இத்தாலியின் அசிசி நகரம் இத்தாலியின் அசிசி நகரம் 

அசிசியில் ஆலய மணிகள் தினமும் மும்முறை ஒலிக்கின்றன

இத்தாலியின் பாதுகாவலரான அசிசி நகர் புனித பிரான்சிஸ், மற்றும் புனித கிளாரா ஆகியோரின் பரிந்துரையால், இவ்வுலகம் சந்தித்துவரும் இந்த நெருக்கடி, விரைவில் நீங்கவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், இத்தாலியில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் வழிபாடுகளுக்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், புனித பிரான்சிஸ் வாழ்ந்த அசிசி நகரில், ஒவ்வொரு நாளும், மும்முறை ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டு வருவதாக அசிசி மறைமாவட்ட ஆயர், Domenico Sorrentino அவர்கள் கூறியுள்ளார்.

வழிபாடுகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் காலை 7 மணி, நண்பகல் 12 மணி, மற்றும் மாலை 6 மணி என்று மூன்று முறை ஆலய மணிகளை ஒலித்து, மக்களை செபிக்கும்படி அழைக்கிறோம் என்று, ஆயர் Sorrentino அவர்கள் வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆண்டு முழுவதும், குறிப்பாக, தவக்காலத்திலும், புனித வாரத்திலும், விசுவாசிகளாலும், திருப்பயணிகளாலும் நிறைந்து வழியும் அசிசி நகரம், தற்போது வெறிச்சோடி இருப்பது, வேதனையாக உள்ளது என்பதை, தன் பேட்டியில் குறிப்பிட்ட ஆயர் Sorrentino அவர்கள், இருப்பினும், இத்தாலி மக்கள் அனைவரும், உலக மக்கள் அனைவரும் செபத்தால் ஒன்றித்திருக்கிறோம் என்பது நம்பிக்கை தருகிறது என்று கூறினார்.

இத்தாலியின் பாதுகாவலரான அசிசி நகர் புனித பிரான்சிஸ், மற்றும் புனித கிளாரா ஆகியோரின் பரிந்துரையால், இவ்வுலகம் சந்தித்துவரும் இந்த நெருக்கடி, விரைவில் நீங்கவேண்டும் என்ற மன்றாட்டு, அசிசி நகரிலிருந்து தொடர்ந்து எழுந்து வருகிறது என்று ஆயர் Sorrentino அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2020, 15:45