Vatican News
கோவிட்-19 சூழலில் பிலிப்பீன்சில் இயேசு உயிர்ப்புப் பெருவிழா கோவிட்-19 சூழலில் பிலிப்பீன்சில் இயேசு உயிர்ப்புப் பெருவிழா  (ANSA)

இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா செய்தி

வாக்குமாறாக நம் ஆண்டவர் இயேசுவுக்கு நம் இதயக் கதவைத் திறப்போம் இறைநம்பிக்கையில் வளர்வோம்! நம் உயிர்த்த இயேசு நம் பயணத்தில் உடனிருந்து வழிநடத்துவார்.

மேரி தெரேசா: வத்திக்கான் &அ.பணி அ.சூசை செல்வராஜ்

இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா செய்தி 130420

கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடி நிலை ஒருபுறம் இருந்தாலும், கிறிஸ்துவின் உயிர்ப்பு நம் அனைவருக்கும் நம்பிக்கை தருகின்றது. ஏப்ரல் 12, இஞ்ஞாயிறன்று இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா திருவழிபாட்டை, வீடுகளில் இருந்தபடியே, ஊடகங்கள் வழியாக, அதில் பக்தியுடன் பங்குகொண்டோம். அன்றைய நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உயிர்ப்புப் பெருவிழா சிறப்பு ஆசீரையும் பெற்றோம். இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாக் காலத்தில் இருக்கும் நமக்கு, இன்றைய நிகழ்ச்சியில் உயிர்ப்புப் பெருவிழா பற்றிய தன் சிந்தனைகளை, வத்திக்கான் வானொலி நேயர்களுடன் பகிர்ந்துகொள்கிறார், அருள்பணி அ.சூசை செல்வராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்  

“ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு கதைகள்

நம்பிக்கை நிறைந்த புதிய உலகை உருவாக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு.

இது வெறும் கற்பனைக் காட்சி அல்ல.” – திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்த்த ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவில் பிரியமானவர்களே,

அன்புக்குரிய வத்திக்கான் வானொலி நேயர்களே!

உங்கள் அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்!

இத்தாலி நாட்டின் உரோமை நகரில் உள்ளது சான் லிபோரியோ என்ற பங்குத்தளம். அங்கு, ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையில் ஆலயம் வர இயலாதவர்களுக்கு அவர்களின் இல்லத்திற்குச் சென்று செபித்து நற்கருணை வழங்குகிறேன். ஒரு வீட்டில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு தாயும் 35 வயது மகனும் இருக்கின்றார்கள். மகன் படுத்த படுக்கையாக இருக்கின்றார். அந்த மகனால், எழவோ, நடக்கவோ எதுவும் செய்ய இயலாத பரிதாப நிலை. அந்த மகனுக்கான அனைத்து பணிவிடைகளையும் செய்கின்றவர் தாய் மட்டுமே. ஒருநாள் அந்தத் தாய் என்னிடம் பகிர்ந்தது, “பாதர், இந்த மகன் என் வயிற்றில் இருக்கும்போதே என் கணவரை இழந்தேன். பிறக்கும்போது என் மகன் இந்த நிலையில்தான் பிறந்தான். பலரும் என்னை ஏளனம் செய்தார்கள், புறக்கணித்தார்கள், இழிவுபடுத்தினார்கள், ஒதுக்கிவைத்தார்கள். ஆனால் என் இயேசுவும் மாதாவும் எங்களைக் கைவிடவில்லை. எங்களை ஏற்று அன்பு செய்கிறார்கள். அந்த அன்பின் நம்பிக்கையில் நானும் என் மகனும் உயிர் வாழ்கின்றோம். இயேசுவை விட்டு எங்களால் வாழ முடியாது. புனித யோசேப்பு இள வயதில் இறந்தாலும் இயேசுவுக்காக அன்னை மரியா வாழ்ந்ததுபோல நானும் என் கடைசி மூச்சு வரை என் மகனை சிறப்பாகக் கவனிப்பேன். அதற்கு என் நற்கருணை ஆண்டவரும், இறைவார்த்தைகளும் மாதாவின் செபமாலையும் எனக்கு நம்பிக்கையும் நலமும் தரவேண்டும். நீங்களும் எனக்காக என் மகனுக்காகச் ஜெபியுங்கள்” என்று கண்ணீர்மல்க நம்பிக்கை முழக்கமிட்டார். இப்போது உணர்கின்றேன், “உயிர்த்த இயேசு இன்றும் இப்படிப்பட்ட நம்பிக்கையாளர்களின் ஆளுமைகளில் உயிர் வாழ்கிறார் என்று.” காரணம் அந்தத் தாயின் உள்ளத்தில் நிறைந்திருக்கின்ற உண்மையான இறைநம்பிக்கை, இதயத்தில் பொங்கி வழிகின்ற மகன்மீதுள்ள பாசம், உடலில் உறைந்திருக்கின்ற பரிசுத்த தன்னம்பிக்கை, வார்த்தைகளில் வழிந்தோடிய வாய்மை, பார்வையில் மிளிர்கின்ற கருணை தீபம், கரங்களில் கசிந்துருகும் தியாகம், உதடுகள் உணர்த்தும் அன்னை மரியாவின் ஜெபமாலை வல்லமை. முகத்தில் பிரகாசிக்கின்ற உயிர்த்த இயேசுவின் தரிசனம். மொத்தத்தில் என்னைப் பொறுத்த வரையில் இன்றையச் சூழலில் உயிர்த்த இயேசுவுக்கு மிகச் சிறந்த சாட்சிகளுள் ஒருவர் அந்தத் தாய்.

ஆம், பிரியமானவர்களே, நோய், சாவு,  என்பது ஒரு மாபெரும் இழிவு, பெருத்த அவமானம், பெரிய சாபம். நம் ஆண்டவர் ஆண்டவர் இயேசு சாபமான சிலுவையை தன் உயிர்ப்பினால் ஒரு பெரிய நம்பிக்கையின் ஆசீர்வாதமாக மாற்றினார். இதனையே புனித பேதுரு யூதத் தலைமைச் சங்கத்தின் முன் இவ்வாறு சொல்கிறார், “நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால், கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார் (திபணி 4:10). இயேசுவின் உயிர்ப்பு ஒரு வரலாற்று நிகழ்வு என்பதை புனித பவுல் “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” என்று 1 கொரி 15:14ம் வசனத்தில் சான்று பகர்கின்றார். ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா ஒரு புதிய பாஸ்கா பெருவிழா, வெற்றித் திருவிழா, நம்பிக்கை விழா, ஒளியின் விழா. இதனை புனித சனிக்கிழமை நள்ளிரவு திருப்பலியில் நடைபெறும் இரண்டு வழிபாட்டு நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன. 1. புதிய ஒளி – பாஸ்கா திரி: இறைவன் இருளில் வாழ்பவர் அல்ல. அவர் ஒளியானவர். வெளிச்சத்தில் வாழ்பவர். இருள் என்பது எதிர்மறை. வெளிச்சம் என்பது நேர்நிலை. எனவேதான் கடவுளின் முதல் வார்த்தை … முதல் படைப்பு “ஒளி உண்டாகட்டும்” (தொநூ 1:3) என்பதாகும். நம் ஆண்டவர் இயேசுதான் இந்த ஒளி என்பதை அவரே சொல்கின்றார், “ நானே உலகின் ஒளி. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார். வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவா 8:12).

2. புதிய தண்ணீர் - பாஸ்கா தீர்த்தம்: வெறுமையான உலகத்தில் இருந்த நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைவாடிக்கொண்டிருந்தார் (தொநூ 1:2). நம் ஆண்டவர் இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெறும்போது (லூக் 3:21-23) நீரில் மூழ்கி எழுந்திருக்கக் காரணம் பாவக் கறைபடிந்த உலகத்தை தன் பரிசுத்த உடலால் நனைத்துப் புனிதமாக்குகிறார் என்பதாகும். இதைத்தான்  புதிய பாஸ்கா திரியை புதிய தண்ணீர் பாத்திரத்தில் மூன்று முறை நனைக்கின்ற நிகழ்வு நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறது. இந்த பாஸ்கா புனித நீர் ஆண்டவர் இயேசுதான் என்பதை இயேசுவின் வார்த்தைகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. “யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்” என்று இயேசு முழக்கமிடுகிறார் (யோ 7:37).

ஆம் இருளும் வெறுமையும் பசி தாகமும் நிறைந்த இந்த உலகில் உயிர்த்த இயேசுதான் நமக்கு வழிகாட்டும் ஒளியாக, உயிர் தரும் நீராக, வாழ்வு தரும் நற்கருணை உணவாக இருக்கின்றார்.

உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய கொள்ளை நோயினால் முடங்கிக்கிடக்கிறது. இச்சூழலில் நம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி மற்றும் விடுக்கும் அழைப்பு என்ன? எத்தகைய மனநிலையில் நாம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாட வேண்டும்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு முழமையான பதில் தர இயலாது. இந்த நிலையில் புனித பவுல் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன, “நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்துபோவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை. துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை. வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் உயிர்த்தெழச் செய்வார் என்பது எங்களுக்குத் தெரியும்” (2 கொரி 4:8,14). புனித தாமஸ் அக்குவினாஸ் சொல்கிறார், “இயேசுவின் உயிர்ப்பு நம்பிக்கையாளர்களுக்கு மாதிரி படிவத்தை வடிவமைத்து, அவர்களின் உயிர்ப்புக்கே காரணமாகிறது”. வணக்கத்திற்குறிய பேராயர் புல்டன் ஜெ.ஷீன் அவர்கள், “ஆண்டவர் இயேசுவின்  உயிர்ப்புதான் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமாக விளங்குகின்றது” என்கிறார். ஜெர்மானிய இறையியலாளர் புல்ட்மான் கூறுகிறார், “திருவிவிலியப் போதனைகளில் பிரசன்னமாக இருக்கின்ற இயேசுவை நம்புவதே நம்பிக்கைக்கு அர்த்தம் கொடுக்கின்றது. இவ்வாறு உயிர்ப்பின் நம்பிக்கை நம்மை விண்ணக வாழ்விற்கும் இட்டுச் செல்கின்றது.” எல்லாவற்றிற்கும் மேலாக யோவான் 20:19-23 வரையுள்ள பகுதியில் ஒரு அற்புதமான நிகழ்வைப் பார்க்கின்றோம். நாம் இப்போது கொரோனா நோய்க்குப் பயந்து வீட்டிற்குள் இருப்பது போல இயேசு உயிர்த்த நாட்களில் யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தபோது உயிர்த்த இயேசு அவர்களுக்குத் தோன்றினார். “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று வாழ்த்தினர். தம் உயிர்ப்பின் தூய ஆவியை அவர்கள்மேல் ஊதி திடப்படுத்தி நம்பிக்கையூட்டினார். அதைப்போல இந்த உயிர்ப்பின் பாஸ்கா காலத்தில் நம் ஒவ்வொருவருடைய இல்லத்தையும், வீட்டையும் சந்திக்கின்றார். “நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன். அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள். நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பதுபோல வெற்றிபெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்” என்று (திவெளி 3:19-20) வாக்குறுதி தருகின்றார்.

வாக்குமாறாக நம் ஆண்டவர் இயேசுவுக்கு நம் இதயக் கதவைத் திறப்போம் இறைநம்பிக்கையில் வளர்வோம்! நம் உயிர்த்த இயேசு நம் பயணத்தில் உடனிருந்து வழிநடத்துவார். உயிர்ப்பின் தாய் அன்னை மரியா நம் பயணம் வெற்றியாக அமைய தம் திருமகன் உயிர்த்த இயேசுவிடம் பரிந்து மன்றாடுவார். அனைவருக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்!!!

அருள்பணி. அ. சூசைசெல்வராஜ்

பாளையங்கோட்டை மறைமாவட்டம்

13 April 2020, 13:35