கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் 

COVID-19 குறித்து கர்தினால் கிரேசியஸ்

புனித வெள்ளியில் திருச்சிலுவை ஆராதனை வழிபாட்டில், விசுவாசிகள் சிலுவையை முத்தி செய்வதைத் தவிர்க்க வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி, COVID-19 இந்தியா உட்பட எழுபதுக்கும் அதிகமான நாடுகளைத் தாக்கியுள்ளவேளை, அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பது தொடர்பாக, மும்பை உயர்மறைமாவட்டத்தின் அனைத்துப் பங்குத்தளங்களுக்கும் மடல் ஒன்றை, இவ்வியாழனன்று அனுப்பியுள்ளார், மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

இது தொடர்பாக நன்கு ஆலோசித்தபின்னர், இந்தியத் திருஅவை முழுவதற்கும் அறிக்கை ஒன்றை வெளியிடவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள, இந்திய ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், முதலில் நம் விசுவாசம், எல்லாரையும் இறைவன் பக்கம் திருப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் நாம் சொல்லவேண்டிய செபத்தையும் இம்மடலோடு வெளியிட்டுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அச்செபம், விசுவாசிகள் மன்றாட்டில் இணைக்கப்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பலியில், சமாதானத்தைப் பகிரும்போது, கைகளைக் குலுக்காமல் இருகரங்களையும் குவித்து சமாதானத்தைச் சொல்லுமாறும், திருநற்கருணையை கையில் வாங்குமாறும், திருநற்கருணை வழங்கும்முன்னர், அருள்பணியாளர்கள் கைகளைக் கழுவுமாறும், தீர்த்த தண்ணீர்த் தொட்டியை காலியாக வைத்திருக்குமாறும் கர்தினாலின் மடல் கூறுகிறது.

புனித வெள்ளியில் திருச்சிலுவை ஆராதனை வழிபாட்டில் விசுவாசிகள் சிலுவையை முத்தி செய்வதைத் தவிர்க்குமாறும், திருச்சிலுவையைத் தூக்கிக்காட்டி ஆசீர்வதிப்பது போதுமானது என்றும், விரும்புகிறவர்கள், வரிசையாகச்சென்று, திருச்சிலுவைக்கு தலைவணங்கி மரியாதையைச் செலுத்துமாறும், கர்தினாலின் மடல் கூறுகிறது.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் தற்காலிகமானவை, இது நேரத்திற்கு நேரம் புதுப்பிக்கப்படும் என்றும், இந்த விதிமுறைகள், வருகிற ஏப்ரல் 12ம் தேதி உயிர்ப்புப் பெருவிழா வரை பின்பற்றப்பட வேண்டும் என்றும் கர்தினாலின் மடலில் கூறப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2020, 15:09