Vatican News
உரோம் புனித மர்ச்செல்லோ ஆலயத்திலுள்ள திருச்சிலுவை உரோம் புனித மர்ச்செல்லோ ஆலயத்திலுள்ள திருச்சிலுவை 

நேர்காணல்: திருச்சிலுவை வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்

கி.பி 1600-வது ஆண்டிலிருந்து, யூபிலி ஆண்டு கொண்டாடப்படும் ஒவ்வொரு முறையும் இந்த அதிசயச் சிலுவையானது புனித பேதுரு பெருங்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொது மக்களுடைய ஆராதனைக்காக வைக்கப்படுகின்றது

மேரி தெரேசா – வத்திக்கான்

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கம் உலகில் எந்த நாட்டையும் விட்டுவைக்கவில்லை. இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 15, கடந்த ஞாயிறு மாலை நான்கு மணியளவில், உரோம் நகரில் மரியின் ஊழியர் சபை அருள்பணியாளர்களின் கண்காணிப்பில் இருக்கும் புனித மர்ச்செல்லோ ஆலயத்திற்குத் தவப்பயணமாகச் சென்று, அங்கு வணங்கப்பட்டுவரும் புதுமை திருச்சிலுவையிடம், இக்கொள்ளை நோய் ஒழியும்படியாகச் செபித்தார். பின்னர் உரோம் மேரி மேஜர் அன்னை மரியா பெருங்கோவில் சென்று, உரோம் நகருக்கு சுகமளிக்கும் அந்த அற்புத அன்னையிடம் திருத்தந்தை செபித்தார். திருச்சிலுவை வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றியும், புனித மர்ச்செல்லோ ஆலயத்திலுள்ள திருச்சிலுவை பற்றியும் இன்று நமக்கு விளக்குகிறார் அருள்பணி அமல்ராஜ், மரியின் ஊழியர் சபை.

நேர்காணல்: உரோம் புனித மர்ச்செல்லோ ஆலயதிருச்சிலுவை

திருச்சிலுவை வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்…

அருள்பணி அமல்ராஜ், மரியின் ஊழியர் சபை

உரோமையர்கள் காலத்தில் தன்டனைக் கைதிகளை இழிவுபடத்தும் அவமானத்தின் சின்னமாகக் கருதப்பட்ட சிலுவையை, இயேசு, வெற்றியின் அடையாளமாக, வாழ்வின் ஊற்றாக, மீட்பின் சின்னமாக மற்றும் தீய கொடிய நோய்களுக்கு எதிரான ஆன்மீகப் போரில் வெற்றிகொள்ள விசுவாசிகள் பயன்படுத்தக்கூடியதொரு பாதுகாப்புக் கவசமாக மாற்றினார். இதைத்தான் புனித பவுல் அடிகளார், “யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில் மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது”(1கொரி.1,22-25) என்று கூறுகின்றார்.

இத்தகையதொரு சிறப்புமிக்க திருச்சிலுவையினுடைய மற்றும் திருச்சிலுவை ஆராதணையினுடைய வரலாற்றை உலகமே கொரோனா எனும் கொடிய கொள்ளை நோயின் பிடியில் இருக்கும் இவ்வேளையில் வத்திக்கன் வானொலி வழியாக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகினறேன்.

திருச்சிலுவையின் வரலாறு

கிறித்தவம் உரோமை நகரில் பரவி வளர்ந்து கொண்டிருந்த ஆரம்ப காலங்களில், அதாவது 2-வது மற்றும் 3-வது நூற்றாண்டுகளில் சிலுவையில் கொலையுண்டு மரித்த இயேசு கிறிஸ்துவை வழிபட்ட, ஆதி கிறிஸ்தவர்களை ஏளனம் செய்யும் விதமாக உரோமை நகரின் சுவர்களில் Alexamenos graffito என்று அழைக்கப்படும் ஒருவகை ஓவியமானது வரையப்பட்டு வந்ததை ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வின் மூலமாகக் கண்டறிந்தார்கள். அத்தகைய ஓவியங்களை இன்றும் உரோமையில் உள்ள Palantino   அருங்காட்சியகத்தில் நாம் காணலாம்.

அப்படி அந்தச் சுவர் ஓவியத்தில் என்ன வரையப்பட்டிருந்தது?

அந்தச் சுவர் ஓவியத்தில் கழுதையின் தலைகொண்ட ஒரு மனிதர் சிலுவையில் தொங்குவதாகவும், அந்தச் சிலுவையின் அருகில் நிற்கும் இன்னொரு மனிதர், தனது ஒரு கையை அந்தக் கழுதை முகம் கொண்ட மனிதரை நோக்கி நீட்டி இருப்பதைப் போன்று சித்தரிக்கப்பட்டு, அந்த ஓவியத்தின் கீழே “அலெக்சாமெனோஸ் அவருடைய கடவுளை வணங்குகின்றார்” என்று சிலுவையில் தொங்கும் இயேசுவை வணங்கும் உரோமை நகர கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தும் விதமாக எழுதி வைத்தார்கள். இந்தக் காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்கள் உரோமை அரசர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு பல்வேறு வகைகளில் இழிவுபடுத்தப்பட்டார்கள் மற்றும் அவர்களுடைய வழிபாட்டு முறையைப் பார்த்து எள்ளி நகையாடினார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது.

உரோமானியர்களுடைய சூரியக் கடவுள் ஒரு வெற்றி வீரர், தோல்வியை அறியாதவர். கிறித்தவர்களுடைய கடவுளோ ஒரு குற்றவாளியைப் போன்று சித்திரவதை செய்யப்பட்டு, சிலுவையில் அரையப்பட்டு அதிலேயே உயிர் விட்டவர். துன்புறும் ஒரு கடவுளை உரோமையர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அநீதியை, தீமையை எதிர்த்து தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத ஒருவர், எப்படி பிறரைக் காப்பாற்றும் மீட்பராக இருக்க முடியும் என்று கூறி கிறிஸ்தவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தர்கள்.

மேலும், 2-ஆம் நூற்றாண்டில் ரோமையில் வாழ்ந்த ஒரு சிறந்த பேச்சாளராகிய Marcus Cornelius Fronto என்பவர் “கிறிஸ்தவர்களுடைய மதமானது தண்டனையின் மற்றும் அவமானத்தின் சின்னமான சிலுவையில் அறையப்பட்ட ஒரு சாதாரன மனிதனை வழிபடக்கூடிய முட்டாள்களுடைய மதம். அவர்கள் கழுதையின் தலையை வழிபடக்கூடியவர்கள், அவர்களுடைய வானகத் தந்தையின் இயல்பும் அதுவாகத்தான் இருக்கும்” என்று கூறி கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தியதாக வாசிக்கின்றோம்.

கிறிஸ்தவர்களுடைய நிலை இவ்வாறு இருந்ததொரு காலக்கட்டத்தில், நான்காவது நூற்றாண்டில் உரோமை அரசனாகிய கான்ஸ்டன்டைன் 312-வது ஆண்டில் நடைபெற்ற Battle of Milvian Bridge என்கின்ற போரில் தோல்வியின் விளிம்பில் இருந்த பொழுது வானத்தை நோக்கிப் பார்த்ததாகவும் அப்பொழுது ஒளி வடிவிலான ஒரு சிலுவை உருவம் தோன்றியதாகவும் அதில் “இந்த அடையாளத்தால் நீ வெற்றி காண்பாய்” எனும் பொருள்படும் கிரேக்க வசனம் ஒன்றைக் கண்டதாகவும், அவ்வாறே அப்போரில் அவர் வென்றதால் அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகவும் கான்ஸ்ட்டைனுடைய வரலாறு நமக்குக் கூறுகின்றது.

இதனால், கி.பி. 313-ஆம் ஆண்டு Edict of Milan எனும் அரசானை வெளியிட்டு கிறிஸ்தவ மதத்தை அரசு மதமாக கான்ஸ்டன்டைன் அறிவிக்கின்றார். அதன்பின், அவர் கிறிஸ்தவர்களின் புனித பூமியான எருசலேமில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள உத்தவிடுகின்றார். இந்த அகழ்வாராய்சிகள் நடந்துகொண்டிருந்த பொழுது, கி.பி. 5-வது நூற்றாண்டில் கான்ஸ்டான்டைனுடைய தாயான ஹெலன் எருசலேமுக்குப் புனிதப் பயணம் செய்து அந்தப் புனித இடங்களைப் பார்வையிட்டபொழுது சிலுவையினுடைய சிறு சிறு துண்டுகள்; கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதன் ஒரு துண்டை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் தொட்டபொழுது அவள் குணமடைந்ததாகவும், எனவே அது இயேசு உயிர்விட்ட சிலுவையினுடைய துண்டுகளாக இருக்கலாம் என்று கருதி ஒரு பகுதியை உரோமைக்குக் கொண்டு வந்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி கூறுகின்றது. இதன் இடிப்படையில், இயேசுவினுடைய கல்லறை இருந்த இடத்தில் கான்ஸ்டன்டைன் அரசர் ஒரு ஆலயத்தைக் கட்டுகின்றார். அந்த ஆலய அர்ச்சிப்பின் நாளைத்தான் இன்றும் நாம் திருச்சிலுவை மகிமையின் விழாவாகக் கொண்டாடுகின்றோம்.

கான்ஸ்டன்டைன் அரசனுடைய தாயான ஹெலன் அந்தச் சிலுவையைக் கண்டுபிடித்த நாளானது அக்காலத்தில் “சிலுவையினுடைய கண்டுபிடிப்பு”விழாவாகக் கொண்டாடப்பட்டது. இந்த இரண்டு விழாக்களுமே கிட்டத்தட்ட 7வது நூற்றாண்டிலிருந்தே உரோமை நகரில் கொண்டாடப்பட்டன. எருசலேமிலும் இந்தத் திருச்சிலுவையின் ஒரு துண்டானது வைக்கப்பட்டு புனித வெள்ளியன்று ஆராதிக்கப்பட்டு வந்தது.

4-வது மற்றும் 5-வது நூற்றாண்டுகளில் அரசர்களுடைய உதவியினால் உரோமை நகரத்தில் பல ஆலயங்கள் கட்டப்பட்டு அவ்வாலயங்களில் விவிலியக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில் கிறிஸ்து, அன்னை மரியாள், திருத்தூதர்கள் போன்றோருடைய மொசைக் ஓவியங்களால் அலங்கரித்தார்கள். இவைகளில் இதுவரை நகைப்புக்குரிய வகையில் சித்தரிக்கப்பட்ட இயேசுவின் உருவமானது தாடி, தோள்பட்டை வரை தொங்கும் நீண்ட தலைமுடியோடு கூடிய மனித உருவில் இயேசுவைச் சித்தரிக்கும் வகையில் ஓவியங்களில் வரையப்பட்டன. பின், இயேசு தன் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பின் வழியாகத் தீமையையும் இறப்பையும் வெல்வதைப் போன்ற ஓவியங்கள் விலைமதிப்பற்ற பல இரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட இலத்தீன் மொழியில், crux gemmata என்று அழைக்கப்பட்ட இரத்தினச் சிலுவைகளில் வரையப்பட்டன.

இவ்வாறு, 6-ஆம் நூற்றாணடிலிருந்து, இயேசு சிலுவையில் அறையப்பட்டதைச் சித்தரிக்கும் ஓவியங்களை வரைவதும், அதை வழிபாடுகளில் பயன்படுத்துவதும் பொதுமக்களுடைய வழக்கத்தில் வந்தது. இவ்வாறு, இயேசு கிறிஸ்து மட்டும் தனிமையில் சிலுவையில் தொங்கும் காட்சி, இயேசு கிறிஸ்து நடுவிலும் அவருக்கு இரண்டு பக்கமும் இரண்டு கள்வர்கள் சிலுவையில் தொங்கும் காட்சி மற்றும் இயேசு சிலுவையில் தொங்க அச்சிலுவையின் அடியில் இவருடைய தாயான மரியாளும் அப்போஸ்தலர்களும் மற்றவர்களும் நிற்கின்ற விவிலியக் காட்சிகளும் ஒவியங்களாகத் தீட்டப்பட்டன.

சிலுவை பக்தி முயற்சியினுடைய வளர்ச்சியாக, எருசலேமுக்கு வெளியிலும் புனித வெள்ளியன்று திருச்சிலுவை ஆராதனையானது பரவலாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 8-வது நூற்றாண்டிலிருந்து உரோமை நகரிலும் இது கொண்டாடப்பட்டது. சித்திரவதை செய்யப்பட்டு சிதைக்கப்பட்டதொரு மனிதராக கிறிஸ்துவுக்கு இருந்த உருவமானது இடைக்காலத்தில் மாற்றப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து பொதுவாக அமைதியான சாந்தமானதொரு முகத்தோடு சித்தரிக்கப்படுகின்றார்.  இதுதான் திருச்சிலுவை மற்றும் திருச்சிலுவை ஆராதனையினுடைய சுருக்கமான வரலாறாகும்.

இந்த வரலாறு, உரோமை நகரம், அதன் மக்களுடைய வாழ்வில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்ப துயர நேரங்களில் திருச்சிலுவையினுடைய உடனிருப்பை நமக்கு உணர்த்துகின்றதொன்றாக இருக்கின்றது.

உரோம் மர்ச்செல்லோ ஆலய புதுமை சிலுவை

சீனாவைக் கடுமையாகத் தாக்கிய இந்த கொரோனா தொற்றுக்கிருமி உயிர்க் கொள்ளி நோய், உரோமை நகரைத் தலைநகராகக் கொண்ட இத்தாலி, மற்றும் பல உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்ற இந்தத் துன்பம் நேரத்தில் கடந்த ஞாயிறன்று அதாவது மார்ச் 15-ம் தேதி திருச்சபையின் தலைவராகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோமை நகரில் மரியின் ஊழியர் சபைத் தந்தையர்களால் பல நூற்றான்டுகளாகப் பராமரிக்கப்படும் புனித மர்ச்செல்லோ ஆலயத்தில் உள்ள Crocifisso Miracoloso del Santissimo Croficifisso என்று அழைக்கப்படும் அற்புதச் சிலுவையிடம்  இந்தக் கொள்ளை நோயிலிருந்து இத்தாலி நாட்டையும் உலக நாடுகளையும் காப்பாற்ற வேண்டி செபிப்பதற்காக ஒரு புனிதப் பயணம் மேற்கொண்டு, அந்த அதிசயச் சிலுவை இருக்கின்ற பீடத்தின் முன் மரியின் ஊழியர் சபைத் தந்தையர்களோடு இணைந்து மனதுருகச் செபித்தார்கள்.

ஏன் திருத்தந்தை அவர்கள் இந்த ஆலயத்தில் உள்ள பாடுபட்ட திருவுருவத்திடம் செபிக்க வேண்டி திருப்பயணியாக வந்தார்கள் என்பதை அறியும் ஆர்வம் நம்மில் பலருக்கும் ஏற்படலாம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. எனவே, இந்த அதிசயச் சிலுவை பற்றிய ஒரு சில முக்கியமான வரலாற்று நிகழ்வுளை மட்டும் உங்களோடு நான் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

புனித மர்ச்செல்லோ ஆலயம் உரோமை நகரில் உள்ள பழம் பெரும் ஆலயங்களில் ஒன்றாகும். அதாவது இவ்வாலயம் 4 அல்லது 5-ஆம் நூற்றண்டைச் சார்ந்தது. அதாவது, கிறிஸ்தவ மதம் அரசு மதமாக ஆன காலகட்டத்தில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது. இவ்வாலயத்தில் 15-வது நூற்றாண்டில் செய்யப்பட்ட மரத்தாலானதொரு அழகிய தத்ரூபமான பாடுபட்ட சுருபமானது இருக்கின்றது. இங்கு மரியின் ஊழியர்களாகிய நாங்கள் 1368-ஆது ஆண்டிலிருந்து ஆண்மீகப் பணியைச் செய்துகொண்டிருக்கின்றோம்.

இவ்வாலயமானது 1519ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி இரவு நேரத்தில் தீப்பிடித்து எரிந்து முழு ஆலயமும் சாம்பலானது. அதற்கு அடுத்த நாள் உரோமை நகர மக்கள் அந்த ஆலயத்தின் அழிவை சோகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தபொழுது எறிந்த நெருப்புப் புகைகளுக்கு நடுவே ஆலயத்தில் இருந்த பல பொருட்கள் முற்றிலும் சேதமுற்றுக் கிடந்ததைக் கண்டு மனம் உடைந்து அழுதனர். அப்பொழுது அப்புகைமண்டலத்திற்கு நடுவிலே ஆலயத்தில் இருந்த உயர்ந்த பலிபீடத்தின் சிலுவை மட்டும் அப்படியே எந்தவித பாதிப்பும் அடையாமல் தோன்றியது மற்றும் அதன் அடியில் ஒரு சிறிய எண்ணெய் விளக்கு எறிந்து கொண்டிருந்தது என்று இந்நிகழ்வைப் பற்றி விவரிக்கும் வரலாற்று ஆவணம் மூலம் அறிய வருகின்றோம்.

இதைக் கண்ட உரோமை வாழ் மக்கள் அதனை ஒரு அதிசயச் சிலுவையாகக் கருதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதன்முன் கூடி எண்ணெய் விளக்கேற்றி சிறப்பு ஆராதனையும் செபமும் செய்யத் தொடங்குகிறார்கள். இந்தக் குழுவே பின்நாளில் Arciconfraternità del SS. Crocifisso di Gesù அதாவது, “அதிசயச் சிலுவையின் பக்தி இயக்கமாக”உருவாகி இத்தாலி மற்றும் பிற இடங்களுக்கும் பரவுகின்றது. அதே ஆண்டில் இந்த ஆலயமானது அதே இடத்தில் மீண்டும் கட்டப்படுகின்றது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா தொற்றுக்கிருமி போன்ற இத்தாலிய வரலாற்று அறிஞர்களால் “Grande Peste” என்று அழைக்கப்படும் மிகப் பெரிய கொள்ளை நோய் உரோமை நகர் எங்கும் பரவி, பலர் இறந்து கொண்டிருந்தனர். உரோமை நகரமே துன்பத்தில் மூழ்கி இருந்த நேரத்தில் திருத்தந்தையின் அறிவுறுத்தலின் பேரில் புனித மர்ச்செல்லோ ஆலயத்தின் அதியச் சிலுவையானது 1522-ஆம் ஆண்டு ஆகஸ்டு 4 முதல் 20-ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 16 நாட்கள் உரோமை நகரத்தின் முக்கியமான வீதிகள் வழியாக புனித பேதுரு ஆலயம் நோக்கிப் பவனியாகக் கொண்டுசெல்லப்படுகின்றது. ஓவ்வொரு வீதியையும் இந்த அதியச் சிலுவை கடக்கின்றபொழுது அதைப் பார்த்த நொடியே மக்கள் குணம்பெறுவதைக் கண்ட மக்கள் மகிழ்ச்சியோடு பவனியில் பங்கெடுக்கின்றனர். இறுதி நாளான ஆகஸ்ட் 20-ஆம் நாள் அதிசயச் சிலுவை மர்ச்செல்லோ ஆலயத்தை வந்தடைந்தபொழுது உரோமை நகரம் முழுவதுமே அந்தக் கொள்ளை நோயிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றிருந்தது.

எனவே கி.பி 1600-வது ஆண்டிலிருந்து, “புனித ஆண்டு” அல்லது யூபிலி ஆண்டு கொண்டாடப்படும் ஒவ்வொரு முறையும் இந்த அதிசயச் சிலுவையானது புனித பேதுரு பெருங்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொது மக்களுடைய ஆராதனைக்காக வைக்கப்படுவது இன்றும் வழக்கமாக இருக்கின்றது.

இறுதியாக, 2000-மாவது யூபிலி ஆண்டு கொண்டாடப்பட்ட பொழுது, இச்சிலுவையை புனித பேதுரு அலயத்திற்கு பவணியாக எடுத்தச் சென்று தவக்காலத்தின் முதலாவது ஞாயிறான மார்ச் மாதம் 12-ஆம் நாளை “மன்னிப்பின் அல்லது ஒப்புரவின் நாளாகக்” கொண்டாடி திருச் சிலுவை ஆராதனையின் பொழுது திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அவர்கள் கிறிஸ்தவர்கள் அனைவர் சார்பாகவும் கடந்த காலங்களில் திருச்சபை செய்த அனைத்து தவறுகளுக்காகவும் உலகிடம் பொது மன்னிப்புக் கேட்டார்.

1522-ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்தக் கொள்ளை நோய் போன்றே இன்றும் இந்த கோவிட்-19 நம்மை தாக்கிக்கொண்டிருக்கின்றது. இதிலிருந்து விடுபட வேண்டி திருத்தந்தை பிரான்சிஸ் நமக்குக் காட்டிய மாதிரியைப் பின்பற்றி நாமும் இந்த அதிசயச் சிலுவையை நோக்கி இந்த நோயிலிருந்து முழுமையாக விடுபட ஒவ்வொரு நாளும் அசைக்கமுடியாத நம்பிக்கையோடு வேண்டுவோம்.

புதுமை சிலுவையை நோக்கி செபம்

எனக்காக சிலுவையில் தொங்கும் இயேசுவே,

உலகின் மீட்பரே,

நாங்கள் உம்மேல் கொண்டுள்ள நம்பிக்கை

எம்மை ஒருபோதும் கைவிடாது,

எம்மேல் இரக்கம் வைத்து எல்லாத்

தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றும்!

உலகெங்கும் பரவிவரும் நோய்க்கிருமியின்

தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள

வேண்டுகிறோம்.

நோயுற்றவர்களைக் குணமாக்கும்,

நலமானவர்களைப் பாதுகாத்தருளும்,

அனைவரின் உடல்நலனுக்காக

உழைப்பவர்களைத் திடப்படுத்தும்.

உம் இரக்கத்தின் திருமுகத்தை எம்மீது

திருப்பி, உம் பேரன்பினால் எம்மைக்

காத்தருளும்.

என்றும் எம்மோடு வழிநடக்கும் உம் தாயும்

எங்கள் அன்னையுமான கன்னி மரியாவின்

பரிந்துரையால் உம்மை நோக்கி

மன்றாடுகிறோம். என்றென்றும் வாழ்ந்து

ஆட்சி செய்கின்றவர் நீரே. ஆமென்.

19 March 2020, 12:20