வியட்நாம் தலைநகர் கடை ஒன்றில் வியட்நாம் தலைநகர் கடை ஒன்றில் 

கொரோனா நோயாளிகளுடன் திருப்பீடம் ஒருமைப்பாடு

கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்கள் உள்ள குடும்பங்கள், குறிப்பாக, பொருளாதார வளங்கள் மற்றும், சமுதாய உதவிகள் குறைவாகக் கிடைக்கும் இடங்களிலுள்ள குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படுமாறு திருப்பீடம் வலியுறுத்தல்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனிதரின் வாழ்வு, கடவுளின் கண்களில் மிகுந்த மதிப்பைக் கொண்டுள்ளது, சில சூழல்களில், உடல்நலமின்மை மற்றும், வாழ்வாலேயே பாதிக்கப்பட்டாலும், எச்சூழலிலும் நோய் என்ற பகைவனின்முன் தனிமையை உணரக் கூடாது என்று, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை கூறியுள்ளது.

உலகில், கொரோனா தொற்றுக்கிருமி Covid-19 உருவாக்கியுள்ள அச்சுறுத்தல் குறித்து செய்தி வெளியிட்டுள்ள இத்திருப்பீட அவை, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு குறித்த மேய்ப்புப்பணியை, திருத்தந்தை  தன்னிடம் ஒப்படைத்துள்ளார் எனவும், Covid-19 தொற்று நோயால் தாக்கப்பட்டுள்ளவர்களுடன் ஒருமைப்பாட்டையும், செபங்களையும் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.

இந்நோய் குறித்த அறிவியல் ஆய்வுகள் மற்றும், அந்நோயாளிகளுக்குச் சிகிச்சைகள் வழங்குவதற்கு, கடவுள் தங்களுக்குத் தந்துள்ள அறிவையும் சக்தியையும், மிகுந்த அர்ப்பணம் மற்றும், மனத்தாராளத்துடன் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திவரும் அறிவியல் ஆய்வாளர்கள், மருத்துவர்கள், செவிலியர், மற்றும், மீட்புப்பணியாளர் ஆகிய எல்லாருக்கும், இத்திருப்பீட அவை நன்றி தெரிவித்துள்ளது.

ஒவ்வொருவரும் அவரவர் கடைமையை..

அன்பான தந்தையாக, நம் ஒவ்வொருவரையும் கவனித்துவரும் கடவுளின் பராமரிப்பு உள்ளது என்பதில் உறுதியாயிருந்து, ஒவ்வொருவரும் அவரவர் கடமையை ஆற்றுமாறு அழைப்பு விடுத்துள்ள, அத்திருப்பீட அவை, கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும், அவர்களுக்கு உதவுகின்றவர்கள் எல்லாருடனும் திருஅவை மிக நெருக்கமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

குடும்பங்கள்

கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்களைக் கொண்டிருக்கும் குடும்பங்கள், குறிப்பாக, பொருளாதார வளங்கள் மற்றும், சமுதாய உதவிகள் குறைவாகக் கிடைக்கும் இடங்களில் வாழ்கின்ற குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படுமாறும், இத்திருப்பீட அவை வலியுறுத்தியுள்ளது.

இத்தொற்றுக் கிருமியால் உலகப் பொருளாதாரம் சரிவுகண்டுள்ள நிலையில், வேலைகளை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றவர்களுக்கும் உதவிகளுக்காக அழைப்பு விடுத்துள்ளது, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2020, 15:31