தேடுதல்

Vatican News
குவாதலூப்பே அன்னை மரியா குவாதலூப்பே அன்னை மரியா  (ANSA)

ஏப்ரல் 12 - குவாதலூப்பே அன்னை மரியாவிடம் அர்ப்பணம்

ஏப்ரல் 12, உயிர்ப்புப் பெருவிழாவன்று, குவாதலூப்பே திருத்தலத்தில், உலகின் ஐந்து கண்டங்களில் வாழும் மக்களுக்காக, செபமாலையின் ஐந்து பத்து மணிகள் சொல்லப்படும். அதைத் தொடர்ந்து, சிறப்புத் திருப்பலியும், அர்ப்பணமும் நடைபெறும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடி மக்களை துன்பங்களில் ஆழ்த்தியுள்ள வேளையில், விண்ணகத் தாயான மரியாவைக் காண்பதன் வழியே, மக்கள் மனதில் நம்பிக்கையை விதைப்பது, மேய்ப்பர்களாகிய நம் கடமை என்று, இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், பேராயர் Miguel Cabrejos Vidarte அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கோவிட் 19 தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவலை முடிவுக்குக் கொணர, குவாதலூப்பே அன்னை மரியாவிடம் மீண்டும் ஒருமுறை அமெரிக்க கண்டத்தையும், இவ்வுலகையும் அர்ப்பணம் செய்யும் செபத்தை, ஏப்ரல் 12, உயிர்ப்பு ஞாயிறன்று, இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியையொட்டி, மடல் ஒன்றை அனுப்பியுள்ள பேராயர் Vidarte அவர்கள், ஏப்ரல் 12ம் தேதி, மெக்சிகோ நாட்டின் உள்ளூர் நேரம், நண்பகல் 12 மணிக்கு, அந்நாட்டின் தேசிய திருத்தலமான குவாதலூப்பே அன்னை மரியாவின் பெருங்கோவிலில் திருப்பலி நடைபெறும் வேளையில், அனைத்து ஆயர்களும் அவரவர் இடங்களில் திருப்பலி நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 12, உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறு, நண்பகல் 12 மணிக்கு, இலத்தீன் அமெரிக்கா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் மணி ஒலித்து, செபமாலை சொல்லப்படும் என்றும், உலகின் ஐந்து கண்டங்களில் வாழும் மக்களுக்காக, ஐந்து பத்து மணிகள் சொல்லப்படும் என்றும், இதைத் தொடர்ந்து, சிறப்புத் திருப்பலியும், குவாதலூப்பே அன்னை மரியாவுக்கு அர்ப்பணமும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (Fides)

02 April 2020, 13:53