தேடுதல்

புர்கினா ஃபாஸோ Kaya பேராலயத்தில் திருப்பலி புர்கினா ஃபாஸோ Kaya பேராலயத்தில் திருப்பலி 

ஆப்ரிக்காவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

புர்கினா ஃபாஸோ நாட்டின் Yahgha மாவட்டத்தின் கிறிஸ்தவ கோவில் ஒன்றில், கடந்த ஞாயிறன்று புகுந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், 24 பேரைக் கொன்று, 18 பேரை காயப்படுத்திச் சென்றுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

புர்கினா ஃபாஸோ, மற்றும், காமரூன் நாடுகளில் கோவில்களில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த விசுவாசிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து, தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார், உலக கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் பொதுச் செயலர்.

கடந்த ஞாயிறன்று புர்கினா ஃபாஸோ நாட்டிலும், வெள்ளியன்று காமரூன் நாட்டிலும் கிறிஸ்தவ கோவில்களுக்குள் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து கவலையையும் கணடனத்தையும் வெளியிட்ட WCC  எனும் உலக கிறிஸ்தவ சபைகளின் மன்றச் பொதுச்செயலர் Olav Fykse Tveit அவர்கள், இத்தகைய வன்முறை நடவடிக்கைகள் மனித குலமனைத்திற்கும் எதிரானது என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து அமைதி மற்றும், நீதிக்காக உழைக்க வேண்டியுள்ளது என்றார்.

புர்கினா ஃபாஸோ நாட்டின் Yahgha மாவட்டத்தின் கிறிஸ்தவ கோவில் ஒன்றில் கடந்த ஞாயிறன்று புகுந்த இஸ்லாமிய தீவிரவாதிகள், 24 பேரைக் கொன்று, 18 பேரை காயப்படுத்திச் சென்றுள்ளது பற்றி குறிப்பிட்ட, உலக கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர், இம்மாதம் 10ம் தேதி Sebba நகரில் கோவில் ஒன்றிலிருந்து 7 பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதையும், அதற்கு மூன்று நாட்களுக்குப்பின், ஒரு கிறிஸ்தவ போதகர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

2015ம் ஆண்டிலிருந்து புர்கினா ஃபாஸோ நாட்டில் ஏறத்தாழ 750 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 6 இலட்சத்திற்கு அதிகமானோர் குடியிருப்புகளிலிருந்து வேறு இடங்களுக்கு குடிபெயர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நாட்டின் வடபகுதியில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இதற்கிடையே, கடந்த வெள்ளியன்று, காமரூன் நாட்டின் Ntumbo எனும் கிராமத்தில்,  ஆயுதம் தாங்கிய மனிதர்களால் 14 குழந்தைகள் உட்பட 22 பேர் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். வன்முறைகள் தொடர்வதால் இந்நாட்டிலிருந்து ஏறத்தாழ 60 ஆயிரம் பேர், நைஜீரியாவுக்குள் அடைக்கலம் தேடியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2020, 15:15