவிட்டனர்.

நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறோர் இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே! ஆம், வேறோர் இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகையத் துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே, நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி, வேறுபட்ட ஓர் இலக்கணத்தை, இயேசு, தன் சிலுவை மரணத்தின் வழியாகச் சொல்லித் தந்தார். வெளிப்படையாகத் தெரியாத இந்தப் புனிதத்தை, கற்றுக்கொள்ளவே, புனிதவாரம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. புனிதவாரம் முழுவதும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ளவேண்டிய, வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு!

கல்வாரி என்றதும், நம் சிந்தனைகளில் செதுக்கப்படும் ஓர் அடையாளம்... சிலுவை. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்திரவதைக் கருவிகளிலேயே, மிகவும் கொடூரமானது, சிலுவை. பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை, பொது இடத்தில் நிர்வாணமாக்கி, அவர்களை, அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப் பறிக்கும் கொலைக் கருவிதான், சிலுவை. அந்த அவமானச் சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை, இன்று, நாம், கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில் அறையுண்ட இயேசுவின் உருவம், கோடான கோடி மக்களின் வாழ்வில் சூறாவளியாக நுழைந்து, தலைகீழ் மாற்றங்களை உருவாக்கி, மீட்பைக் கொணர்ந்துள்ளது.

சிலுவையில் அறையுண்ட இயேசு, ஒருவர் வாழ்வில் உருவாக்கும் மாற்றங்களைப் பற்றி அழகுறச் சித்திரிக்கும் ஒரு கதை இது. இக்கதையின் நாயகனான ஆயர், சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று, அவர்களிடம் பேசிவந்தார், இந்த ஆயர். அவர்களிடம், அடிக்கடி, ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது, இவர் வழக்கம்.

பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும், இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்றழைத்து, உரத்தக் குரலில் கேலிசெய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும், அந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் கூடிவந்தது.

ஒரு முறை, ஞாயிறு திருப்பலிக்கு முன், பங்குத்தந்தை, பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை, அவரிடம், "நான் இப்போது உனக்கு விடுக்கும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபம், கட்டுக்கடங்காமல் வெடித்தது. "முட்டாள் சாமியாரே! எனக்கேச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்" என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார், அவ்விளைஞர். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப்பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை' என்று நீ கத்தவேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.

அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். பின்னர், உரத்தக் குரலில், "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை, அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை, இளைஞனிடம், "தயவுசெய்து, இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்" என்று கூறினார். இம்முறை, இளைஞன் சிலுவையை உற்றுப்பார்த்தார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்கவும் முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் வழிந்தோடியது.

இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர், சிறிதுநேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்பதை, சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.

சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த புனித வாரம் முழுவதும் அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் அழைக்கப்படுகிறோம். நமக்குள் என்னென்ன மாற்றங்கள் உருவாகப் போகின்றன? அந்த இளைஞனை ஆட்கொண்டு, அவர் வாழ்வை மாற்றிய இறைவன், இன்றைய உலகில் வாழும் இளையோரின் வாழ்வில் மாற்றங்களை உருவாக்க வேண்டுவோம்.

சிலுவையில் அறையுண்ட இயேசுவையும், இளையோரையும் இணைத்துச் சிந்திக்கும்போது, இன்றைய மூன்றாவது கருத்து மனதில் எழுகிறது. அதுதான், உலக இளையோர் நாள். ஒவ்வோர் ஆண்டும், குருத்தோலை ஞாயிறன்று, தாய்த் திருஅவை, உலக இளையோர் நாளைக் கொண்டாடுகிறது. இளையோர் உலக நாள், முதல்முறை, வத்திக்கானில் கொண்டாடப்பட்டபோது, இளையோரைக் குறித்து, உலகம் கொண்டிருக்கும் பல முற்சார்பு எண்ணங்கள், உடைத்து எறியப்பட்டன.

1984ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதி, குருத்தோலை ஞாயிறன்று, இளையோரை, உரோம் நகருக்கு வரும்படி, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று வருகைதரும் இளையோரின் எண்ணிக்கை, 60,000 இருக்கும் என்று திருஅவைத் தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அன்று, ஒரு சூறாவளி, உரோம் நகரில் நுழைந்து, தலைவர்களின் எதிர்பார்ப்பைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. ஆம், அன்று, உரோம் நகரில் 60,000 அல்ல, 300,000 இளையோர் கூடி வந்திருந்தனர்.

அங்கு, கூடியிருந்த இளையோரைக் கண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கூறிய அற்புதமான வார்த்தைகள், "உலக இளையோர் நாள்" என்ற எண்ணத்திற்கு வித்திட்டன: "ஆயிரமாயிரம் இளையோர், இவ்வளவு ஆர்வமாகக் கூடிவந்து, அர்த்தமுள்ள முறையில் இந்நாளைச் சிறப்பித்தது, உண்மையிலேயே வியப்பிற்குரியது. ஆன்மீக உணர்வுகளையும், உயர்ந்த கொள்கைகளையும் இளையோர் இழந்துவிட்டனர் என்று, இப்போது, யாரால் சொல்லமுடியும்? அவர்களை நம்புவது வீண் என்று, இனி யாராலும் சொல்லமுடியுமா?" என்று புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் இளையோருக்கு நற்சான்றிதழ் வழங்கியதை, இளையோர் ஆரவாரமாக வரவேற்றனர்.

1984ம் ஆண்டு, கொண்டாடப்பட்ட குருத்தோலை ஞாயிறு வழிபாட்டிற்குப் பின், திருத்தந்தை, புனித 2ம் ஜான்பால் அவர்கள், ஓர் அற்புத அடையாளச் செயலைச் செய்தார். 1983ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையில் கொண்டாடப்பட்ட, மீட்பின் புனித ஆண்டுக்கென, பெரியதொரு சிலுவை, புனித பேதுரு பசிலிக்காவில் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. அச்சிலுவையை, இளையோர் கரங்களில், திருத்தந்தை ஒப்படைத்தார். கிறிஸ்துவின் அளவற்ற அன்பைப் பறைசாற்றும் அந்த அற்புத அடையாளத்தை, உலகெங்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்று, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், இளையோரிடம் குறிப்பாக விண்ணப்பித்தார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த இளையோர் நாளின் மையமாக அமையும் ஓர் அடையாளம்... சிலுவை. துன்பங்களைக் கண்டால், பயந்து, விலகி, இன்பத்தை மட்டுமே தேடிச்செல்பவர், இளையோர், என்ற தவறான, முற்சார்பு எண்ணத்தை மாற்றியமைக்கும் வண்ணம், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மைய அடையாளமாக விளங்குவது, அவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சுமந்துச் செல்லும் சிலுவை.

கோவிட்-19 தொற்றுக்கிருமி நெருக்கடி, மற்றும் முழு அடைப்பு ஆகிய துன்பங்கள் நம்மைச் சூழ்ந்துள்ள வேளையிலும், ஆதரவற்ற பல வறியோருக்கு உதவிகள் செய்ய முன்வந்திருக்கும் இளையோர், தங்கள் சிலுவைகளைச் சுமக்க வீதிகளுக்கு வந்திருப்பது நமக்கு நம்பிக்கை தருகிறது. இவ்விளையோரை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவேண்டுமென்று செபிப்போம்.

இறுதியாக நம் சிந்தனைகள் மீண்டும் ஒருமுறை நாம் வாழ்ந்துவரும் 'முழு அடைப்பு' என்ற எதார்த்தத்தை நோக்கி திரும்புகிறது. முதல் குருத்தோலை ஞாயிறன்று நடந்தவற்றைக் கண்ட அதிகார வர்க்கம், இயேசுவை அழித்துவிடும் வெறியில், தங்கள் வேட்டையைத் துவங்கியது. அந்த வேட்டையில், இயேசு பிடிபட்டதும், அவரது சீடர்கள் தங்களையே ஓரிடத்தில் அடைத்துக்கொண்டனர். அவர்களில் பலர், தாங்கள் அடைபட்டிருந்த அறையிலிருந்தவண்ணம், இயேசுவின் பாடுகள், மரணம் ஆகியவற்றைக் குறித்து, பிறரிடமிருந்து செய்திகளைக் கேட்டிருக்கவேண்டும்.

இன்று, ஏறத்தாழ அதே நிலைக்கு நாம் உள்ளாகியிருக்கிறோம். கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்கும் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மறையுண்மைகளைப் பறைசாற்றும் வழிபாடுகளில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலாமல், ஊடகங்கள் வழியே, இந்த மறையுண்மை நிகழ்வுகளில் பங்கேற்றுவருகிறோம்.

தொற்றுக்கிருமி நம்மீது சுமத்தியிருக்கும் இந்த கட்டுப்பாட்டை, ஆன்மீக அளவில் வெற்றிகொண்டு, இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு ஆகிய மறையுண்மைகளில் பொருளுள்ள முறையில் பங்கேற்க இறைவன் நமக்கு வழிகாட்டுவாராக!

04 April 2020, 14:02