'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23:34) 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23:34) 

விவிலியத்தேடல்: சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 3

சிலுவையில் மரணப் போராட்டம் நிகழ்த்திய இயேசு, தன்னை வதைப்பவர்களை மன்னிக்குமாறு, ஓர் இறைவேண்டலை, தந்தையை நோக்கி எழுப்புகிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 3

சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசு, 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23:34) என்று எழுப்பிய வேண்டுதலில், நம் தேடல் பயணம் தொடர்கிறது. சென்ற விவிலியத் தேடலில், எத்தனை முறை மன்னிப்பது என்ற கேள்விக்கு கணக்கு பார்க்காமல், எப்போதும் மன்னிக்கவேண்டும் என்று பதில் சொன்னார் இயேசு. இன்று, எதற்காக மன்னிக்கவேண்டும் என்ற கேள்விக்கு, காரணம் பார்க்காமல், கனிவுடன் மன்னிக்கவேண்டும் என்பதை, அந்தக் கல்வாரி கூற்றின் வழியே இயேசு கூறுகிறார்.

இன்றைய நம் தேடலை, ஒரு கற்பனை நிகழ்வுடன் துவக்குவோம். வீட்டிலிருந்த, அழகானப் பளிங்குச்சிலை ஒன்று உடைந்துவிட்டது என்று கற்பனை செய்துகொள்வோம். இது விபத்தா? தவறா? குற்றமா? அல்லது மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றமா?... வழக்கை ஆரம்பிப்போம். பளிங்குச் சிலை உடைந்தது, ஒரு நிகழ்வு. அதை, ஒரு விபத்தாகவோ, குற்றமாகவோப் பார்ப்பதற்கு, பின்னணி விவரங்கள் தேவை. அதைவிட, எந்தக் கண்ணோட்டத்தில் அந்நிகழ்வைப் பார்க்கிறோம் என்பதும், முக்கியமான ஓர் அம்சம்.

உடைந்தது எப்படிப்பட்டச் சிலை? சந்தையில், குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதா? அல்லது, நமது தந்தையோ, உறவினரோ, அயல்நாட்டிலிருந்து வாங்கித்தந்த பரிசா? அல்லது, பல ஆண்டுகளாய், வீட்டில் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியச் சொத்தா? அல்லது, நாம் தினமும் செபங்கள் செய்வதற்கு, நம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள திரு உருவச் சிலையா? உடைந்தது எது என்ற ஒரு கேள்விக்கே, இத்தனை கோணங்கள் இருந்தால், இன்னும் மற்ற கேள்விகளையும் ஆய்வுசெய்ய வேண்டும். வழக்கைத் தொடர்வோம்.

உடைத்தது யார்? நம் வீட்டின் செல்லப் பிள்ளையா? வீட்டுக்கே பெரியவரா? அல்லது வீட்டில் பணி செய்யும் ஒருவரா?

எப்படி உடைந்தது? தவறுதலாக, கவனக்குறைவாக, தட்டிவிடப்பட்டதா? அல்லது, பலமுறை, அதைப்பற்றி எச்சரிக்கைகள் கொடுத்தும், அவற்றை சட்டை செய்யாததால் ஏற்பட்டதா? அல்லது கோபத்தில் வேண்டுமென்றே அது உடைக்கப்பட்டதா?

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னணியில் பல விவரங்கள் உள்ளன. ஒவ்வொரு விவரமும், வெவ்வேறு கண்ணோட்டத்தை உருவாக்கும். அந்தந்தக் கண்ணோட்டத்தைப் பொருத்து, அந்நிகழ்வு, ஒரு விபத்தா, தவறா, குற்றமா, என்பதெல்லாம் முடிவாகும்.

விபத்து என்றால், மன்னிப்பது எளிதாகும். தவறு என்றால், குற்றம் என்றால், பெரும் குற்றம் என்றால், மன்னிப்பது கடினமாகும். நிகழ்வின் தீவிரம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மன்னிப்பதும் கடினமாகும். இந்தத் தீவிரத்தைக் கூட்டுவதும், குறைப்பதும் எது? நிகழ்வு அல்ல. அதனைக் காணும் கண்ணோட்டம். கண்ணோட்டம் மாறினால், மன்னிப்பு எளிதாகும். மன்னிப்பு எளிதானால், வாழ்வு நலமாகும்.

இந்த வழக்கை ஆரம்பித்ததே, தீர்ப்பு சொல்வதற்கு அல்ல. வாழ்வில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும், சரியான கண்ணோட்டத்துடன் காணும் மனமிருந்தால், மன்னிக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள.

ஒரு சிலை உடைந்துபோகும்போதே, இத்தனைச் சிக்கல்கள் எழுந்தால், நம் மனம் உடைந்து போகும்போது, இன்னும் எத்தனைச் சிக்கல்கள் எழும்? நம் மனதை உடையவிடுவதும், உடையாமல் பாதுகாப்பதும், நம் கைகளில், நம் கண்ணோட்டத்தில் உள்ளன.

நமது வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்வோம். நம் குடும்பத்தின் கள்ளம் கபடமற்ற குழந்தை ஒன்று, தளிர்நடை போட்டு நடந்து சென்றபோது, அச்சிலைக்கருகே நிலை தடுமாறியதால், பளிங்குச் சிலைமேல் கை வைக்க, அது கீழே விழுந்து, உடைந்துவிட்டதென வைத்துக்கொள்வோம். அந்தச் சிலை உடைந்த சப்தத்தில், குழந்தை வீறிட்டு அழுகிறது, அல்லது, அந்தச் சிலை உடைந்தபோது, அதன் ஒரு துண்டு, குழந்தையைக் காயப்படுத்தி விடுகிறது என்றும் கற்பனை செய்துகொள்வோம். உடைந்த சிலையைவிட, அழுகின்ற குழந்தை, அல்லது காயப்பட்ட குழந்தை, நம் முழு கவனத்தைப் பெறுமல்லவா?

இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது? சிலை உடைந்தது, குழந்தை அறியாமல் செய்துவிட்ட ஒரு விபத்து என்ற கண்ணோட்டத்தால், மாற்றம் ஏற்பட்டது; சிலையை விட, குழந்தை நமக்கு முக்கியமாகிப்போனதால், மாற்றம் ஏற்பட்டது. தவறு, மன்னிப்பு, என்ற எண்ணங்களையெல்லாம் கடந்து, அழுகின்ற குழந்தையை வாரி அணைக்கவேண்டும் என்ற பாசமும், அன்பும், மற்ற எண்ணங்களையும், உணர்வுகளையும் புறந்தள்ளி விடுகின்றனவே! அது ஓர் அழகிய மாற்றம்!

அறியாமல் நடந்துவிட்டதாய் நாம் உணரும் ஒரு நிகழ்வுக்கு மன்னிப்பளிப்பது எளிது. ஆனால், மனசாட்சியே இல்லாமல், திட்டமிட்டு, குற்றம் புரிவோரைச் சந்திக்கும்போது, மன்னிக்கமுடியாமல் கஷ்டப்படுகிறோம். அத்தகையச் சூழலிலும், நாம், மன்னிப்பை எப்படி வழங்கமுடியும் என்பதுதான், அன்று, கல்வாரியில், இயேசு சொல்லித்தந்த பாடம்.

'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23:34) என்ற அற்புதச் சொற்களை நாம் அடிக்கடி கேட்டுவிட்டதால், இச்சொற்களை, இயேசு, சிலுவையிலிருந்து, மிக அமைதியாக, சர்வசாதாரணமாக, சொன்னதுபோல் உணரும் ஆபத்து உண்டு. ஆனால், இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் சொல்வதற்கு, இயேசு, உடலளவில், மரண வேதனை அடைந்திருப்பார். அதேபோல், உள்ளத்தளவிலும், இந்த வார்த்தைகளைச் சொல்லும் உன்னத நிலைக்கு வருவதற்கு, மனிதர் என்ற முறையில், இயேசு, மிகவும் போராடியிருப்பார். அந்த போராட்டத்தின் இறுதியில், இயேசு கொண்ட கண்ணோட்டமும், அதன் விளைவாய் அவர் எடுத்த முடிவும், ஓர் இறைவேண்டலாய், தந்தையை நோக்கி எழுகிறது. தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொல்கிறார்.

தெளிவாகத் திட்டமிட்டு செய்த குற்றத்தை, 'தெரியாமல் செய்ததாக' எப்படி இயேசுவால் கூறமுடிந்தது? இயேசு விண்ணகத் தந்தையிடம் பொய் சொல்கிறாரா? குற்றங்களை மூடி மறைக்கிறாரா? நம் இல்லங்களில், இதையொத்த நிகழ்வுகள், அவ்வப்போது நடப்பதை நாம் அறிவோம். மகனோ, மகளோ, தவறு செய்துவிடும்போது, அதை அப்பாவிடம் ‘பக்குவமாக’ எடுத்துச்சொல்லும் அம்மாக்களை நினைத்துப்பார்க்கலாம். பிள்ளைகள் செய்த தவறை, மூடி மறைக்கவோ, அல்லது, வேறுவிதமாகச் சொல்லவோ, அன்னையர், எத்தனை வழிகளில் முற்படுவார்கள்!

யூத குருக்களும், உரோமையப் படைவீரர்களும் செய்த குற்றங்களை, இயேசு, இறைவனிடம் சொல்வதை, இப்படி ஒரு கண்ணோட்டத்தில் நாம் சிந்தித்துப் பார்க்கலாம். பரிந்துபேசுவது என்று இதற்கு நாம் பெயரிடுகிறோம். இயேசுவின் கூற்றை, பொய் என்று சொல்வதற்குப் பதில், பரிவினால், அன்பினால் எழுந்த வித்தியாசமான ஒரு கண்ணோட்டம் என்று சொல்லமுடியும்.

உரோமைய அதிகாரிகளும், யூத மதத்தலைவர்களும், இந்த சிலுவைத் தண்டனையை ஏன் வழங்கினர் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். தாங்கள் சித்ரவதை செய்பவர், தாங்கள் சிலுவையில் அறைந்துள்ளவர், கடவுள் என்று தெரிந்திருந்தால், இப்படி செய்திருப்பார்களா? ஒரு கடவுளை, கடவுளின் மகனைக் கொல்வதற்கு, யாருமே தயங்குவார்கள். ஆனால், இயேசு, கடவுளாக அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. அவர், சாதாரணமான, மிக, மிக சாதாரணமான மனிதனாக, ஒரு தொழிலாளியாகத்தான் அவர்கள் கண்களுக்குத் தெரிந்தார். அந்த சாதாரண ஆள், தங்கள் அரசுக்கு எதிராகக் கிளம்பிவிட்டார் என்று உரோமையர்கள் நினைத்தனர். தாங்கள், இதுவரை, கட்டிக்காத்த யூத மத சட்ட திட்டங்களை எல்லாம் கேள்விக்குறியாக்கி, தாங்கள் வணங்கிவந்த யாவேயின் இலக்கணத்தையே மாற்ற முயல்கிறார் இந்த இளைஞன் என்று, யூத மதத் தலைவர்கள் நினைத்தனர். எனவே, தங்கள் அரசு அழிந்துவிடக்கூடாது என்ற அரசியல் வெறியில், தங்கள் சட்ட திட்டங்கள் மாறிவிடக்கூடாது என்ற மத வெறியில், இயேசு என்ற பிரச்சனையை, முளையிலேயே கிள்ளிவிட அவர்கள் எடுத்த முயற்சிதான், சிலுவை தண்டனை. அந்த வெறி, அவர்களது அறிவுக்கண்களை மறைத்துவிட்டது என்பதை முற்றிலும் உணர்ந்த இயேசு, தெரியாமல் செய்கிறார்கள் என்று, தந்தையிடம் விண்ணப்பம் தருகிறார். இது பொய் அல்ல. பரிவினால் எழுந்த கண்ணோட்டம்.

மன்னிப்பு நம் இயல்பாகவே மாறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பலர் சொன்ன கருத்துக்களில், நம் உள்ளங்களில் ஆழமாய்ப் பதிபவை, Mark Twain அவர்கள் சொன்ன அற்புதமான வார்த்தைகள்: “Forgiveness is the fragrance that the violet sheds on the heel that has crushed it.” அதாவது, மணமிக்க மலர், தன்னை மிதித்த கால்களில், தன் நறுமணத்தை பதிக்கிறதே; அதுவே மன்னிப்பு.

நம்மைச் சுற்றியுள்ள இயற்கையில் இதுபோல் பல நூறு எடுத்துக்காட்டுகளைக் காணலாம். தன்னைக் கசக்கிப் பிழிபவர் கையில் இனியச் சாராய் மாறுகிறதே கரும்பு, அதுவே மன்னிப்பு. தன்னைச் சுட்டெரித்தாலும் நறுமணம் தருகிறதே சந்தனம், அதுவே மன்னிப்பு. தங்களை வெட்டுகிறார்கள், விறகாய் எரிக்கிறார்கள் என்பதற்காக, மரங்கள், நிழல் தர மறுக்கின்றனவா? இல்லையே. கலீல் கிப்ரான் என்ற கவிஞர் சொன்ன வரிகள் நினைவுக்கு வருகின்றன: கொடுப்பதே மரத்தின் இயல்பு, அழகு. நிழல் கொடுக்க, கனி கொடுக்க, ஒரு மரம் மறுத்தால், அதன் இயல்பு மாறிவிடும், அது இறந்துவிடும்.

இயற்கையில் இப்படி ஒவ்வொன்றும் தங்கள் இன்னல்களைப் பெரிதுபடுத்தாமல் கொடுப்பதையே தங்கள் இயல்பாக ஆக்கிக் கொள்ளும்போது, மனித இயல்பு மட்டும், ஏன் நேரத்திற்கு ஒன்றாய் மாறுகிறது? வாழ்வில் அன்பையும், மகிழ்வையும் நிறைவாய் உணர்வதைவிட, வேறு ஓர் உயர்ந்த இயல்பு, நிறைவு, மனிதர்களுக்குக் கிடைப்பது அரிது. அந்த நிறைவை அடைவதற்கு அடித்தளம், மன்னிப்பு. மன்னிப்பு தருவதும், பெறுவதும் முழு மனித நிறைவுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் உருவாக்கிய “அமைதியின் கருவியாய் என்னை மாற்றும்” என்ற அந்த அற்புத செபத்தின் ஒரு பகுதியோடு, நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

"மன்னிப்பதாலேயே, மன்னிப்பு பெறுகிறோம்.

கொடுப்பதாலேயே பெறுகிறோம்.

இறப்பதாலேயே நிறைவாழ்வில் பிறக்கிறோம்."

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 March 2020, 15:03