தேடுதல்

 மியான்மார் திருத்தூதுப்பயணம்,2017 ( கோப்புப்படம்)  மியான்மார் திருத்தூதுப்பயணம்,2017 ( கோப்புப்படம்)  

கர்தினால் போ : தோழமையுணர்வுக்கு அழைப்பு

கர்தினால் போ: உலகம் கோவிட்- 19 தொற்றுக்கிருமியை ஒழிப்பதற்குப் போராடிவரும் இவ்வேளையில், மனித சமுதாயம், ஒரு புதிய விழிப்புணர்வின் விடியலில் உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகம் கொரோனா தொற்றுக்கிருமியின் பிடியில் துன்புறும்வேளை,  நம் எல்லாருக்கும், மனித உடன்பிறந்த உணர்வு, தோழமை மற்றும் அன்பு தேவைப்படுகின்றன என்று, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.

ஏப்ரல் 03, இவ்வெள்ளியன்று கர்தினால் போ அவர்கள் வெளியிட்டுள்ள உயிர்ப்புப் பெருவிழா செய்தியில், வலுவற்ற இந்த உலகில், மனிதக் குடும்பம் என்ற முறையில், நம் வாழ்வு, ஒரு புத்தம் புதிய அணுகுமுறை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்றும், கோவிட்-19 நெருக்கடி சூழலில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், தோழமையின் புதிய வடிவங்களுக்கு நம்மை இட்டுச்செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

மனித சமுதாயம், நீதி மற்றும், ஒருமைப்பாட்டுணர்வுக்கு உயிர்த்தெழுந்துள்ள இவ்வேளையில், திருஅவை, உலகோடு சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார், கர்தினால் போ.

அணு ஆயுதங்களை, ஆணவத்துடன் சேமித்து வைத்துள்ள, பணம்படைத்த மற்றும், வல்லரசு நாடுகள், ஒரு கிருமியால் சக்தியிழந்த நிலைக்கு உள்ளாகியுள்ளன என்றும், கடவுளின் வல்லமையைப் புறக்கணித்த உலக அதிகாரங்கள், வாழ்வு, வலுவற்றது, ஒருவர் ஒருவரின் உதவி நமக்குத் தேவை என்பதை தாழ்ச்சியோடு கற்றுக்கொண்டு வருகின்றன என்றும், மியான்மார் கர்தினால் கூறியுள்ளார்.

வல்லரசு நாடுகள், அனைத்தையும்விட, எல்லாவற்றுக்கும் மேலாக உள்ள ஒரு சக்தியின் பிரசன்னத்தை ஏற்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், கொலைசெய்யும் தொழிலுக்கு அதிகப் படைவீரர்களைக் கொண்டிருப்பதைவிட, வாழ்வைக் காப்பாற்றக்கூடிய மருத்துவர்களை அதிகம் கொண்டிருக்க வேண்டுமென்று பல நாடுகள், மிகுந்த வேதனையுடன் உணரத் தொடங்கியுள்ளன என்றும் எடுத்துரைத்துள்ளார்.

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவராகிய கர்தினால் போ அவர்கள், இந்த இருளான நாள்கள், மனித சமுதாயத்தை, அச்சம் மற்றும், கவலையின் மிகப்பெரிய மூச்சுத்திணறல் புகைமண்டலமாகச் சூழ்ந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.

நாம் கடவுளைத் தேடுகின்ற, நம் உடைந்த உள்ளத்தின் மௌனக் கண்ணீரைச் சிந்துகின்ற,  மற்றும், மனிதத் தோழமையைத் தேடுகின்ற இடங்களான ஆலயங்கள் மூடியிருப்பது மிகவும் வேதனை தருகின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பது போன்று, திருஅவை, ஒரு கள மருத்துவமனை போன்று இருக்க வேண்டும் என்றும் கர்தினால் போ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புனித சனி, உயிர்ப்பின் வெற்றியோடு முடியும் என்ற நம்பிக்கையில், கத்தோலிக்கராகிய நாமும், அனைத்து மனித சமுதாயமும் காத்திருக்கிறது, மனிதத் தோழமை மற்றும், அன்பு என்ற புதிய உலகில், புதிய உயிர்ப்புப் பெருவிழா பிறக்கட்டும் என்று, தன் உயிர்ப்புப் பெருவிழாச் செய்தியில் கூறியுள்ளார், மியான்மார் கர்தினால் போ. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2020, 12:39