கொழும்புவின் உலக வர்த்தக மைய வாயிலில் சோதனையில் ஈடுபட்டுள்ள  அதிகாரிகள் கொழும்புவின் உலக வர்த்தக மைய வாயிலில் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் 

புலம்பெயர்ந்த இலங்கை மக்களுக்காக செபம்

கோவிட்-19 தொற்றுக்கிருமி நோயாளிகள் எவரையும் ஒதுக்காமல், அவர்களின் குடும்பங்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு செபியுங்கள். இத்தாலி, தென் கொரியா, மத்திய கிழக்கு, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை மக்களை சிறப்பாக நினைத்துச் செபிக்கின்றோம்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடுமையான மற்றும், தீவிரமான நடவடிக்கைகள், நல்லதாக எப்போதும் இருக்காது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என்று, மார்ச் 13, இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரையில் எச்சரித்ததையடுத்து, உரோம் மறைமாவட்டம், ஆலயங்களைத் திறந்து வைக்குமாறு  மீண்டும் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கிருமி அச்சுறுத்தலை முன்னிட்டு, இத்தாலிய அரசு அதிகாரிகளின் வழிமுறைகளை மதிக்கும் விதமாக, மார்ச் 12, இவ்வியாழனன்று, உரோம் நகரிலுள்ள அனைத்து ஆலயங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆயினும், திருத்தந்தை மறையுரையில் கூறியதையடுத்து,  மார்ச் 13, இவ்வெள்ளியன்று அறிக்கை வெளியிட்ட, உரோம் மறைமாவட்டத்திற்கு, திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்சலோ தெ தொனத்திஸ் அவர்கள், ஆலயங்களைத் திறந்து வைக்கும் தீர்மானத்தை, ஒவ்வோர் ஆலயத்தின் மேய்ப்பரின் மனச்சான்று மற்றும், பொறுப்புணர்வுக்கு விட்டுவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியை முன்னிட்டு, உலகின் பல பகுதிகளில், திருப்பலிகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் செபம்

கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ள எல்லாருக்காகவும், குறிப்பாக, வெளிநாடுகளில், இந்நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கை புலம்பெயர்ந்தோர் மற்றும், மாணவர்களுக்காகச் சிறப்பாக செபிப்பதாக, இலங்கை ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுத் தலைவர், ஆயர் ரெய்மன்ட் விக்ரமசிங்கே அவர்கள் கூறியுள்ளார்.

கோவிட்-19 தொற்றுக்கிருமி நோயாளிகள் எவரையும் ஒதுக்காமல், அவர்களின் குடும்பங்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு செபிக்குமாறும், இத்தாலி, தென் கொரியா, மத்திய கிழக்கு, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை மக்களை சிறப்பாக நினைத்து செபிப்பதாகவும், ஆயர் விக்ரமசிங்கே அவர்கள் ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்.

இலங்கையில் வருகிற ஏப்ரல் 20ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2020, 15:48