தேடுதல்

Vatican News
முழு கதவடைப்பால் குடிபெயரும் மக்கள் முழு கதவடைப்பால் குடிபெயரும் மக்கள்   (AFP or licensors)

குடிபெயரும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களுடன் உதவி

வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு குடியேறி, தற்போதுள்ள சூழ்நிலையால், வேலை இழந்து தவிக்கும் கிராமப்புற மக்களுக்குத் தேவையான உதவிகளை இந்திய திருஅவை அதிகரித்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

எப்போதும் ஏழைகளோடு பணியாற்றிவரும் திருஅவை, தற்போது, கொரோனா தொற்றுக்கிருமி காரணமாக அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், தன் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அறிவிக்கிறது, இந்திய தலத்திருஅவை.

ஒவ்வொரு பகுதியிலும் வாழ்கின்ற ஏழை மக்கள் குறித்து அறிந்து, அவர்களுடனேயே பணியாற்றிவரும் திருஅவையின் அடிப்படை கிறிஸ்தவ சமுதாயக் குழுக்கள் வழியாக திருஅவையின் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார், இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர், பேராயர் பிலிக்ஸ் மச்சாடோ .

வேலை தேடி நகர்ப்புறங்களில் குடியேறி, தற்போதுள்ள சூழ்நிலையால், வேலை இழந்து தவிக்கும் கிராமப்புற மக்களுக்குரிய உதவிகளை, இந்திய திருஅவை அதிகரித்துள்ளதாக உரைத்த பேராயர், புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர், மற்றும், தலித் மக்களிடையே திரு அவையின் பணிகள் தடங்கலின்றி தொடர்வதாகத் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கிருமி பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், இந்தியா முழுவதும் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மக்கள் வேலை இழந்து தங்கள் ஊர்களுக்கு நடந்தே செல்லும் கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இத்தகைய ஒரு சூழலில், குடிபெயரும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும், அடிப்படை தேவைகளையும் வழங்கி, அவர்களுக்கு உதவி வருகின்றன திரு அவையின் பல மறைமாவட்ட குழுக்கள் (AsiaNews)

31 March 2020, 14:42