தேடுதல்

Vatican News
லாகூர் பேராயர் செபஸ்தியான் ஷா லாகூர் பேராயர் செபஸ்தியான் ஷா   (© 2017 Catholic News Service)

கோவிட்-19: பாகிஸ்தானில் தேசிய ஒற்றுமை அவசியம்

நலவாழ்வுப் பணியாளர்கள் சிறிய வீடுகளில் வாழ்வதால், இவர்களில் ஒருவருக்கு இக்கிருமி தொற்றினாலும், அது, அவர்கள் வாழ்கின்ற சமுதாயம் முழுவதையும் பாதிக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் கோவிட்-19 தொற்றுக்கிருமிக்கு எதிரான நடவடிக்கையில், தேசிய அளவில் ஒற்றுமை அவசியம் என்றும், அனைவரும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்நாட்டு ஆயர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். 

“முகக் கவசங்களைத் தயார் செய்யுங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள்” என்ற தலைப்பில், பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருஅவை ஆரம்பித்துள்ள நடவடிக்கை குறித்து, செய்தியாளர் கூட்டத்தில் பகிர்ந்துகொண்ட, லாகூர் பேராயர் செபஸ்தியான் ஷா அவர்கள், நம் பகைவனாகிய இத்தொற்றுக் கிருமியை ஒழிப்பதற்கும், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் ஒன்றிப்பு அவசியம் என்று கூறினார்.    

மதம், இனம் போன்ற எவ்விதப் பாகுபாடுகளுமின்றி, எல்லாருக்கும் முகக் கவசங்களை விநியோகிக்குமாறு, அனைத்துக் கத்தோலிக்கப் பங்குத்தளங்களுக்கும் கூறியிருப்பதாகத் தெரிவித்தார் பேராயர் ஷா. 

லாகூர் உயர்மறைமாவட்டம், 15 ஆயிரம் முகக் கவசங்களையும், கைதுடைப்பான்களையும் தயாரித்து, பஞ்சாப் மாநிலத்தின் எட்டு மாவட்டங்களுக்கும் வழங்கியிருப்பதாகவும், பேராயர் ஷா அவர்கள் அறிவித்தார். 

கோவிட்-19 கிருமி பரவல் தொடர்பாக, பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அனைத்து நலவாழ்வு வழிமுறைகளையும் கத்தோலிக்கத் திருஅவை கடைப்பிடித்து வருகிறது என்று கூறிய பேராயர் ஷா அவர்கள், நலவாழ்வுப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் வெளியிட்டார். 

நலவாழ்வுப் பணியாளர்கள் சிறிய வீடுகளில் வாழ்வதால், இவர்களில் ஒருவருக்கு இக்கிருமி தொற்றினாலும், அது, அவர்கள் வாழ்கின்ற சமுதாயம் முழுவதையும் பாதிக்கும் என்ற அச்சத்தையும் லாகூர் பேராயர் வெளியிட்டார். 

ஏப்ரல் 3ம் தேதி நிலவரப்படி, பாகிஸ்தானில் 2,450 பேர் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும், குறைந்தது 38 பேர் இறந்துள்ளனர் என்று, அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்கள் கூறுகின்றன. (UCAN)

04 April 2020, 14:25