புனித திருத்தந்தை 6ம் பவுல் புனித திருத்தந்தை 6ம் பவுல் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-19

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவையின் 262வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புனித திருத்தந்தை 6ம் பவுல்-1

20ம் நூற்றாண்டில் கத்தோலிக்கத் திருஅவையை தலைமையேற்று வழி நடத்திய  திருத்தந்தையர்களுள் புனித திருத்தந்தை 23ம் யோவான் அவர்களுக்குப்பின், அப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், புனித திருத்தந்தை ஆறாம் புவுல். “Papa Buono அதாவது நல்ல திருத்தந்தை“ என பரவலாக, பாசமாக அழைக்கப்பட்ட புனித திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி இறைவனோடு ஐக்கியமானார். அவரின் மறைவுக்குப்பின் நடைபெற்ற, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் என்ற கர்தினால்கள் அவையில், 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவையின் 262வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, தனது எண்பதாவது வயதில், அவர் இறைபதம் சேர்ந்த நாள்வரை திருஅவையின் தலைவராகப் பணியாற்றினார்.  

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இவர், பாசமுள்ள அருள்பணியாளார் மற்றும், முற்போக்கு சிந்தனையுடையவர். இவரின் முக்கிய இரு இயல்புகள், இவர், திருத்தந்தையாகவும், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் இறுதி மூன்று அமர்வுகளில் (1962-65) தலைவராகவும் பணியாற்றியதில் தெளிவாகப் புலப்படுகிறது. ஜொவான்னி பத்திஸ்தா என்ரிக்கோ அந்தோனியோ மரிய மொந்தினி என்ற திருமுழுக்குப் பெயரைக் கொண்ட புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், அருள்பணியாளராக, தனது 26வது வயதில் போலந்து நாட்டின் திருப்பீடத் தூதரகத்தில் பணியைத் தொடங்கினார். தனது 40வது வயதில், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களுக்கு, திருப்பீட செயலகத்தில் நேரடிச் செயலராகப் பணியாற்றினார். இவர், அக்காலக் கட்டத்தில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இவர் தன்னை, வத்திக்கானில் பணியாற்றுகின்றவர் என்று நோக்காமல், உண்மையான பணியாளாராகப் பார்த்தார்.   

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை, கத்தோலிக்கத் திருஅவை உலகில் அமைதியைக் கொணர எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும், உலகில் செயல்வடிவம் கொடுக்கும் ஒரு நிறுவனமாகப் பார்த்தார். முதல் உலகப் போர் (28,ஜூலை,1914-நவ.11,1918) நடைபெற்ற சமயத்தில் 1917ம் ஆண்டில், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் (திருத்தந்தையாக1914-22) அவர்கள், "உலக அமைதிக்கு"  ஏழு திட்டங்களை முன்வைத்தார். அவர், நாடுகளுக்கு இடையே காழ்ப்புணர்வை முடிவுக்குக் கொணர, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், ஐ.நா.வில் உரையாற்றுகையில், “உங்கள் நிறுவனத்தின் உன்னத நோக்கத்தை அறிவிப்பதற்கு பல வார்த்தைகள் தேவையில்லை. இலட்சக்கணக்கான மனிதரின் இரத்தம், எண்ணிக்கையில் அடங்காத மற்றும், செவியால் கேட்க முடியாத துன்பங்கள், பயனற்ற கொலைகள், அச்சமூட்டும் அழிவுகள் போன்றவை, உங்களை ஒன்றிணைத்துள்ளன. இனிமேல் போர் வேண்டாம், ஒருபோதும் போர் வேண்டாம். அமைதி. அந்த அமைதி, மக்கள் மற்றும், அனைத்து மனித சமுதாயத்தின் விதியை வழிநடத்தும். உலகின் வரலாற்றை மாற்றும் இந்த உறுதிமொழியோடு ஒன்றிணைந்துள்ளீர்கள்” என்று திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் ஐ.நா.வில் உரையாற்றினார். "இனிமேல் போரே வேண்டாம்! (Jamais la guerre)" என்று இவர் ஐ.நா. வில் எழுப்பிய குரல், இன்றும் தொடர்ந்து நாடுகளை விண்ணப்பித்து வருகிறது.        

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1968ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி கையொப்பமிட்டு, ஜூலை 29ம் தேதி வெளியிட்ட 'Humanae Vitae' அதாவது, 'மனித வாழ்வு' என்ற திருமடல், திருமணமான கத்தோலிக்கர் மற்றும், அருள்பணியாளர் வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1960களில் நிலவிய பாலினப் புரட்சி, மற்றும், கருக்கலைப்பை ஆதரித்து வளர்ந்துவந்த எண்ணங்கள் ஆகியவற்றிற்கு சவால்கள் விடும் வண்ணம், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இத்திருமடல் வழியே மனித உயிரின் மேன்மையை  நிலைநாட்டினார். மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் வளர்ந்துவிடும் என்ற எண்ணத்துடன், கருக்கலைப்பையும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களையும் அமல்படுத்திய பல உலக அரசுகள், இன்று தங்கள் முயற்சிகளிலிருந்து விலகி, மாற்று வழிகளைக் கூறிவருவதைக் காணும்போது, 'மனித வாழ்வு' என்ற திருமடல், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கூறிய பல உண்மைகள் உறுதியாகியுள்ளன. திருஅவை வாழ்வின் மையமாகவும் அடித்தளமாகவும் குடும்பங்கள் இருக்கவேண்டும். குடும்பங்கள் மற்றும், மனிதர்கள் நடுவே நிலவவேண்டிய உன்னதமான பாலியல் உறவுகள் குறித்து, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், தன் திருமடலில் வெளியிட்ட கருத்துக்கள், அவரது காலத்தில் மட்டுமின்றி, நாம் வாழும் இன்றைய உலகிலும், பெரும் விவாதங்களை உருவாக்கி வருகின்றன.

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தை நிறைவு செய்து, அதன் தீர்மானங்கள் செயலுருவம் கொடுப்பதில் முனைப்பாய் இருந்தவர். இவர் ஒரு சீர்திருத்த திருத்தந்தை என அழைக்கப்படுகிறார். இவர், உலகில் அமைதி மற்றும், சமுதாய நீதி தளைக்க, உலகின் பசி மற்றும் எழுத்தறிவின்மையை அகற்ற, ஒரே கடவுளில் அனைவரும் உடன்பிறப்புக்களாக வாழ, பன்னாட்டு அளவில் ஒத்துழைப்பு நிலவ அரும்பாடுபட்டவர். இவரைப் பற்றி விரிவாக அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பார்ப்போம்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2020, 13:26