பிலிப்பீன்சில் அன்னை மரியா திருவுருவ அலங்கரிப்பு பிலிப்பீன்சில் அன்னை மரியா திருவுருவ அலங்கரிப்பு  

மரியாவின் மாசற்ற இதயத்திற்கு பிலிப்பீன்ஸ் நாடு அர்ப்பணம்

மே 13ம் தேதி சிறப்பிக்கப்படும் பாத்திமா அன்னை மரியா திருநாளையொட்டி, அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு பிலிப்பீன்ஸ் நாட்டை அர்ப்பணிக்க, அந்நாட்டு ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 13ம் தேதி சிறப்பிக்கப்படும் பாத்திமா அன்னை மரியா திருநாளையொட்டி, அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு பிலிப்பீன்ஸ் நாட்டை அர்ப்பணிக்க, அந்நாட்டு ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.

பாத்திமா அன்னை மரியாவின் திருநாளன்று, பிலிப்பீன்ஸ் நாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களிலும், இந்த அர்ப்பணத்தை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர், Romulo Valles அவர்கள் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

2013ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை ஆண்டில், அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு பிலிப்பீன்ஸ் நாடு அர்ப்பணிக்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில், இந்த நெருக்கடியானச் சூழலில், மீண்டும் ஒருமுறை, இந்த அர்ப்பணம் நிகழ்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும், இவ்வெள்ளியன்று துவங்கும் மே மாதம், அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள மாதம் என்பதால், இம்மாதம் முழுவதும், இல்லங்களில் செபமாலை செபிப்பதன் அழகைக் கண்டுணருமாறு அனைத்து கத்தோலிக்கருக்கும் அழைப்பு விடுத்து, ஏப்ரல் 25, கடந்த சனிக்கிழமையன்று மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செபமாலை செபிப்பதற்கு வலைத்தளங்களில் நல்ல வழிமுறைகள் உள்ளன என்று இம்மடலில் கூறியுள்ள திருத்தந்தை, செபமாலையின் முடிவில் அன்னை மரியாவை நோக்கிச் செபிப்பதற்கு உதவியாக இரு செபங்களை தான் வழங்கியுள்ளதாகவும், விசுவாசிகளோடு ஆன்மீக முறையில் இணைந்து தானும் செபமாலையை செபிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மே 1ம் தேதி, இவ்வெள்ளியன்று, இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா ஆகிய நாடுகள் "திருஅவையின் அன்னையாம் மரியா"வுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று, இம்மூன்று நாடுகளின் ஆயர் பேரவைகளும் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2020, 15:06