ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி, திருத்தந்தை பிரான்சிஸ் ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி, திருத்தந்தை பிரான்சிஸ் 

மார்ச் 22, இங்கிலாந்தில் தாய்மையின் ஞாயிறு

குடும்பங்களில் உருவாகும் துன்பங்களின்போது, அன்னையர், தங்கள் தியாகத்தாலும், செபங்களாலும் அவற்றை நீக்கியுள்ளனர் என்பதை நினைவுறுத்தும் தாய்மை ஞாயிறன்று, இவ்வுலகின் இடர்களை நீக்க இணைந்து செபிப்பது பொருத்தமானது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து இங்கிலாந்தையும், இவ்வுலகையும் காப்பதற்கு, இங்கிலாந்தில் உள்ள அனைத்து கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து, மார்ச் 22, வருகிற ஞாயிறன்று செபிக்குமாறு, அனைத்து தலைவர்களும் இணைந்து, விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு, பிரித்தானியாவில் Mothering Sunday அதாவது, தாய்மையின் ஞாயிறு என்று கொண்டாடப்படுவதையொட்டி, இவ்வாண்டு, மார்ச் 22ம் தேதி நடைபெறும் தாய்மையின் ஞாயிறன்று, இவ்வுலகின் பாதுகாப்பிற்காக அனைத்து கிறிஸ்தவர்களும், கத்தோலிக்கரும் செபிக்குமாறு தலைவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

குடும்பங்களில் உருவாகும் பல்வேறு இடர்களின் போது, அன்னையர், தங்கள் தியாகத்தாலும், செபங்களாலும் இத்துயரங்களை நீக்கியுள்ளனர் என்பதை நினைவுறுத்தும் தாய்மை ஞாயிறன்று, இவ்வுலகின் இடர்களை நீக்க இணைந்து செபிப்பது பொருத்தமானது என்று, இத்தலைவர்கள் கூறியுள்ளனர்.

பொதுவான வழிபாடுகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் ஓர் அடையாளமாக, ஒவ்வோர் இல்லத்தின் சன்னல்களில், ஞாயிறு மாலை 7 மணிக்கு, மெழுகு திரிகள் ஏற்றப்படுவது சிறந்தது என்று, இந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலிக்கன் பேராயர், ஜஸ்டின் வெல்பி, வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ், ஆர்த்தடாக்ஸ் சபைகளின் தலைவர், பேராயர் ஆங்கேலோஸ் உட்பட அனைத்து கிறிஸ்தவ தலைவர்களும் இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ளனர். (ICN/ CTBI)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2020, 15:44