ஈரானில் கோவிட்-19 ஈரானில் கோவிட்-19 

திருத்தந்தை, ஈரானுக்கெதிரான தடைகள் அகற்றப்பட உதவுமாறு

மனித சமுதாயம் முழுவதும் இத்தொற்றுக்கிருமி நெருக்கடியால் துன்புறும்வேளை, திருத்தந்தை தலையிட்டு, ஈரானுக்கு எதிரான மனிதாபிமானத் தடைகள் அகற்றப்படுவதற்கு உதவினால், ஈரான் மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கும் - Ayatollah Damad

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டிற்கெதிரான பொருளாதார, குறிப்பாக, மருத்துவ பொருள்கள் தடைகள் அகற்றப்பட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உதவுமாறு விண்ணப்பித்துள்ளார், ஈரானின் இஸ்லாம் மதத் தலைவர் ஒருவர்.

ஈரானின் ஷியா இஸ்லாம் பிரிவின் தலைவர் Ayatollah Seyed Mostafa Mohaghegh Damad அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு எழுதிய மடலில், ஈரானுக்கெதிரான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவதற்கு, திருத்தந்தை உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நாள்களில் உலகிலுள்ள எல்லா மனிதரும், கோவிட்-19 தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் துன்புற்றுவரும்வேளை, இந்த உலகளாவிய மனிதத் துன்பம் முடிவதற்கு, உண்மையான அன்பு மற்றும், கருணையுடன், திருத்தந்தை செபித்து வருகிறார் என்பதில் தான் மிகவும் உறுதியாய் இருப்பதாகவும், Ayatollah Damad அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாடு விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால், ஈரான் நாட்டில் நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்கின்ற சிறார், வயதானவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் எல்லாரும், மருத்துவ வளங்கள் இன்றி கடுமையாய்த் துன்புறுகின்றனர் என்றும், Damad அவர்கள் தெரிவித்துள்ளார்.

இம்மடலின் நகலைப் பெற்றுள்ள பீதேஸ் செய்தி நிறுவனம், 2010ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெற்ற, மத்திய கிழக்குப் பகுதி குறித்த, சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அழைப்பின்பேரில்,  Ayatollah Damad அவர்களும், சுன்னி இஸ்லாம் பிரிவுத் தலைவர் ஒருவரும் கலந்துகொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளது.

Ayatollah Damad அவர்கள், ஈரான் அறிவியல் கழகத்தில் இஸ்லாம் மத கல்வித்துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். மேலும் இவர், பல ஆண்டுகளாக ஈரானுக்கும், உலகின் மற்ற நாடுகளுக்கும் இடையே பாலத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார் என்று பிதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2020, 15:22