தேடுதல்

Vatican News
புனித  திருத்தந்தை 23ம் யோவான் புனித திருத்தந்தை 23ம் யோவான்  

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-16

திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், பேராயராக, திருப்பீடத் தூதராக, கர்தினாலாக, திருத்தந்தையாக திருஅவையில் உயரிய பணிகளை ஆற்றினாலும், மிகவும் புகழ்பெற்ற ஒருவராக விளங்கினாலும், தனது ரொன்காலி குடும்பத்தினர் முன்னேறுவதற்கு எந்த ஓர் உதவியும் செய்தது கிடையாது.

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித திருத்தந்தை 23ம் யோவான் (ஜான்)-3

திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள்,  ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் மட்டுமே, அதாவது 1958ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி முதல், 1963ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி, அவர் இறைவனடி சேர்ந்த நாள்வரை, திருஅவையின் தலைமைப்பணியை (1958–63) ஆற்றினார். இத்திருத்தந்தை, எப்போதுமே எளிமையும் தாழ்ச்சியும் நிறைந்தவராக விளங்கினார். கடவுளில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்தார். இவர், பேராயராக, திருப்பீடத் தூதராக, கர்தினாலாக,  திருத்தந்தையாக திருஅவையில் உயரிய பணிகளை ஆற்றினாலும், மிகவும் புகழ்பெற்ற ஒருவராக விளங்கினாலும், தனது ரொன்காலி குடும்பத்தினர் முன்னேறுவதற்கு எந்த ஓர் உதவியும் செய்தது கிடையாது. இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், தன் சகோதரர் சவேரியோ ரொன்காலிக்கு எழுதிய மடலில், “உலகம், பணம் திரட்டுவதில் மட்டுமே ஆர்வமாக உள்ளது... நான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது நம் குடும்பத்திற்கு பெரும் மதிப்பைக் கொணர்கிறது, ஆயினும், நீங்கள் எப்போதும் தாழ்ச்சியிலும், எளிமையிலும், மதிப்பையோ, சலுகைகளையோ தேடாமலும், திருத்தந்தையோடு தங்களுக்குள்ள உறவில் எந்தவித பொருளாதார சலுகைகளையும் பெறாமல் இருக்குமாறு” வலியுறுத்தியுள்ளார். “ஏழையாகப் பிறந்து, ஏழையாகவே இறைபதம் சேர்ந்த, திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்களின் புனிதத்திற்கு மிக மதிப்புக் கொடுத்த வாழ்வியலை, என் மரண வேளையில் சொல்லப்படும் பேற்றை நானும் பெற விழைகிறேன்” என்றும் திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், தன் சகோதரர் சவேரியோ ரொன்காலிக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டிருந்தார். இத்திருத்தந்தை எழுதி வைத்த மரண உயிலில், தான் சொந்தமாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தில், உயிரோடு வாழ்கின்ற தன் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 20 டாலருக்கும் குறைவான பணத்தையே ஒதுக்கி வைத்திருந்தார்.

யூதர்களுடன் உறவு

இத்தகைய எளிய வாழ்வியலைக் கொண்டிருந்த திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், உரோமன் கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில், ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்த மிகவும் புகழ்பெற்ற திருத்தந்தையருள் ஒருவராகப் பாராட்டப்படுகிறார். இவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றபின், முதல் கட்டமாக இவர் எடுத்த நடவடிக்கைகளில் ஒன்று, 1960ம் ஆண்டில் யூதர்களோடு இருந்த கசப்புணர்வை அகற்றியதாகும். புனித வெள்ளி திருவழிபாட்டில், யூதர்களின் மனமாற்றத்திற்காக என்ற இறைவேண்டலில், யூதர்களை "விசுவாசமற்றவர்கள்" என்று விவரிக்கும் இலத்தீன் சொல்லை இவர் அகற்றினார். திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், திருத்தந்தையாக நிறைவேற்றிய புனித வெள்ளி திருவழிபாட்டில், யூதர்களைக் குறிப்பதற்கு இந்தச் சொல் கூறப்பட்டபோது, இவர் இடைமறித்து அதை நீக்கினார். பல நூறு ஆண்டுகளாக திருஅவையில் நிலவிவந்த, யூதமத விரோதப் போக்கு என்ற பாவத்தைப் பொதுப்படையாக இவர் அறிக்கையிட்டார். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நடந்துகொண்டிருந்தபோது, திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், கர்தினால் அகுஸ்தீன் பெயா அவர்களிடம், யூதர்களோடு ஒப்புரவை உருவாக்கும் பல்வேறு முக்கிய ஆவணங்களை உருவாக்குமாறு பணித்தார்.

இஸ்ரேலுடன் உறவு

திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், 1944ம் ஆண்டுக்குப்பின், இஸ்ரேல் ஒரு நாடாக உருவாக்கப்படுவதற்கு கத்தோலிக்கத் திருஅவையின் ஆதரவை திரட்டுவதில் ஆக்கப்பூர்வமான பங்காற்றினார். யூத மதத்திற்கும், இஸ்ரேல் நாடு உருவாக்கப்படுவதற்கும் திருத்தந்தை அளித்த ஆதரவு, மற்ற மதங்கள் மற்றும், கலாச்சாரங்களுக்கு திறந்த உள்ளம், குறிப்பாக, 2ம் உலகப் போருக்குப்பின் யூதர்களின் நிலை பற்றி அக்கறை கொண்டிருப்பதன் வெளிப்பாடாகும். யூதர்கள், பாலஸ்தீனாவுக்குப் புலம்பெயர்ந்ததை மிகுந்த பரிதாபத்தோடு பார்த்த இவர், அந்நிலையை, ஒரு மனிதாபிமான விவகாரமாக நோக்கினார்.

இரண்டாம் உலகப் போர் துவங்கிய சமயத்தில், பல்கேரியாவில் திருப்பீட பிரதிநிதியாகப் பணியாற்றிய கர்தினால் ரொன்காலி அவர்கள், அந்நாட்டைவிட்டுச் செல்ல விரும்பாமல் அங்கேயே தங்கினார். 1939ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் விடுத்த ஓர் அறிக்கையில்,  போர் சூழும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்று இவர் எழுதினார். உண்மையில், போர் துவங்கியிருந்த சமயத்தில், 1939ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி, இவர் உரோம் நகரில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார். 1940ம் ஆண்டில், இவர் கிரேக்க நாட்டில் அதிக நேரம் செலவழிக்க வேண்டுமென்று வத்திக்கான் கேட்டுக்கொண்டது. எனவே இவர் அவ்வாண்டு சனவரி மற்றும், மே மாதங்களில் கிரேக்க நாட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். கிரேக்க நாட்டை நாத்சிப் படைகள்  ஆக்ரமித்திருந்த சமயத்தில் பல்கேரிய அரசர் 3ம் போரிஸ் அவர்களை இவர் கேட்டுக்கொண்டதன்பேரில், அந்நாட்டிலிருந்த யூதர்கள் வெளியேறினர்.

யூத இனப்படுகொலையின்போது

திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட சமயத்தில், புலம்பெயர்ந்தோரை, குறிப்பாக யூதர்களைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். திருப்பீட தூதரக தபால் வழியாக, பாலஸ்தீனாவுக்குச் செல்வதற்கு அனுமதிச் சான்றிதழ்களை அனுப்பினார். யூதர்களைக் காப்பாற்றுவதற்காக, "வசதிக்காக திருமுழுக்குச் சான்றிதழ்"களை ஐரோப்பாவிலிருந்து அருள்பணியாளர்களுக்கு அனுப்பினார். Jasenovac வதைமுகாமில் வைக்கப்பட்டிருந்த யூதர்களும், ருமேனியாவிலிருந்த யூதர்களும் இவரது முயற்சியால் விடுதலை செய்யப்பட்டனர். இவரது தலையீட்டால், இத்தாலிய யூதர்களை வத்திக்கான் காப்பாற்றியது. இவ்வாறு யூதர்களைக் காப்பாற்ற இவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். 

01 April 2020, 11:10