இலங்கை கல்லறைத் தோட்டம் இலங்கை கல்லறைத் தோட்டம் 

கோவிட்-1ஆல் இறந்தவர் அடக்கத்தை எதிர்த்தால் தண்டனை

பேராயர் அந்தோனி பாப்புசாமி – ஒருவர் எந்த நோயால் இறந்திருந்தாலும், அவர் மாண்புடன் நல்லடக்கம் அல்லது, தகனம் செய்யப்பட வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்றுக் கிருமி தாக்குதலால் இறந்தவர்களை அடக்கம் செய்வதைத் தடுப்போருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க, மாநில அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளதை, தமிழக ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.

ஏப்ரல் 26, இஞ்ஞாயிறன்று, தமிழ்நாடு பொது நலவாழ்வு சட்ட எண் 1939, பிரிவு 74ல் தமிழக அரசு செய்துள்ள மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த, தமிழக ஆயர் பேரவைத் தலைவரான, மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள், ஒருவர் எந்த நோயால் இறந்திருந்தாலும், அவர் மாண்புடன் நல்லடக்கம் அல்லது, தகனம் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவிலேயே இத்தகைய சட்டம் முதன்முதலில் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டியது என்று குறிப்பிட்டுள்ள பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள், இறந்த ஒவ்வொரு மனிதரும், முறையான மற்றும், மாண்புடன்கூடிய இறுதிச் சடங்குகளைப் பெற உரிமையைக் கொண்டுள்ளனர், இந்த உரிமை மறுக்கப்படவே கூடாது என்றும் கூறியுள்ளார்.

மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் அவர்களை அடக்கம் செய்வதை எதிர்த்த நடவடிக்கையில் கத்தோலிக்கர் யாரும் ஈடுபடவில்லை என்றும், அப்பகுதியில் இருந்த வேறு சிலரே அதனை எதிர்த்துள்ளனர் என்றும் கூறிய மதுரை பேராயர், இந்த மருத்துவரின் அடக்கம், பங்குக் கல்லறையில் இடம்பெறாதது குறித்து திருஅவை அதிகாரிகளும், பங்கு மக்களும் கவலையடைந்தனர் என்றும் கூறினார்.

தலத்திருஅவை அதிகாரிகள் அனுமதியளித்திருந்ததையும் விடுத்து, இத்தொற்றுக் கிருமியால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் அவர்களை, அவரது கத்தோலிக்கப் பங்கு கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. 

கொரோனா தொற்றால் இறந்தவர்களை தங்கள் பகுதியில் அடக்கம் செய்தால், அது அப்பகுதியை மாசுபடுத்தும் மற்றும், அந்நோய்க் கிருமி தொற்றிவிடும் என்ற அச்சத்தால், தமிழகத்தில் கொரோனா  தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்தியா முழுவதும் அனைத்து தரப்பினரும் இச்செயலுக்கு, கடும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு இது போன்ற நிகழ்வுகள், இனிமேல் நடக்காமல் இருக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்ததன. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு, அவசர சட்டம் இயற்றி உள்ளது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சட்டத்தின்படி, தொற்று நோயால் இறந்தவர்களின் உடல்களை, மாண்புடன் அடக்கம் அல்லது தகனம் செய்வதை தடுப்பது, தடுக்க முயற்சிப்பது, தமிழ்நாடு பொது நலவாழ்வு சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு செயல்படுவோருக்கு, தமிழ்நாடு பொது நலவாழ்வு சட்டம், 1939, பிரிவு - -74ன் படி, அபராதம் உட்பட, குறைந்தபட்சம் ஓராண்டு, அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை, சிறைத் தண்டனை விதிக்கப்படும். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 April 2020, 13:54