பீகார் மாநிலத்தில் ஏழைகளுக்கு உணவளிக்கும் இயேசு சபையினர் பீகார் மாநிலத்தில் ஏழைகளுக்கு உணவளிக்கும் இயேசு சபையினர் 

பீகார் மாநிலத்தில் வறியோரிடையே இயேசு சபையினர்

பீகாரில் பிற்படுத்தப்பட்ட சாதி அமைப்பில், ஏறத்தாழ 22 இலட்சம் மக்கள் உள்ளனர். இவர்களில் ஏறத்தாழ 96.3 விழுக்காட்டினர், நிலமற்றவர்கள் மற்றும், பண்ணைகளில் வேலைசெய்யும் தொழிலாளர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் பீகார் மாநிலத்தில், இந்த கோவிட்-19 கிருமி பரவல் காலத்தில், உணவின்றி தவிக்கும், ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதற்கு, அம்மாநில இயேசு சபையினர், அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். 

பாட்னா இயேசு சபை மாநிலத்தின் சமுதாய நல அமைப்பின் (Manthan) இயக்குனர் இயேசு சபை அருள்பணி Juno Sebastian அவர்கள், இப்பணி குறித்து யூக்கா செய்தியிடம் விளக்கியபோது, பீகார் மாநிலத்தில் நிலவும், கடுமையான சாதி வேறுபாட்டால், பிற்படுத்தப்பட்ட சாதியினர், இந்த கோவிட்-19 தனித்திருத்தல் காலத்தில் ஒதுக்கப்படுகின்றனர் என்று கூறினார்.

பாட்னாவின் புறநகரில் வாழ்கின்ற, எலிகளை உண்போர் என அறியப்படும் Musahar சமுதாயத்தின் ஏறத்தாழ நாற்பதாயிரம் மக்கள், தெருச்சுத்தம் மற்றும், கழிவறைச் சுத்தம் போன்ற, அடிமைகள் ஆற்றும் வேலைகளைச் செய்து வருகின்றனர் என்று கூறிய அருள்பணி செபஸ்தியான் அவர்கள், அரசின் ஊரடங்கு கட்டுப்பாட்டால், இம்மக்கள் பசியால் மிகவும் துன்புறுகின்றனர் என்று கூறினார்.

தொடர்ந்து நான்கு நாள்களாக உணவின்றி துன்புற்ற இம்மக்களில் பலர், உணவுக்காக தன்னை அணுகியபோது அதிர்ச்சியுற்றேன் என்றும் கூறிய அருள்பணி செபஸ்தியான் அவர்கள், இந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கு, இந்திய இரயில்வே உணவு அமைப்பு மற்றும், சுற்றுலாத் துறையுடன் இணைந்து பணியாற்றுவதாகத் தெரிவித்தார்.  

வேட்டையாடுகின்றவர்கள் மற்றும், எலிகளை உண்போர் என அறியப்படும் Musahar சமுதாயம், இந்தியாவின் சாதி அமைப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆவர். இவர்கள், உயர்சாதியினரால், குறிப்பாக, உயர்சாதி இந்துக்களால் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர்.

பீகாரில் இத்தகைய பிற்படுத்தப்பட்ட சாதி அமைப்பில், ஏறத்தாழ 22  இலட்சம் மக்கள் உள்ளனர். இவர்களில் ஏறத்தாழ 96.3 விழுக்காட்டினர், நிலமற்றவர்கள் மற்றும், பண்ணைகளில் வேலைசெய்யும் தொழிலாளர்கள். இவர்களில் ஏறத்தாழ பத்து விழுக்காட்டினர் மட்டுமே எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2020, 14:47