உலக மகளிர் நாளை முன்னிட்டு பிலிப்பீன்ஸ், மனிலா நகரில் பெண்களின் ஊர்வலம் உலக மகளிர் நாளை முன்னிட்டு பிலிப்பீன்ஸ், மனிலா நகரில் பெண்களின் ஊர்வலம் 

பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்கள், பாவம்

பிலிப்பீன்சில் கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி நிலவியபோதிலும், உலக மகளிர் நாளன்று, பல்லாயிரக்கணக்கான பெண்கள் மனிலா உட்பட பல நகரங்களில் பேரணிகளை நடத்தினர்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

பெண்களின் மாண்புக்கு எதிராக ஆற்றப்படும் ஒவ்வொரு செயலும் பாவம் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் அதிகாரி ஒருவர் கூறினார்.

உலக மகளிர் நாளை முன்னிட்டு இவ்வாறு கூறிய, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் பெண்கள் நல பணிக்குழுத் தலைவரான, Borongan ஆயர் Crispin Varquez அவர்கள், பெண்கள் பயன்படுத்தப்படுவதும், அவர்களுக்கு எதிராக ஆற்றப்படும் அனைத்துக் குற்றங்களும், கடவுளை அவமதிப்பதாக உள்ளன என்று கூறினார்.

பாலியல் முறைகேடு, பாலியல் வன்கொடுமை, பாகுபாடு போன்றவை, பெண்களுக்கு எதிராக ஆற்றப்படும் முக்கிய உரிமை மீறல்கள் என்று கூறிய ஆயர் Varquez அவர்கள், மாண்பில், ஆணும் பெண்ணும் சமம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே, பிலிப்பீன்சில் கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி நிலவியபோதிலும், உலக மகளிர் நாளன்று, பல்லாயிரக்கணக்கான பெண்கள் மனிலா உட்பட பல நகரங்களில் பேரணிகளை நடத்தினர். மேலும், தற்போதைய அரசுத்தலைவர் துத்தர்த்தே அவர்கள் ஆட்சிக் காலத்தில், பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன என்று, அந்நாட்டு பெண்கள் அமைப்பின் செயலர் கபிரியேலா அவர்கள் கூறியதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

பிலிப்பீன்சில் பெண்களின் உரிமைகள் தொடர்புடைய 37 சட்டங்கள் உள்ளன, ஆனால் நடைமுறையில் குடும்ப வன்முறை, பாலியல் முறையில் துன்புறுத்தப்படுதல், பாலியல்  வன்கொடுமை போன்ற வடிவங்களில், பெண்கள் பரவலாக துன்பங்களை எதிர்கொள்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 March 2020, 16:18