தேடுதல்

லூர்து அன்னை திருத்தலம் லூர்து அன்னை திருத்தலம் 

வாரம் ஓர் அலசல்: ஆலயங்கள் அற்புதங்கள்

கடவுளை நம்பி, அவரிடம் செல்கின்றவர்கள் உடல் நோயில் மட்டுமன்றி உள்ள நோயிலிருந்தும் குணம் பெறுகின்றனர்.

மேரி தெரேசா: வத்திக்கான்

Louis Bouriette என்பவர், 1804ம் ஆண்டில் பிறந்தவர். இவர் லூர்து நகரில், சுரங்கத்தொழிலாளியாக வேலை செய்து, அந்நகரிலேயே வாழ்ந்து வந்தார். சுரங்கத் தொழில் காரணமாக, அவரது கண்களில் தொந்தரவு இருந்தது. 1856ம் ஆண்டில் இடம்பெற்ற சுரங்க விபத்தில், இவர் தனது வலது கண் பார்வையை முற்றிலும் இழந்தார். அப்போது அவருக்கு வயது 55. அந்த விபத்தில் அவரது அருகிலிருந்த அவரது சகோதரர் ஜோசப் உடனடியாக உயிரிழந்தார். இவர், ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள், ஒரு கண்ணில் பார்வையின்றி துன்புற்றுக்கொண்டிருந்தார். அச்சமயத்தில், 1858ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி, லூர்து நகரில், மசபியேல் குகைக்கருகில் பெர்னதெத் சுபீரு என்ற 14 வயது நிரம்பிய நாட்டுப்புற ஏழைச் சிறுமிக்கு அன்னை மரியா காட்சியளித்தார். அந்நேரத்தில், அன்னை சொற்படி பெர்னதெத் தரையைக் கிளறவே அங்கே நீரூற்று கிளம்பியது. அதற்குப் பிறகு அந்த புனித நீரைப் பயன்படுத்துவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சுரங்க விபத்தில் வலது கண் பார்வையை பறிகொடுத்திருந்த Bouriette அவர்களும், உடனடியாக அங்குச் சென்றார். அன்னை மரியாவிடம் நம்பிக்கையோடு செபித்துக்கொண்டே அற்புத நீரூற்றுத் தண்ணீரால் தன் கண்களைக் பலமுறை கழுவினார். சிறிது நேரத்தில், பார்வையை இழந்திருந்த அந்தக் கண்ணில், மீண்டும் அவர் முற்றிலும் பார்வை பெற்றார். இந்நிகழ்வு, நீண்ட மருத்துவ ஆய்வுக்குப்பின், 1862ம் ஆண்டு சனவரி மாதம் 18ம் தேதி, Tarbes நகர் ஆயர் இலாரன்ஸ் அவர்கள், இது புதுமை என, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுவே லூர்து நகரில் நடைபெற்ற முதல் புதுமை என போற்றப்படுகிறது. 1874ம் ஆண்டில் இப்புதுமை பற்றி முதல் மருத்துவ ஆய்வறிக்கை வெளியிட்ட டாக்டர் Dozous அவர்கள், "வெடி விபத்தில் கண் பார்வையை இழந்தால் அது குணமாக்க முடியாத பார்வையிழப்பாகவே இருக்கும். நாளடைவில் அது அடுத்த கண்ணையும் பார்வையிழக்கச் செய்யும் ஆபத்து உள்ளது" என்று எழுதியுள்ளார்.

லூர்து நகரில் மனமாற்றம்

கடவுளை நம்பி, அவரிடம் செல்கின்றவர்கள் உடல் நோயில் மட்டுமன்றி உள்ள நோயிலிருந்தும் குணம் பெறுகின்றனர். இத்தாலியிலுள்ள யூனித்தால்சி என்ற நோயாளர் பராமரிப்பு பிறரன்பு அமைப்பு, ஒவ்வோர் ஆண்டும் நோயாளிகளை லூர்து நகருக்கு அழைத்துச் சென்று வருகின்றது. ஒருமுறை இவ்வாறு பல நோயாளிகளுடன் சென்ற நோயாளி ஒருவர், எவருக்கும் தெரியாமல் ஒரு கைத் துப்பாக்கியையும் தன்னுடன் எடுத்துச் சென்றார். இவர் சக்கர நாற்காலியில் நடக்க இயலாமல் இருந்தவர். மாதா குணமளித்தால் சரி, இல்லையென்றால், அந்த இடத்திலேயே என்னையே சுட்டுக்கொன்று விடுவேன் என்று தனக்குத்தானே சபதமிட்டுச் சென்றிருந்தார். லூர்து நகர் சென்ற அவர்கள் அனைவரும், அன்னை மரியா காட்சியளித்த கெபியின் முன்பாக அமர்த்தப்பட்டனர். அனைவரும் அன்னை மரியாவிடம் செபித்தனர். ஒவ்வொருவர் மீதும் புனித நீரூற்றுத் தண்ணீர் தெளிக்கப்பட்டது. அந்த குறிப்பிட்ட நோயாளி மீதும் புனித தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆனால் அவர் குணமடையவில்லை. அந்நேரத்தில் அவர் அன்னை மரியா திருவுருவத்தை நோக்கினார். அவர் மனதில் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ, தெரியவில்லை, அனைவரும் வியந்து பார்க்கும் முறையில், சிறிது நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தார். அதை அங்கு நின்ற அருள்பணியாளரிடம் கொடுத்தார் அவர். பின்னர், அன்னை மரியா திருவுருவத்தைப் பார்த்துச் சொன்னார் - அம்மா நீர் வென்றுவிட்டீர் என்று. ஆம். உடல் நலம் பெற வந்தவர், உள்ள நலம் பெற்று, புது மனிதராக ஊர் திரும்பினார்.

அருள்சகோதரி Bernadette Moriau

பிரெஞ்ச் அருள்சகோதரி Bernadette Moriau என்பவர், 1980ம் ஆண்டிலிருந்து முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, எழுந்து நடக்கவியலாமல், முழுவதும் மாற்றுத்திறனாளியாக, சக்கர நாற்காலியில் இருந்து வந்தார். கடுமையான வலியைக் குறைப்பதற்கு கொடுக்கப்படும், மார்ஃபின் என்ற வலி நிவாரணி மருந்தையும் இவர் எடுத்து வந்தார். அருள்சகோதரி Moriau அவர்கள், லூர்து அன்னை திருத்தலத்திர்கு பலமுறை சென்றுள்ளார். ஆனால் அவர் ஒருபோதும் தான் குணம் பெற வேண்டுமென்று அன்னை மரியாவிடம் மன்றாடியதில்லை. இருந்தபோதிலும், 2008ம் ஆண்டில், அவர் லூர்து அன்னை திருத்தலத்திற்குச் சென்றபோது, அங்கு நோயாளிகளை ஆசீர்வதிக்கும் வழிபாட்டில் கலந்துகொண்ட பின், தன்னில் ஏதோ மாற்றம் நிகழ்வதாக உணர்ந்தார். அந்த நாளை அருள்சகோதரி Moriau அவர்கள், செய்தியாளர்களிடம் இவ்வாறு பகிரந்துகொண்டுள்ளார்.

நோயாளிகளை ஆசீர்வதிக்கும் வழிபாட்டில் நான், உடல் முழுவதும் நலமாக இருப்பதாக உணர்ந்தேன். பின்னர் எனது அறைக்குத் திரும்பினேன். அங்கு, எனது முதுகைப் போர்த்தியிருக்கும் கவசத்தை கழற்று என்ற ஒரு குரல் எனக்குள் கேட்டது. நானும் வியந்து, உடனடியாக அதைக் கழற்றினேன். என்னால் நகர முடிந்தது. உடனடியாக சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து, கவசத்தையும், வலிநிவாரண மருந்துகளையும் ஒதுக்கி வைத்தேன்....

லூர்து அன்னை மரியா திருத்தலத்தில், அருள்சகோதரி Moriau அவர்கள், தனக்கு நிகழ்ந்த அற்புதத்தை, அத்திருத்தல பன்னாட்டு மருத்துவ ஆய்வு மையத்தில் பகிர்ந்துகொண்டனர். பின்னர், அந்நிகழ்வு, அச்சகோதரி வாழ்ந்த Beauvais மறைமாவட்ட ஆயர் Jacques Benoit-Gonin அவர்களிடம் விளக்கப்பட்டது. ஏனெனில் அந்நிகழ்வு பற்றிய ஆய்வுக்கு, தலத்திருஅவை ஆயர் முதலில் அனுமதியளிக்க வேண்டும். மேலும், நீண்ட கால மருத்துவ ஆய்வுகளுக்குப்பின், இவர் குணம் பெற்றதை, அறிவியல் முறைப்படி விளக்க இயலவில்லை என்று அந்த மையம் அறிவித்தது. பிரெஞ்ச் அருள்சகோதரி Moriau அவர்கள் குணமடைந்த நிகழ்வு, லூர்து அன்னை மரியா திருத்தலத்தில் நடைபெற்ற எழுபதாவது புதுமையாக, 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, அத்திருத்தலத்தில் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அன்னை மரியாவை முதல்முறை காட்சியில் கண்ட சிறுமி பெர்னதெத் காலத்திலிருந்து, இன்று வரை, ஏழாயிரத்திற்கு அதிகமான அற்புதங்கள் நடந்துள்ளதாக, திருப்பயணிகள் லூர்து நகர் மருத்துவ தகவல் மையத்தில் பதிவுசெய்துள்ளனர். 1883ம் ஆண்டிலிருந்து, 70 புதுமைகள் என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

உலகில் எல்லா மதங்களிலும் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன. ஆனால், பக்தர்கள், எல்லா ஆலயங்களுக்கும் திரளாகச் செல்வதில்லை. சில குறிப்பிட்ட இடங்களுக்கு, புதுமைகள் நிகழும் என்ற ஒருவித ஆழ்ந்த நம்பிக்கையில் செல்கின்றனர். அந்த குறிப்பிட்ட ஆலயங்களுக்குச் செல்லும் திருப்பயணிகள், தங்களுக்கோ, மற்றவர்களுக்கோ, தீராத உடல் நோய்கள் அற்புதமாய் குணமடைந்தது, இன்னும் அத்திருத்தலங்களில் கிடைக்கும் ஒருவித நிம்மதியால் அங்குச்  செல்கின்றனர். அங்குச் செல்பவர்களில் சிலர், தங்கள் உடல் நோய்களிலிருந்து உடனடியாக குணம் பெறுகிறார்கள். மற்றவர்களோ ஒருவித உள்ளார்ந்த நிம்மதியுடன் திரும்புகிறார்கள். எல்லாமே அவரவர் நம்பிக்கையை பொருத்தது. கடவுளிடம் கேட்ட வரம் உடனடியாக கைகூடவில்லையென்றால், என்னைப் படைத்த பகவானுக்கு, எது, எப்போது, எனக்கு நல்லது என்பது என்னைவிட அவருக்கு நன்றாகவே தெரியும் என்ற நல்லுணர்வுடன் திரும்புகிறார்கள். அது உண்மையும்கூட. விமானத்தையோ, இரயில் பயணத்தையோ தவறவிட்ட எத்தனையோ பேர், பின்னர் அந்தப் பயணத்தில் ஏற்பட்ட விபத்தை கேள்விப்பட்டவுடன், கடவுளே, நல்ல நேரத்தில் என்னை தாமதிக்க வைத்தாய் என்று நன்றி சொல்கின்றனர்.

மனிதர் தோன்றிய காலம் முதல், இன்று வரை, வாழ்வில் புதியன படைத்து வருகின்றனர். ஆனால், காலம் செல்லச் செல்ல, மனிதரின் புதியன படைக்கும் ஆசைகள் பேராசைகளாக மாறிவிட்டன. எனவே மனிதரை புதிரான நோய்களும், நோய்த்தொற்றுக் கிருமிகளும் தாக்கி அச்சத்தை உருவாக்கி வருகின்றன. எதிர்பாராத இயற்கைப் பேரிடர்கள் ஏராளமான சேதங்களை உருவாக்குகின்றன. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்றுக்கிருமியால், இஞ்ஞாயிறு கணக்குப்படி, சீனாவில் பலி எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது, இத்தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 37,000 ஆக அதிகரித்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. பிப்ரவரி 11, இச்செவ்வாய், லூர்து அன்னை விழா. 28வது உலக நோயாளிகள் நாள். இந்நாளில், தீராத நோய்களால், குறிப்பாக கொரோனா தொற்றுக் கிருமியால் தாக்கப்பட்டவர்கள் பூரண குணம் அடையவும், பேராசை எனும் நோயிலிருந்து மனிதர் குணம் பெறவும், குணமளிக்கும் லூர்து அன்னையிடம் மன்றாடுவோம். சுத்தமும், சுகாதாரமும் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் இருப்பதுதான் பல்வேறு விதமான நோய்களுக்கு அடிப்படையான காரணம் என உணர்ந்து, உடல் மற்றும், மனச் சுத்தத்தில் அக்கறை காட்டுவோம்.

வாரம் ஓர் அலசல்: ஆலயங்கள் அற்புதங்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2020, 13:14