தேடுதல்

புனித திருத்தந்தை 23ம் யோவான் புனித திருத்தந்தை 23ம் யோவான்  

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-15

திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், இரவு நேரத்தில் திடீரென விழித்துக் கொண்டு, உலகை அச்சுறுத்தும் கடுமையான பிரச்சனைகள் பற்றி அடிக்கடி நினைப்பாராம். அந்நேரத்தில் அவர் தன்னிடமே, “நான் இதைப் பற்றி திருத்தந்தையிடம் சொல்ல வேண்டும்” என்று சொல்வாராம்.

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித திருத்தந்தை 23ம் யோவான் (ஜான்) -2

உலகில் வாழ்கின்ற கத்தோலிக்கர் எல்லாருக்கும், ஒரு புதிய திருத்தந்தையின் தேர்தல் என்றால், அது மறக்கமுடியாத நிகழ்வாக அமைகின்றது. இந்த தேர்தல் அடிக்கடியும் நிகழ்வது கிடையாது. திருஅவையின் தலைமைப்பணியை புதிதாக ஏற்கவிருப்பது யார் என்ற ஆவல், கத்தோலிக்கரிடம் மட்டுமல்ல, மற்றவரிடமும் உள்ளது. புனித திருத்தந்தை 23ம் ஜான் அதாவது 23ம் யோவான் என்ற, பேராயர் ஆஞ்சலோ ஜூசப்பே ரொன்காலி அவர்கள், இத்தாலியில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் 1881ம் ஆண்டில் பிறந்தவர். இவர் தனது முதல் 54 வருட திருஅவைப் பணிகளில் முக்கியமான பணிகளை ஆற்றி, விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவராய், நல்ல குணமுள்ளவராய், புகழோடும் மதிப்போடும் விளங்கி வந்தார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், துருக்கியில் திருப்பீட தூதராகப் பணியாற்றுகையில், ஆயிரக்கணக்கான யூதர்கள், பாலஸ்தீனம் தப்பித்துச் செல்ல உதவினார். 1944ம் ஆண்டில், அப்போதுதான் விடுவிக்கப்பட்ட பிரான்சின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றச் சென்றபோது, அவர் ஆற்றிய பணிகள் எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவர், 1953ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

1958ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் இறைபதம் அடைந்தபின்னர்,  கர்தினால்  ஆஞ்சலோ ஜூசப்பே ரொன்காலி அவர்கள், திருத்தந்தையாக, அதிலும், 76 வயது நிரம்பிய இவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இல்லை. ஆனால் இவர், திருஅவையின் 261வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 23ம் ஜான் அதாவது 23ம் யோவான் என்ற பெயரையும் தெரிவு செய்தார். இவர் தலைமைப்பணியை ஏற்ற மூன்று மாதங்களுக்குள்ளேயே, வத்திக்கானின் பழமைவாத தலைமைத்துவத்தை நவீனமயமாக்கும் முயற்சியைத் தொடங்கினார். உலகெங்கிலுமிருந்து அரசியல் மற்றும், சமயத் தலைவர்களைச் சந்தித்தார். திருத்தந்தையர் வத்திக்கானிலிருந்து வெளியே செல்ல முடியாதபடி பாதுகாப்பில் இருக்கும் மரபை மாற்றி, நவீன திருத்தந்தையாக, வத்திக்கானுக்கு வெளியே வந்து உரோம் நகரத் தெருக்களில் சுதந்திரமாகப் பயணம் செய்த முதல் திருத்தந்தை இவர். திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், ஒருநாள் உரோம் நகரத் தெருவில் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு பெண், தன் தோழியுடன் அவரைக் கடந்து சென்றார். அப்போது அப்பெண் தன் தோழியிடம், "ஓ கடவுளே, இவர் எவ்வளவு பருமனாக இருக்கிறார்!" என்று சொன்னார். இது திருத்தந்தையின் காதில் விழுந்துவிட்டது. உடனே திருத்தந்தை அப்பெண் பக்கம் திரும்பி, "மேடம், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் கர்தினால்கள் அவை, அழகுப் போட்டி கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன்" என்று சொன்னார்.

திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், தன்னிலே அன்பானவர். உரோம் நகருக்கு வருகைதரும் வெளிநாட்டு உயர் அதிகாரிகளிடம் எவ்வாறு பேசுவாரோ அதேபோல்தான் எளிய விவசாயிகளிடமும் இவர் பேசுவார். இவர் 1958ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டிலே உரோம் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனைக்குச் சென்று, நோயுற்ற சிறாரையும், குடும்பத்தினரையும், பணியாளர்களையும் ஆசீர்வதித்தார். மருத்துவமனையில் ஒரு சிறுவனிடம், நீ வளர்ந்தபின் என்னவாக ஆசைப்படுகிறாய் என்று திருத்தந்தை கேட்டார். அதற்கு அச்சிறுவன், காவல்துறை பணியாள் அல்லது திருத்தந்தை என்று பதில் சொன்னான். அப்போது சிறுவனிடம், திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், நான், நீயாக இருந்தால், காவல்துறை பணியையத்தான் தெரிவு செய்திருப்பேன், என்னைப் பார், திருத்தந்தையாக யாரும் வரலாம் என்று பதில் சொன்னார். 1958ம் ஆண்டு கிறிஸ்மஸ் பெருவிழா காலத்தில், டிசம்பர் 26ம் தேதி, உரோம் ரெஜினா சேலி (Regina Coeli) மத்திய சிறையைப் பார்வையிட்டார் இவர். அச்சமயத்தில் கைதிகளிடம், எனது உறவினர் ஒருவர் வேட்டையாடியதற்காக இந்தச் சிறையில் இருந்தார் என்று சொல்லி எல்லாரையும் வியப்படையச் செய்தார். கைதிகளிடம் அன்பாகப் பேசிய திருத்தந்தை, தான் இரவில் செபமாலை சொல்கையில் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினர் மற்றும், உங்கள் மனைவிகளுக்காகச் செபிப்பதாக உறுதியளித்தார்.

திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், இரவு நேரத்தில் திடீரென விழித்துக் கொண்டு, உலகை அச்சுறுத்தும் கடுமையான பிரச்சனைகள் பற்றி அடிக்கடி நினைப்பாராம். அந்நேரத்தில் அவர் தன்னிடமே, “நான் இதைப் பற்றி திருத்தந்தையிடம் சொல்ல வேண்டும்” என்று சொல்வாராம். அடுத்த நாள் விழித்தெழுகையில், “நான்தான் திருத்தந்தை” என்பதை நினைவில் வைப்பாராம். இவர் ஒருநாள் மாலையில் உரோம் தூய ஆவியார் மருத்துவமனையில் அவரின் நண்பர் ஒருவரைப் பார்வையிடச் சென்றார். அச்சமயத்தில் கதவருகில் நின்ற அருள்சகோதரி, “திருத்தந்தையே, நான்தான் தூய ஆவியார் மருத்துவமனையின் தலைவி” என்று சொன்னாராம். அதற்கு திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், “நாங்கள் பேறுபெற்றவர். என்ன அருமையான வேலை. நான் வெறும், கடவுளின் பணியாட்களின் பணியாள்தான்” என்றாராம். இவர் வெனிஸ் நகர முதுபெரும் தந்தையாகவும், கர்தினாலாகவும் பணியாற்றியபோது அந்நகர செல்வந்தர்களிடம், நம் இருவருக்கும் பொதுவாக ஒன்று உள்ளது. அது பணம். ஆனால் அது உங்களிடம் நிறைய உள்ளது. என்னிடம் எதுவமே இல்லை. இந்த வேறுபாடு பற்றி நான் கவலைப்படுவதே இல்லை என்றாராம். வத்திக்கான் அதிகாரி ஒருவர் இவரிடம், 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை 1963ம் ஆண்டில் கூட்டுவது முற்றிலும் இயலாத செயல் என்று சொல்ல, அப்படியா, நாம் அதை 1962ம் ஆண்டிலே ஆரம்பித்து விடுவோம் என்று சொன்னார். இத்தகைய புனித எளிமையான திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் பற்றி மேலும் அறிவோம்.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2020, 09:22