தேடுதல்

இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வை சித்திரிக்கும் 16ம் நூற்றாண்டு ஓவியம் இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வை சித்திரிக்கும் 16ம் நூற்றாண்டு ஓவியம் 

தவக்காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

மனிதவாழ்வில், நலிவுறும் நேரங்களும், மகிமையில் ஒளிர்விடும் நேரங்களும், மாறி மாறி வருவதை, தவக்காலத்தின் முதலிரு ஞாயிறுகளும் நமக்கு உணர்த்துகின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

தவக்காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு, பாலைநிலத்தில், சோதனைக்குள்ளாகும் நிகழ்வையும், இரண்டாவது ஞாயிறன்று, அவர், மலைமீது, தோற்றமாற்றம் பெறும் நிகழ்வையும் சிந்திக்க தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். உடல் நலிவுற்று, தனிமையில் போராடிக்கொண்டிருந்த இயேசுவை, கடந்த வாரம் சந்தித்த நாம், இந்த வாரம், விண்ணக மகிமையில் ஒளிர்விடும் இயேசுவைச் சந்திக்கிறோம். மனிதவாழ்வில், நலிவுறும் நேரங்களும், மகிமையில் ஒளிர்விடும் நேரங்களும், மாறி மாறி வருவதை, தவக்காலத்தின் முதலிரு ஞாயிறுகளும் நமக்கு உணர்த்துகின்றன. நாம் ஒவ்வொருவரும், நலிவுறும் நேரங்களையும், மகிமை பெறும் நேரங்களையும் தகுந்த கண்ணோட்டத்துடன் புரிந்துகொள்வது பயனளிக்கும்.

‘நலிவுறுதல்’, ‘மகிமை பெறுதல்’ என்ற இரு மனித நிலைகளைச் சிந்திக்க, இஞ்ஞாயிறு, கூடுதலாக, இரு காரணங்கள் உள்ளன. நாம், எவ்வளவுதான் மகிமை பெற்றதாக எண்ணிக்கொண்டிருந்தாலும், அடிப்படையில், நாம் நலிவுற்றவர்கள் என்பதை, உலகெங்கும் பரவியிருக்கும் COVID-19 தொற்றுக்கிருமி, நமக்கு உணர்த்தி வருகிறது என்பது, முதல் காரணம். இரண்டாவது காரணம், மார்ச் 8, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக மகளிர் நாள். நலிவுற்றவர்கள் எனக் கருதப்படும் பெண்கள், அவர்களுக்கு உரிய, உண்மையான மகிமையைப் பெறுவதற்குத் தேவையானச் சூழலை, மனித சமுதாயம் உருவாக்கினால், இவ்வுலகம், உண்மையில் உருமாற்றமடையும். இந்த இரு உண்மைகளைப் புரிந்துகொள்ள, இந்த ஞாயிறு வழிபாடு நமக்கு உதவட்டும்.

ஒவ்வோர் ஆண்டும், உலக மகளிர் நாள் நெருங்கும் வேளையில், ஊடகங்களும், உலக நிறுவனங்களும், பெண்களைப்பற்றிய கட்டுரைகளையும், நிகழ்ச்சிகளையும் வழங்கிவருகின்றன. ஐ.நா.அவையின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப், "இளம்பெண்களின் ஒரு புதிய யுகம்: 25 ஆண்டுகளின் முன்னேற்றம் குறித்து ஓர் ஆய்வு" என்ற தலைப்பில், மார்ச் 3, கடந்த செவ்வாயன்று, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

1995ம் ஆண்டு, சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற நான்காவது பெண்கள் உலக மாநாடு நிறைவுபெற்று, 25 ஆண்டுகள் சென்றபின்னரும், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகள் உலகெங்கும் பரவியுள்ளன என்பதோடு, இவ்வன்முறைகளை, கொடுமை என்று கண்டனம் செய்யாமல், இவை, மனித வாழ்வின் எதார்த்தம் என்று சமாதானம் சொல்லி, மௌனம் காக்கும் மனநிலை, மக்கள் நடுவே உருவாகியுள்ளது என்று இவ்வறிக்கை கூறுகிறது.

2016ம் ஆண்டு, நிகழ்ந்த மனிதவர்த்தகம் என்ற கொடுமைக்கு உள்ளானவர்களில், 70 விழுக்காட்டினர், பெண்களும், சிறுமிகளும் என்பதும், 15 வயதுக்கும், 19 வயதுக்கும் உட்பட்ட பெண்களில், 20ல் ஒருவர், பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதும், யூனிசெஃப் அறிக்கையில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்.

கல்வி கற்பதற்கு பெண்களை ஊக்கப்படுத்தும் போக்கு வளர்ந்திருந்தாலும், பெண்கள், தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி, பொதுவாழ்வில் காலடி எடுத்துவைக்கும் வேளையில், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க, சமுதாயம் தவறிவிட்டது என்று, யூனிசெஃப் இயக்குனர் ஹென்றியேட்டா ஃபோரே (Henrietta Fore) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்விக்கூடங்களில் மட்டுமல்லாமல், குடும்பங்களிலும், பெண்கள், பலவழிகளில், வன்முறைகளைச் சந்திக்கின்றனர் என்றும், ஒவ்வோர் ஆண்டும், 1 கோடியே, 20 இலட்சம் பெண் குழந்தைகளுக்கு திருமணம், 40 இலட்சம் பெண்களுக்கு பிறப்புறுப்பு சிதைவு போன்ற கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன என்றும், யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

அனைத்து வகையான வன்முறைகளிலிருந்து பெண்கள் விடுதலை அடைவதும், அவர்கள் தங்கள் உரிமைகளை, சுதந்திரமாகப் பயன்படுத்துவதும், சமுதாயத்தில் சம வாய்ப்புக்கள் பெறுவதும், பெண்களின் மகிமையை நிலைநிறுத்தும் அளவுகோல்கள். பெண்கள், சுதந்திரம், சம உரிமை ஆகிய மகிமைகளைப் பெறுவதற்கு, மனித சமுதாயத்தில் பெரும் மாற்றங்கள் நிகழவேண்டும்.

தவக்காலத்தின் உயிர்நாடியாக விளங்கும், மாற்றம், மனமாற்றம், உருமாற்றம் என்ற எண்ணங்களை அசைபோட, இந்த ஞாயிறு வாசகங்கள், நமக்கு அழைப்பு விடுக்கின்றன. உருக்குலைந்த இயேசுவை, சென்ற ஞாயிறு சந்தித்த நாம், உருமாறிய இயேசுவை, இந்த ஞாயிறு சந்திக்கிறோம். பாலை நிலத்தில், நாற்பது நாள் கடுந்தவம் மேற்கொண்ட இயேசு, உருகுலைந்திருந்த நேரத்தில், அவர், எவ்விதம் தன்னையே எளிதாக, விரைவாக, உருமாற்றிக்கொள்ள முடியும் என்ற குறுக்கு வழிகளை, சாத்தான் சொல்லித்தந்தது.

அந்த குறுக்கு வழிகளை ஏற்றுக்கொள்ளாத இயேசு, பாடுகள், மரணம் என்ற வேதனை நிறைந்த வழியில் தான் மாற்றம் பெறப்போவதாக தன் சீடர்களுக்கு சொல்கிறார். இயேசுவின் இந்தக் கூற்று, மத்தேயு நற்செய்தி 16ம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூற்றினால், அதிர்ச்சியடைந்து, மனம்தளர்ந்து போயிருந்த சீடர்களில் மூவருக்கு, உறுதி வழங்கும் வகையில் நிகழும் இயேசுவின் தோற்றமாற்றம், மத்தேயு நற்செய்தி, 17ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வு, நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ள இஞ்ஞாயிறன்று, தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகமும், (தொடக்கநூல் 12 : 1-4) மாற்றத்தைப்பற்றி கூறுகிறது. தனக்குப் பழக்கமான ஓர் இடத்தைவிட்டு, பழக்கமில்லாத இடத்திற்குச் செல்லவேண்டிய மாற்றத்தை ஏற்க, ஆபிரகாம் அழைக்கப்பட்டார். இளவயதில், மாற்றங்களை சந்திப்பது, எளிதாக இருக்கும்; வயது முதிர்ந்த காலத்தில், மாற்றங்கள் வரும்போது, அவற்றை ஏற்பதற்கு, பெரும் தயக்கம் உருவாகும். தான் பிறந்துவளர்ந்த ஊரைவிட்டு, வேறோர் ஊருக்குச்செல்ல, ஆபிரகாம் அழைக்கப்பட்ட வேளையில், அவருக்கு வயது 75. (தொ.நூ. 12:4) அந்த வயதில் ஒருவரால் பழக்கப்பட்ட இடங்களைவிட்டு, புதிய நாட்டிற்குப் போகமுடியுமா? வயது முதிர்ந்த காலத்தில் புதிய இடங்களுக்குச் செல்லவேண்டிய நிலை, இன்றைய உலகில் பலர் சந்திக்கும் சிக்கல்.

ஒவ்வொரு நாட்டிலும், பிறந்த ஊரைவிட்டு, பிற நகரங்களிலும், தாய் மண்ணை விட்டு, பிற நாடுகளிலும் வாழவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படும் பெற்றோரை எண்ணிப்பார்ப்போம். இவர்கள் அனைவரையும் நமது வேண்டுதல்களில் ஏந்தி வருவோம்.

ஆபிரகாமுக்கு இறைவன் இந்த அழைப்பைத் தந்தபோது, கூடவே தன் முழுமையான அசீரையும் தருவதாக, இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். அது மட்டுமல்ல, ஆபிரகாமே ஓர் ஆசியாக மாறுவார் என்றும் இறைவன் வாக்களிக்கிறார். (தொ.நூ. 12:2) வயது முதிர்ந்த காலத்தில் பழக்கப்பட்டச் சூழல்களை விட்டு, புதியச் சூழல்களுக்குச் செல்லும் பெற்றோர், ஆபிரகாமைப்போல், இறையாசீரைச் சுமந்துசெல்லவும், அதன் வழியாக, இறையாசீராகவே இவர்கள் மாறவும் வேண்டுமென செபிப்போம்.

இன்றைய நற்செய்தி கூறும் இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வை, பல கோணங்களில் நாம் சிந்திக்கலாம். இந்நிகழ்வைக் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ள அருள்பணி John Eckert என்பவர் கூறும் ஒரு சில கருத்துக்கள், நம்மை, சிந்திக்கத் தூண்டுகின்றன.

நாம், இயேசுவின் ஒளிமயமான தோற்றமாற்றத்தைக் காணவேண்டுமெனில், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரைப்போல, நம்மையும், இயேசு, நம் வழக்கமான வாழ்வுச் சூழலிலிருந்து, மாறியதொரு சூழலுக்கு அழைத்துச்செல்ல அவரை அனுமதிக்கவேண்டும்.

சூழலைப்பற்றிப் பேசும்போது, சென்ற வாரமும், இந்த வாரமும் மலைப்பகுதி என்ற கருத்து நற்செய்தியில் பதிவாகியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும். அதிலும், இவ்விரு மலைப்பகுதிகள், மத்தேயு நற்செய்தியில், ஒரு சிறு மாற்றத்துடன், பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இந்த வாரம், இயேசு, தன் மூன்று சீடர்களை, "ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்" (மத். 17:1) என்று வாசிக்கிறோம். சென்ற வாரம், அலகை, இயேசுவை, 'மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டியதாக' (காண்க. மத். 4:8) வாசித்தோம். அலகை இயேசுவைக் கூட்டிச்சென்றது, 'மிக உயர்ந்த ஒரு மலை'. இயேசு தன் சீடரை கூட்டிச் சென்றது, 'உயர்ந்த மலை'. 'மிக' என்ற ஒரே ஒரு சிறிய சொல், இவ்விரு சூழல்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. அலகை மேற்கொள்ளும் முயற்சிகள், மிகைபடுத்தப்பட்ட, எல்லைகடந்த வழியில், நம் வாழ்வைப் பாதிக்கும் என்பதை, 'மிக' என்ற சொல், சுட்டிக்காட்டுகிறது.

இதற்கு மாறாக, இயேசுவோ, உண்மையான, உயர்ந்த மலைக்கு நம் அனைவரையும் அழைத்துச் செல்லவும், அங்கு, தன் ஒளிமிகுந்த பிரசன்னத்தைக் காட்டவும் விழைகிறார்.

தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் செபம், தவம், தர்மம் என்ற அனைத்துச் செயல்களும், எல்லை கடந்ததாய் இருக்க வேண்டும், அதுவும், பலர் காண அமையவேண்டும் என்று விரும்பாமல், நம் தினசரி கடமைகளையே இன்னும் பொருளுள்ள முறையில், இன்னும் கூடுதல் கவனத்துடனும், கனிவுடனும் மேற்கொண்டால், அங்கு இயேசுவின் ஒளிமிகுந்த பிரசன்னத்தைக் காணலாம்.

மலை என்பது, இறைவன் வாழும் இடம் என்பதை, இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திருந்தது போல், இயேசுவும் உணர்ந்திருந்தார். அன்று, தன் சீடர்களுடன் மலைக்குச் சென்றதும், இறைவனின் பிரசன்னமும், அன்பும், தன்னைச் சூழ்ந்ததை இயேசு உணர்ந்திருக்கவேண்டும். அந்த உணர்வே, அவரை, தோற்றமாற்றமடையச் செய்திருக்கவேண்டும். இந்நிகழ்வின் உச்சக்கட்டத்தில், இயேசு, தந்தையின் அன்புக்குரிய மகன் என்று புகழப்படுகிறார்.

சீடர்கள் கண்முன் நடந்த இந்த உன்னதமான, உச்சக்கட்ட பூரிப்பிலேயே அனைவரும் தங்கிவிடலாம் என்று, பேதுரு ஆலோசனை சொல்கிறார். கடவுளின் அன்பு, நம்மில் உருவாக்கும் மாற்றங்கள், நமக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனிச்சொத்து என்று கருதி, அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கிவிட முடியாது. மீண்டும் மலையைவிட்டு இறங்கவேண்டும்; அதுமட்டுமல்ல, மற்றொரு மலைமேல் இறக்கவேண்டும் என்பதையும், இயேசு, தன் சீடர்களுக்கு நினைவுபடுத்துகிறார். இறையன்பைச் சுவைப்பது, பணிவாழ்வுக்கும், தியாகத்திற்கும் இட்டுச்செல்லவேண்டும். இல்லையெனில், அவ்வன்புக்கு அர்த்தம் இருக்காது என்பதை, இயேசு தெளிவாக்குகிறார்.

தவக்காலத்தின் இந்த இரண்டாம் ஞாயிறன்று ஆபிரகாமின் வாழ்வில் மாற்றங்களை நிகழ்த்த இறைவன் கொடுத்த அழைப்பையும், இயேசுவின் தோற்றமாற்றத்தையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நம் மனதில் எழும் ஒரு சில வேண்டுதல்களோடு நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:

COVID-19 தொற்றுக்கிருமியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும், இறைவனின் அருளால் தங்கள் நலிவுற்ற நிலையிலிருந்து மாற்றம் பெற்று, முழுமையாக நலமடையவேண்டும் என்று செபிப்போம்.

உலகெங்கும் வாழும் மகளிர், வேதனைச் சிறைகளிலிருந்து விடுதலையடைந்து, பாதுகாப்புடனும், சம உரிமைகளுடனும் வாழ்வதற்குகந்த ஓர் உலகை உருவாக்கும் மனமாற்றத்தை, இறைவன், நம் அனைவருக்கும் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

75 வயதில் தன் நாட்டைவிட்டு, வேறு நாட்டிற்கு அழைக்கப்பட்ட ஆபிரகாம், இறையாசீரைச் சுமந்து சென்றதுபோல், இறை அசீராகவே மாறியதுபோல், தங்கள் சூழ்நிலைகளை மாற்றவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் வயதான பெற்றோர், ஆபிரகாமைப் போல், செல்லும் இடமெல்லாம் இறையாசீரைச் சுமந்து செல்பவர்களாக மாற, அவர்களுக்காகச் செபிப்போம்.

ஒவ்வொரு மாற்றமும் நமக்குள் இருந்து உருவாகவேண்டும், ஆழ்ந்த அன்பு கொண்டால், அனைத்தும் மாறும், இறையன்பு, வெறும் உணர்வாக இல்லாமல், நம் வாழ்வில் செயலாக மாறவேண்டும் என்று, இயேசுவின் தோற்றமாற்றம் நமக்குச் சொல்லித்தரும் பல பாடங்களை, இத்தவக்காலத்தில் நாம் கற்றுக்கொள்ள, ஒருவர் ஒருவருக்காகச் செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2020, 14:35