கர்தினால் Gianfranco Ravasi அவர்களுடன் வெனிஸ் முதுபெரும் தந்தை பிரான்செஸ்கோ மொராலியா (இடதுபுறம்) கர்தினால் Gianfranco Ravasi அவர்களுடன் வெனிஸ் முதுபெரும் தந்தை பிரான்செஸ்கோ மொராலியா (இடதுபுறம்) 

வெனிஸ் முதுபெரும் தந்தையின் தவக்காலச் செய்தி

அனைத்தும் தன் சக்திக்கு உட்பட்டது என்ற மாயையில் இருக்கும் நமது தலைமுறை விழித்தெழுவதற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு, நாம் தற்போது சந்தித்துவரும் கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி - வெனிஸ் முதுபெரும் தந்தை மொராலியா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அனைத்தும் தன் சக்திக்கு உட்பட்டது என்ற மாயையில் இருக்கும் நமது தலைமுறை விழித்தெழுவதற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு, நாம் தற்போது சந்தித்துவரும் கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி என்று இத்தாலிய தலத்திருஅவை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வெனிஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றும் முதுபெரும் தந்தை பிரான்செஸ்கோ மொராலியா அவர்கள், இத்தவக்காலத்தின் துவக்கத்தில், இத்தாலி நாடு எதிர்கொண்டிருக்கும் தொற்றுக்கிருமி நெருக்கடியை மையப்படுத்தி, தன் தவக்காலச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

நம்மைப் படைத்தவரும், நம் தந்தையுமான கடவுள் இல்லாமல் வாழமுடியும் என்ற எண்ணம் வெறும் மாயை என்பதை நமக்கு உணர்த்தும் இந்த நெருக்கடி நேரத்தில், அரசியல் பொறுப்புணர்வுடனும், சமுதாயக் கட்டுப்பாட்டுடனும், பிறரன்புடனும் செயலாற்ற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று முதுபெரும் தந்தை பாலியா அவர்களின் செய்தி கூறுகிறது.

திருவழிபாட்டின் முக்கியமான காலமாகக் கருதப்படும் தவக்காலத்தில், பொதுவான வழிபாடுகளில் கலந்துகொள்ள கட்டுப்பாடுகள் எழுந்திருப்பது, புதிய வழிகளில் வழிபடவும், தனிப்பட்ட, மற்றும் குடும்ப வேண்டுதல்களை அதிகரிக்கவும் நமக்கு வாய்ப்பளிக்கிறது என்று, முதுபெரும் தந்தை பாலியா கூறியுள்ளார்.

கூட்டமாக வழிபாடுகளில் ஈடுபட இயலாத இத்தருணத்தில், சிலுவைப்பாதை, விவிலிய வாசகங்கள், ஒப்புரவு அருளடையாளம், திரு நற்கருணை வழிபாடு என்ற தனிப்பட்ட பக்தி முயற்சிகளில் ஈடுபட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, வெனிஸ் பேராயரின் செய்தி கூறுகிறது.

இந்த பக்தி முயற்சிகளுடன், துன்புறுவோர், தேவையில் இருப்போர் ஆகியோரைத் தேடிச்சென்று உதவிகள் செய்வதற்கும், இந்த ஆண்டின் தவக்காலம் நம்மை சிறப்பாக அழைக்கிறது என்று முதுபெரும் தந்தை பாலியா அவர்கள் இச்செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 February 2020, 15:05