புனித பூமியில் எருசலேம் நகருக்கு வெளியே... புனித பூமியில் எருசலேம் நகருக்கு வெளியே... 

புனித பூமியில் 800 ஆண்டுகள் பழமையான நூல்கள்

புனித பூமியில், பழங்கால கையெழுத்துப் பிரதிகளையும், நூல்களையும் பாதுகாப்பது, யூத மற்றும், முஸ்லிம் உலகோடு கலாச்சார பரிமாற்றத்திற்கு முக்கியமானது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித பூமி காவலர் எனப்படும், எருசலேமில் பிரான்சிஸ்கன் துறவு சபை இல்லத்தில் இருக்கின்ற பழங்கால நூல்களை, எல்லாரும் வாசிப்பதற்கு உதவியாக, அவை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

800 ஆண்டுகள் பழமையுடைய, இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான உருவப்படங்களுள்ள உண்மையான கருவூலங்கள், எல்லாருக்கும் கிடைக்கும்வண்ணம், புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று, புனித பூமி காவலரின் பொது நூலக இயக்குனர் அருள்பணி லியோனெல் கோ அவர்கள் கூறியுள்ளார்.

அச்சபையின் பொது நூலகத்திலுள்ள, பழமையான ஆயிரத்திற்கும் அதிகமான தொகுப்புகளை, இணையதளத்தில் அனைவரும் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும் உதவியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அருள்பணி கோ அவர்கள் ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்.

கடந்தகாலத்தை பேரார்வத்துடன் நினைவில் வைத்திருப்பதற்காக மட்டுமல்ல, வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில், இந்த நூல்களை வருங்காலத்திற்காகப் பாதுகாப்பதற்காகவும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும், அருள்பணி கோ அவர்கள் கூறியுள்ளார்.

பழங்கால கையெழுத்துப் பிரதிகளையும், நூல்களையும் பாதுகாப்பது, அதன் பொருளடக்கத்திற்கு மட்டுமல்ல, யூத மற்றும், முஸ்லிம் உலகோடு கலாச்சார பரிமாற்றத்திற்கும் முக்கியமானது என்றும், அருள்பணி கோ அவர்கள் கூறியுள்ளார். (AsiaNews)

எருசலேமில் பிரான்சிஸ்கன் துறவு சபை இல்லம், புனித பூமி மாநில இல்லமாக, 1217ம் ஆண்டில், அச்சபையை ஆரம்பித்த, அசிசி நகர் புனித பிரான்சிசால் உருவாக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2020, 15:39