பெண்கள் உலக நாளையொட்டி, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஊர்வலம் பெண்கள் உலக நாளையொட்டி, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஊர்வலம் 

பாலின சமத்துவம் எல்லாருக்கும் நன்மை விளைவிக்கும்

2019ம் ஆண்டில் திருப்பீடம் மற்றும், வத்திக்கானில் பணியாற்றிய 4,618 பேரில் 1016 பேர் பெண்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், 2019ம் ஆண்டில் அவ்வெண்ணிக்கை 1016 ஆக இருந்தது என்றும் வத்திக்கான் செய்திகள் கூறுகின்றன.

மார்ச் 08, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் பெண்கள் உலக நாளையொட்டி, வத்திக்கானில் பெண் பணியாளர்கள் பற்றிய ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ள வத்திக்கான் செய்திகள், வத்திக்கான் பணியாளர்களில் 22 விழுக்காடு பெண்கள் என்றும் கூறியுள்ளது.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தலைமைப்பணிக் காலத்தில், 2010ம் ஆண்டில், வத்திக்கானில் பணியாற்றிய 4,053 பேரில் 697 பேர் பெண்கள் என்றும், 2019ம் ஆண்டில் திருப்பீடம் மற்றும், வத்திக்கானில் பணியாற்றிய 4,618 பேரில், 1016 பேர் பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாலின சமத்துவம்

மேலும், மார்ச் 06, இவ்வெள்ளியன்று ஐ.நா. நிறுவனத்தில் சிறப்பிக்கப்பட்ட பெண்கள் உலக நாள் நிகழ்வில் உரையாற்றிய, ஐ.நா. பெண்கள் அமைப்பின் செயல்திட்ட இயக்குனர் Phumzile Mlambo-Ngcuka அவர்கள், பாலின சமத்துவம் வழங்கப்படுவதன் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார்.

பாலின சமத்துவம் வழங்கப்படுவது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மட்டுமல்லாமல், நியாயமான உலகால் வாழ்வு மாற்றப்படும் அனைவருக்குமே நன்மைபயக்கும் என்று கூறினார், Mlambo-Ngcuka.

தற்போது பாலின சமத்துவ உலகை நாம் கொண்டிருக்கவில்லை என்றும், பெண்கள் தங்களின் வருங்காலம் குறித்து மிகவும் கோபம் கொண்டுள்ளனர் என்றும், Mlambo-Ngcuka அவர்கள் கூறினார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2020, 15:40