தேடுதல்

Vatican News
ஜெர்மனியின் கொலோன் ஆலய மணி ஜெர்மனியின் கொலோன் ஆலய மணி 

ஜெர்மனியில் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆலய மணிகள்

வாழ்வு மீது மரணத்திற்கு எந்த வல்லமையும் கிடையாது என்ற உயிர்ப்புப் பெருவிழாச் செய்தியின் மகிழ்வை, உயிர்ப்பு ஞாயிறன்று ஒலிக்கும் ஆலய மணிகள் வெளிப்படுத்தும்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக் கிருமி அச்சுறுத்தல் காலத்தில் நம்பிக்கையைத் தூண்டும் நோக்கத்தில், ஜெர்மனியில், கத்தோலிக்க, மற்றும், பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் ஆலய மணிகள், புனித வாரத்தில் ஒரே நேரத்தில் ஒலிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 02, இவ்வியாழனன்று, ஜெர்மனியின் கத்தோலிக்க ஆயர் பேரவையும் (Dbk), அந்நாட்டின் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை பேரவையும் (EkD)  இணைந்து வெளியிட்ட அறிக்கையில், அனைத்து கிறிஸ்தவர்களும் தங்கள் ஆலயங்கள் மற்றும், ஆலய மணிகளைச் சுற்றி நிற்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

புனித வாரம் தொடங்கும், ஏப்ரல் 05 குருத்தோலை ஞாயிறு மாலை 7.30 மணிக்கும், ஏப்ரல் 12, உயிர்ப்பு ஞாயிறன்று பகல் 12 மணிக்கும் ஜெர்மனியின் அனைத்து ஆலயங்களின் மணிகள் ஒலிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வு மீது மரணத்திற்கு எந்த வல்லமையும் கிடையாது என்ற உயிர்ப்புப் பெருவிழாச் செய்தியின் மகிழ்வை, உயிர்ப்பு ஞாயிறன்று ஒலிக்கும் ஆலய மணிகள் வெளிப்படுத்தும் என்று கூறும் அவ்வறிக்கை, குறிப்பாக, கோவிட்-19 தொற்றுக் கிருமியின் கொடுமையான காலத்தில், மணிகளின் ஓசை மற்றும், உயிர்ப்பின் மகிழ்வை கிறிஸ்தவர்களாகிய நாம் வெளிப்படுத்த விரும்புகிறோம் என்று கூறியுள்ளது.

ஜெர்மனியின் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் Heinrich Bedford-Strohm அவர்களும், அந்நாட்டின் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை பேரவைத் தலைவர் ஆயர் Georg Bätzing அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில வாரங்களில், ஜெர்மன் கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்திய சாட்சிய வாழ்வுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனை வேளையில், நோயாளிகள் மற்றும், வயதானவர்களுக்கு, தங்கள் வாழ்வையும், சேவையையும் அர்ப்பணித்துள்ள எல்லாருக்கும், அத்தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.(SIR)

04 April 2020, 14:21