ஏமன் நாட்டு சானா நகரில் மக்களின் வாழ்வு ஏமன் நாட்டு சானா நகரில் மக்களின் வாழ்வு 

கோவிட்-19: ஏமனில் போர் நிறுத்தத்திற்கு ஆயர் அழைப்பு

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக போர் இடம்பெறும் ஏமனில், கோவிட்-19 கொள்ளை நோய் அச்சுறுத்தல், துன்பங்களை அதிகரிக்கும் என்பதால், அந்நாட்டில் போரிடும் தரப்புகள், போரைக் கைவிடுவதற்கு இதுவே சரியான காலம் - ஐ.நா.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஏற்கனவே போரினால் சிதைக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில், கொரோனா தொற்றுக்கிருமி பரவக்கூடும் என்ற  சூழலில், போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று, தெற்கு அராபிய மற்றும், ஏமன் பகுதியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் பால் ஹின்டர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏமனில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, சவுதி அரேபியாவின் தலைமையில் இயங்கும் படைகளுக்கும், ஆயுதம் ஏந்திய Houthi புரட்சிக் குழுவுக்கும் இடையே போர் இடம்பெற்றுவருவது, பெரும் மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், மூன்று கோடிக்கு அதிகமான மக்களைப் பாதித்துள்ள இந்தப் போரினால், காலரா, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், தொண்டை அழற்சி உட்பட பல நலவாழ்வு பிரச்சனைகளும் உருவாகியுள்ளன என்றுரைத்த ஆயர் ஹின்டர் அவர்கள், இந்நிலையில், இக்கொள்ளை நோய் பரவலை எதிர்கொள்வது மகவும் கடினம் என்று கூறினார்.

ஏமன் நாட்டின் தற்போதைய சூழல் குறித்து வத்திக்கான் செய்தித்துறைக்குப் பேட்டியளித்த ஆயர் ஹின்டர் அவர்கள், எக்காலத்தையும்விட இக்காலத்தில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் அல்லது, போர் நிறுத்தமாவது இடம்பெற வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அழைப்பு

தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் கொண்டவர்களின் மனசாட்சிக்கு இந்த விண்ணப்பத்தை முன்வைப்பதாகத் தெரிவித்த ஆயர், இவர்கள், பொருளாதார ஆதாயத்தை மட்டுமே நோக்காமல், தற்போதைய எதார்த்த நிலைக்குத் திறந்தமனம் கொண்டவர்களாய்ச் செயல்படுமாறு வலியுறுத்தினார்.    

ஆதாயத்தை முன்னிறுத்தி இடம்பெறும் ஆயுத வர்த்தகமே உண்மையான பிரச்சனை என்றும், போரை நிறுத்துவதில் ஆர்வமற்ற மக்களும் உள்ளனர் என்றும், ஆயர் கவலை தெரிவித்தார்.

போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. அழைப்பு

மேலும், கோவிட்-19 கொள்ளை நோய் அச்சுறுத்தல், ஏமனில் துன்பங்களை அதிகரிக்கும் என்பதால், அந்நாட்டில் போரிடும் தரப்புகள், போரைக் கைவிடுவதற்கு இதுவே சரியான காலம் என்று, ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Martin Griffiths அவர்களும் கூறியுள்ளார்.

ஏப்ரல் 16, இவ்வியாழனன்று ஐ.நா. பாதுகாப்பு அவையோடு நடைபெற்ற காணொளி கருத்தரங்கில் இவ்வாறு குறிப்பிட்ட Griffiths அவர்கள், ஏமன் நாட்டினால் ஒரே நேரத்தில் போரையும், கொள்ளை நோயையும் எதிர்கொள்ள முடியாது என்பதை வலியுறுத்தினார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2020, 12:54