டெல்லி வன்முறைக்கு எதிராக பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் டெல்லி வன்முறைக்கு எதிராக பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் 

டில்லி வன்முறை குறித்து, பாகிஸ்தான் ஆயர்கள் கண்டனம்

இந்தியாவில் வாழும் இஸ்லாமியருக்காகவும், அந்நாட்டில் அமைதி நிலவும்படியாகவும், பாகிஸ்தானில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும், மார்ச் 6ம் தேதி, சிறப்பு உண்ணா நோன்பும், செபங்களும் மேற்கொள்ளுமாறு, ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அண்மையில் டில்லியில் நடைபெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து, இந்திய நடுவண் அரசு மக்கள் அனைவரையும் காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, பாகிஸ்தான் கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களும், அந்நாட்டு ஆயர் பேரவையின் உறுப்பினர்களும் இந்திய நடுவண் அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியாவில் வாழும் இஸ்லாமியருக்காகவும், அந்நாட்டில் அமைதி நிலவும்படியாகவும், பாகிஸ்தானில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும், மார்ச் 6 இவ்வெள்ளியன்று, சிறப்பு உண்ணா நோன்பும் செபங்களும் மேற்கொள்ளுமாறு, கராச்சி உயர் மறைமாவட்டத்தின் பேராயரான கர்தினால் கூட்ஸ் அவர்களும், பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழுவின் உறுப்பினர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இஸ்லாமியரைக் குறிவைத்து, இந்திய நடுவண் அரசு மேற்கொண்டுள்ள எதிர்மறை நடவடிக்கைகளின் மத்தியில், பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான் அவர்கள், தன் நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையினரும் காக்கப்படுவர் என்றும், அவர்களுக்கு தீங்கு விளைவிப்போர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றும் தன் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதற்கு, பாகிஸ்தான் ஆயர்கள் தங்கள் பாராட்டைத் தெரிவித்துள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

டில்லியில் நடைபெற்ற வன்முறையில், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்ய, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் சில இந்துக்கள் முன்வந்திருப்பதற்கு, கர்தினால் கூட்ஸ் அவர்கள், சிறப்பான முறையில், தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2020, 15:23