சிரியா நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பம் சிரியா நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பம் 

புலம்பெயர்ந்தோர்க்கு உதவுமாறு ஸ்காண்டிநேவிய சபைகள்

ஐ.நா. பாதுகாப்பு அவை, சிரியாவின் விவகாரம் பற்றி விவாதிக்க, கடந்த ஒன்பது ஆண்டுகளாக, 222 மணி நேரங்கள் சந்தித்துள்ளது, இந்த விவாதம் நடந்த ஒவ்வொரு மணி நேரமும் 27,385 சிரியா நாட்டினர் புலம்பெயர்ந்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வன்முறை மற்றும், போர்களுக்கு அஞ்சி தங்கள் சொந்த இடங்களைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயரும் மக்களுக்கு உதவுமாறு, ஸ்காண்டிநேவிய கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை வலியுறுத்தியுள்ளனர்.

டென்மார்க், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, மற்றும், சுவீடன் ஆகிய ஸ்காண்டிநேவிய நாடுகளின், கத்தோலிக்க மற்றும், லூத்தரன் கிறிஸ்தவ சபைகளின் ஆயர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்திடம், புலம்பெயர்ந்த மக்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புகலிடம் தேடுவது மனித உரிமை என்றும், அடக்குமுறை மற்றும், சித்ரவதைகளுக்கு அஞ்சி புகலிடம் தேடும் மக்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் சட்டமுறைப்படியும், அறநெறிப்படியும் தார்மீகக் கடமையைக் கொண்டுள்ளது என்றும், அவ்வறிக்கை கூறுகிறது.     

ஐரோப்பாவின் அரசியல், கலாச்சார மற்றும், பொருளாதாரப் பிரச்சனைகளை அறிந்திருக்கின்ற அதேநேரம், ஐரோப்பாவில் நுழைவதற்கு, துருக்கி மற்றும், கிரீஸ் நாடுகளின் எல்லைகளில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர், குறிப்பாக சிரியா நாட்டினர் காத்திருப்பது பற்றியும், ஸ்காண்டிநேவிய நாடுகளின் கிறிஸ்தவத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம், ஓர் அமைதித் திட்டத்தைக் கொண்டிருக்கின்றது, இத்திட்டம் தொடரப்பட வேண்டும், ஐரோப்பாவிற்கு முக்கிய ஆபத்து, ஆயிரக்கணக்கான புலம்பெயருந்தோரால் வருவது அல்ல, மாறாக, மனித மாண்பு, பொதுவான மனித சமுதாயம் என்ற உணர்வு போன்ற உலகளாவிய விழுமியங்கள் இழக்கப்படுவதாலே ஏற்படுகின்றது என்பதை, கத்தோலிக்க மற்றும், லூத்தரன் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்.

ஐ.நா. பாதுகாப்பு அவை, சிரியாவின் விவகாரம் பற்றி விவாதிக்க, கடந்த ஒன்பது ஆண்டுகளாக, 222 மணி நேரங்கள் சந்தித்துள்ளது, இந்த விவாதம் நடந்த ஒவ்வொரு மணி நேரமும் 27,385 சிரியா மக்கள் தங்கள் வாழ்வைப் பாதுகாக்க புலம்பெயர்ந்தனர், ஏறத்தாழ பத்து ஆண்டுகளில், இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், உடல் உறுப்புக்களை இழந்தனர் மற்றும், புலம்பெயர்ந்தனர், இந்நிலை உலக சக்திகளின் செயலற்ற தன்மையைக் காட்டுகின்றது என்றும், அத்தலைவர்கள் கூறியுள்ளனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2020, 15:48