பெர்கமோவில் கோவிட்-19 பெர்கமோவில் கோவிட்-19 

கோவிட்-19 நோயாளர் பராமரிப்பில், ஏழைகளின் அருள்சகோதரிகள்

மக்களுக்குத் தொண்டாற்ற, உறுதியான கரங்களும், இதயங்களும் தேவைப்படுகின்றன, அதேவேளை, நோயாளிகளைப் பராமரிப்பதற்குத் தேவையான வசதிகளை உறுதிசெய்வதற்கு நிதி உதவியும், கருவிகளும் தேவைப்படுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில் ஏழைகளின் அருள்சகோதரிகள் சபையின் 13 சகோதரிகள், கோவிட்-19 நோயாளிகளைப் பராமரிக்கும் பணியில், பல்வேறு அமைப்புகளில் ஈடுபட்டிருந்தவேளையில் அக்கிருமியால் தாக்கப்பட்டு இறந்துள்ளபோதிலும், தங்கள் சபையினர் அப்பணியில் முழுமனதுடன் தொடர்ந்து ஈடுபடவே விரும்புகின்றனர் என்று, அச்சபையின் இத்தாலிய இல்லங்களின் தலைவர் அருள்சகோதரி கார்லா ஃபியோரி அவர்கள் கூறினார்.

“கொரோனா தொற்றுக்கிருமி அவசரகால”த் திட்டத்தில் பணியாற்றுவது குறித்து, மார்ச் 25, இப்புதனன்று, வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்த, அருள்சகோதரி கார்லா அவர்கள், இது, தங்களுக்கு மிகவும் துன்பமான தருணமாக இருந்தபோதிலும், சபையின் நற்செய்திப் பணியில் வலிமை, மற்றும் தனிவரத்தில் உறுதியடைந்து, நோயாளிகளைப் பராமரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடவிருப்பதாக அறிவித்தார்.

இத்தாலியின் பெர்கமோ மாநிலத்தில், பல்வேறு அமைப்புகளில், நோயாளிகளுக்குப் பராமரிப்பு வழங்குகையில், கடந்த சில நாள்களில், ஏழைகளின் அருள்சகோதரிகள் சபையின் 13 சகோதரிகள் உயிரிழந்தனர். மார்ச் 25, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும். நோயாளிகளைப் பாரமரித்துவரும் அனைத்து அருள்சகோதரிகள் மற்றும், இப்பணியின் காரணத்தினால் உயிரிழந்த அருள்சகோதரிகளுக்காகச் சிறப்பாகச் செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவிக்கு அழைப்பு

மக்களுக்குத் தொண்டாற்ற, உறுதியான கரங்களும், இதயங்களும் தேவைப்படுகின்றன, அதேவேளை, நோயாளிகளைப் பராமரிப்பதற்குத் தேவையான வசதிகளை உறுதிசெய்வதற்கு நிதி உதவியும், கருவிகளும் தேவைப்படுகின்றன என்றும், அருள்சகோதரி கார்லா அவர்கள் கூறினார். 

பெரிய இதயத்தோடு, கொரோனா தொற்றுக்கிருமி அவசரகாலநிலை என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள அருள்சகோதரி கார்லா அவர்கள், உடனடியாக 80 படுக்கைகள், பின்னர் ஐம்பது படுக்கைகள் அமைப்பதற்கு நிதியுதவி அவசியம் என்றும், முகக் கவசங்கள், பாதுகாப்பு கருவிகள், ஆக்ஜிசன் உட்பட பலவற்றுக்கு உதவிகள் தேவை என்றும் கூறியுள்ளார். (Zenit)

திருத்தந்தை உதவி

இதற்கிடையே, மார்ச் 26, மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது சார்பில் தர்மச் செயல்கள் ஆற்றும் அலுவலகத்திற்கு, கடந்த சில நாள்களில் வாங்கப்பட்ட முப்பது சுவாசக் கருவிகளை அளித்துள்ளார். அவை வரும் நாள்களில் கோவிட்-19ஆல் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள, இத்தாலி மற்றும் இஸ்பெயின் நாடுகளில் சில மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைகளை அந்தந்த நாடுகளின் ஆயர்கள் தீர்மானிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2020, 15:58