தேடுதல்

Vatican News
மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுவதன் வழியே அமைதியைக் கொணர்பவர்கள் - மத்தேயு 5:38-42 மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுவதன் வழியே அமைதியைக் கொணர்பவர்கள் - மத்தேயு 5:38-42 

பொதுக்காலம் 7ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

தீமையின் அளவு, அதற்கு இணையான ஈடு என்ற எண்ணங்களை முன்னிறுத்தாமல், அளவற்ற அன்பையும், மன்னிப்பையும் முதன்மைப்படுத்தும் புதிய சட்டங்களை, இயேசு, வழங்கியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 7ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

2020ம் ஆண்டு, சனவரி முதல் தேதி, புத்தாண்டு நாளன்று, பல நாளிதழ்களில், "திருத்தந்தை பிரான்சிஸ், ஒரு பெண்மணியை அறைந்துவிட்டார்" என்ற தலைப்பில் செய்தியொன்று வெளியானது.

நடந்தது இதுதான்... 2019ம் ஆண்டின் இறுதிநாள், டிசம்பர் 31ம் தேதி மாலையில், 'தெ தேயும்' என்ற நன்றி வழிபாட்டினை புனித பேதுரு பெருங்கோவிலில் வழிநடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வழிபாட்டிற்குப்பின், புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குடிலைக் காண்பதற்குச் சென்றார். அவரைக் காண காத்திருந்த கூட்டத்தில் ஒரு பெண், திருத்தந்தையின் கரங்களை இறுகப்பற்றி, அவரை தன் பக்கம் இழுத்தார். அதனால், நிலைத்தடுமாறிய திருத்தந்தை, அப்பெண்ணின் கரங்களைத் தட்டிவிட்டார். திருத்தந்தை, அப்பெண்ணின் கரங்களைத் தட்டிவிட்டதை, 'அறைதல்' என்று பொதுவாக பொருள்கொள்ளப்படும் 'slap' அல்லது 'smack' என்ற சொற்களால் ஊடகங்கள் குறிப்பிட்டன.

ஆண்டின் இறுதி நாளன்று நிகழ்ந்த இந்நிகழ்வைக் குறித்து, அடுத்த நாள், புத்தாண்டு நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பு கேட்டார். புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, "நாம் பல வேளைகளில் பொறுமை இழக்கிறோம், என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். நேற்று நான் இந்த வளாகத்தில் அளித்த தவறான எடுத்துக்காட்டுக்காக மன்னிப்பு கேட்கிறேன்" என்று கூறினார்.

"திருத்தந்தை மன்னிப்பு கேட்டது, மற்ற தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமையக்கூடும்" என்ற தலைப்பில், இரண்டு நாள்கள் சென்று, சனவரி 4ம் தேதி, The Guardian என்ற ஆங்கில நாளிதழில் Gwendolyn Smith என்ற எழுத்தாளர், ஒரு கருத்துக் கட்டுரையை வெளியிட்டிருந்தார். செய்த தவறுகளுக்காக மனம் வருந்துவது, மற்றும், மன்னிப்பு கேட்பது ஆகிய நற்செயல்களுக்கு, ஓர் அழகிய பாடமாக, திருத்தந்தை, மக்கள் முன், பொதுவில் மன்னிப்பு கேட்டது, அமைந்துள்ளது என்று, இக்கட்டுரை ஆசிரியர் கூறியுள்ளார். இந்த மன்னிப்பை தான் உயர்த்திப் பேசுவதற்கு காரணங்கள் என்ன என்பதையும் ஸ்மித் அவர்கள், விளக்கிக் கூறியுள்ளார்.

"இந்த மன்னிப்பு, உடனடியாக, அதாவது, 24 மணி நேரங்களுக்குள் கேட்கப்பட்டது என்பது, முதல் காரணம். நாம் தவறு செய்யும்போது, குறிப்பாக, ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம், தலைவர்கள் தவறு செய்யும்போது, உடனடியான மனவருத்தமும், மன்னிப்பும் வெளிப்படவில்லையெனில், ஊடகங்கள், அச்செயலுக்கு, பல்வேறு காரணங்களை வழங்கி, மன்னிப்பு கேட்கமுடியாத அளவு, அதை அரசியலாக்கிவிடும். இதனால், தலைவர்களில் பலர், தாங்கள் செய்த தவறை நியாயப்படுத்தவும், பொய்யான காரணங்களை வெளியிடவும் வேண்டிவரும்" என்று ஸ்மித் அவர்கள் கூறியுள்ளார்.

"இரண்டாவது காரணம், திருத்தந்தை, தன் தவறை மறைக்காமல், பூசி மெழுகாமல், உள்ளதை உள்ளபடியே கூறி, தான் தவறான எடுத்துக்காட்டாக இருந்ததற்காக மன்னிப்பு கேட்டார். திருத்தந்தை என்ற உயர் பொறுப்பை ஏற்றதால், சாதாரண மனித நிலையிலிருந்து வெகு உயரத்திற்குச் சென்றுவிட்டதைப் போன்ற கற்பனையை உருவாக்காமல், தானும் ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவாக்கியதால், இந்த மன்னிப்பு, உள்ளார்ந்த, உண்மையான மனவருத்தத்துடன் ஒலித்தது" என்று, இக்கட்டுரையின் ஆசிரியர் தொடர்ந்து கூறியுள்ளார்.

அவர் இக்கட்டுரையில் வெளியிடும் மற்றொரு முக்கிய கருத்து இது: “வயதில் முதிர்ச்சி பெற்ற ஒருவர் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது, பெரும் சாதனை அல்ல, அது மனித வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம். குறிப்பாக, ஒருவர், தன் இளமையின் முக்கியமான ஆண்டுகளை, கல்விக்கூடத்தில் செலவிட்டபின், அதைவிட்டு வெளியேறும்போது கற்றுக்கொள்ளவேண்டிய பல முக்கிய பாடங்களில், மன்னிப்பு கேட்பதும் ஒன்று. ஆனால், நம் கல்விக்கூடங்கள், போட்டியிடுவது, வெற்றியடைவது, சாதனை புரிவது என்ற பாடங்களையே அதிகம் வலியுறுத்தும்போது, மனித உணர்வுகளால் நிகழும் தவறுகளை எவ்விதம் எதிர்கொள்வது என்ற பாடத்தைச் சொல்லித்தருவது மிக அரிதாக உள்ளது” என்று கூறும் இக்கட்டுரையின் ஆசிரியர் ஸ்மித் அவர்கள், தொடர்ந்து, இக்கட்டுரையில், இன்றைய தலைவர்கள் பலர் தங்கள் தவறுகளை மூடிமறைக்க மேற்கொண்டுவரும் ஒரு சில பரிதாபமான முயற்சிகளையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.

இந்நிகழ்வை இன்று எண்ணிப்பார்க்க, இந்த ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியே முக்கியக் காரணம். தவறுகள் செய்வது, மனித இயல்பு. அத்தவறுகளை, நாம் செய்யும்போது, அல்லது, அத்தவறுகளால் நாம் பாதிக்கப்படும்போது, நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதை, இன்றைய நற்செய்தியின் வழியே, இயேசு விடுக்கும் ஒரு சில சவால்களுடன் இணைத்து சிந்திக்க முயல்வோம்.

'பழிக்குப் பழி', 'பல்லுக்குப் பல்' 'கண்ணுக்குக் கண்' ... இவை எதுவுமே கிறிஸ்தவ வாழ்வுமுறை அல்ல என்பதை, இன்றைய நற்செய்தி வழியே இயேசு, ஆழமாய் சொல்லித்தருகிறார். 'பழிக்குப் பழி' என்பது, இஸ்ரயேல் மக்களிடமும், அவர்களைச் சுற்றி வாழ்ந்த பல இனத்தவரிடமும் பழக்கத்தில் இருந்த வழிமுறை. பாபிலோனிய மன்னன் ஹம்முராபி உருவாக்கியச் சட்டங்கள், ஒருவர் எந்த அளவுக்கு பழிக்குப் பழி வாங்கலாம் என்பதை, நிர்ணயித்தன. மோசே வழங்கிய சட்டங்கள், மன்னன் ஹம்முராபியின் சட்டங்களை ஓரளவு எதிரொலித்தன. பழிக்குப் பழி என்ற வெறி, கட்டுக்கடங்காமல் போவதைத் தடுக்க, ஒருவருக்கு மற்றொருவர் இழைத்த தீங்கிற்கு ஈடான தண்டனைகள் வழங்கப்படலாம் என்பதை, மோசேயின் சட்டம் நிலைநாட்டியது. அதுவே, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற மந்திரமாக இஸ்ரயேல் மக்கள் நடுவே நிலவிவந்தது (விடுதலைப் பயணம் 21:23-25).

இந்த மந்திரத்தை தலைகீழாகப் புரட்டிப்போட முன்வந்தார் இயேசு. தீமையின் அளவு, அதற்கு இணையான ஈடு என்ற எண்ணங்களை முன்னிறுத்தாமல், அளவற்ற அன்பையும், மன்னிப்பையும் முதன்மைப்படுத்தும் புதிய சட்டங்களை, இயேசு, தன் மலைப்பொழிவில் வழங்கியுள்ளார்:

மத்தேயு நற்செய்தி 5: 38-39

அக்காலத்தில் இயேசு தன் சீடர்களிடம் கூறியதாவது: “‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.” என்பது, இன்றைய நற்செய்தியின் அறிமுகச் சவால்.

இயேசுவின் இக்கூற்றில், அவர், 'வலக்கன்னம்' என்று குறிப்பிட்டுச் சொன்னது, நம் சிந்தனையைத் தூண்டுகிறது. "உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் காட்டுங்கள்" என்று இயேசு சொல்லவில்லை. உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்பதே, இயேசு வழங்கும் சவால்.

நம்மில் பலர், வலது கை பழக்கம் உள்ளவர்கள் என்பதை அறிவோம். இதை மனதில் வைத்து சிந்திக்கும்போது, நமக்கு முன் நிற்கும் ஒருவரை, நாம் வலது கையால் அறைந்தால், அந்த அறை, அவரது இடது கன்னத்தில் விழும். ஆனால், நமக்கு முன்னிருப்பவரை, புறங்கையால் அறையும்போது, அவரது வலது கன்னத்தில் அறை விழும். புறங்கையால் அறைவது என்பது, வெறும் உடல் வேதனையை மட்டுமல்ல, அத்துடன், அவமானத்தையும் கலந்து வழங்கும் ஓர் அறை.

Paul Penley என்ற விவிலிய ஆய்வாளர், "மறுகன்னத்தை திருப்பிக் காட்டுதல்" என்ற தலைப்பில் எழுதியள்ள கட்டுரையில், மறுகன்னத்தைக் காட்டுவதுபற்றி, ஆழமாக ஆய்வு செய்துள்ளார்.

யூதேயாவை ஆக்கிரமித்திருந்த உரோமைய அரசின் படைவீரர்கள், இஸ்ரயேல் மக்களை ஒவ்வொரு நாளும் சீண்டிப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைந்தனர். யூதர்கள் உடுத்தியிருந்த உடைகளையும், உடைமைகளையும், பறித்துச்செல்வது, ஏதாவது ஒரு பொருளை வீரர்கள் சுமக்கவேண்டியச் சூழலில், எதிரே ஒரு யூதர் வந்துவிட்டால், அவர் அந்த சுமையைச் சுமந்து, தன்னுடன் வருவதற்கு கட்டாயப்படுத்துவது என்று, பல அநீதிகள் அரங்கேறின. அந்நேரங்களில், யூதர்கள், உரோமைய வீரர்களை எதிர்த்தால், அவர்களிடையே கைகலப்பும் உருவானது.

பொதுவாக, ஒரு கைகலப்பு நிகழும்போது, உரோமைய வீரர்கள், தங்களுக்குச் சமமான மற்றொரு உரோமையரை அறைய வேண்டியிருந்தால், வலது கரத்தின் உள்ளங்கையால் அறையக்கூடும், எனவே, தாக்கப்பட்ட உரோமையரின் இடது கன்னத்தில் அறை விழும். ஆனால், ஒரு யூதருடன் கைகலப்பு நிகழும்போது, அந்த யூதர், தனக்குச் சமமானவர் அல்ல என்பதை நிலைநாட்டும்வண்ணம், உரோமைய வீரர், வலது கரத்தின் புறங்கையால் அவரைத் தாக்குவார், எனவே, அவரது வலக்கன்னத்தில் அறை விழும்.

இந்த அநீதிகள் அனைத்தையும் உணர்ந்திருந்த இயேசு, அநீதிகளை ஒழிப்பதற்குத் தேவையான வழிகளை இன்றைய நற்செய்தியில் சொல்லித்தருகிறார். உரோமையர்களுக்கு மட்டுமல்ல, தங்களை, தாழ்ந்தவர்கள் என்று கருதி, புறங்கையால் அறைபவர்கள் அனைவருக்கும், யூதர்கள், தங்கள் மறுகன்னத்தைக் காட்டுவதால், சொல்லித்தரக்கூடிய பாடத்தை, வார்த்தைகளில் வடித்தால், இவ்விதம் இருக்கும் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார்: "என்னை இரண்டாம் தர மனிதராக எண்ணி, புறங்கையால் அறைந்துவிட்டீர். இதோ, என் மறுகன்னம். முடிந்தால், இங்கு அறையும். அப்படி அறைவதால், என்னை உமக்குச் சமம் என்று நீர் ஏற்கவேண்டியிருக்கும். உம்மால் முடியுமா?" என்று, சவால் விடுக்கும் செயல் இது.

அதேபோல், தன் அங்கியைப் பறிப்பவருக்கு, மேலாடையையும் சேர்த்து வழங்குவது; ஒரு கல் தொலை, சுமை சுமக்க வற்புறுத்துபவருடன், இரு கல் தொலை நடப்பது என்ற வழிகளைப் பின்பற்றினால், அநீதமாக நடந்துகொள்பவர்கள், நீதியை உணர்வதற்கு அது வழி வகுக்கும் என்பதை, "ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்ற சொற்கள் வழியே, இயேசு, உயர்ந்த சவால்களாக நம்முன் வைக்கிறார்.

மறுகன்னத்தைக் காட்டுவது, மேலாடையையும் சேர்த்துத் தருவது, கூடுதல் ஒரு மைல் நடப்பது ஆகிய நற்செயல்கள், புண்ணியத்தில் நாம் வளர்வதற்குச் சிறந்த வழிகள் என்ற கோணத்திலும் எண்ணிப்பார்க்கலாம். ஆனால், அது, இயேசுவின் கண்ணோட்டம் அல்ல. மறுகன்னத்தைக் காட்டுவதால், நமக்குள் நல்ல மாற்றங்கள் உருவாகும் நேரத்தில், நம்மைத் தாக்கும் பகைவரிடம் மாற்றம் எதுவும் நிகழவில்லையெனில், நாம் மறுகன்னத்தைக் காட்டுவதில் அர்த்தமில்லை. நாம் மறுகன்னத்தைக் காட்டுவதால், நமது பகைவரிடமும் மாறுதல்கள் வரவேண்டும். அந்த மாறுதல்கள், திரைப்படங்களில் வருவதுபோல், ஒரு நொடியிலோ, ஒரு நாளிலோ வராது என்பதை, நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், அம்மாறுதல்கள் வரும்வரை, நாம் இந்த நற்செயல்களை, நம்பிக்கையோடு தொடரவேண்டும். இதுதான் இயேசு நமக்கு முன் வைக்கும் சவால்.

இயேசுவின் சவாலை ஏற்பதற்குப் பதில், நமது ஊடகங்கள், ஒவ்வொருநாளும் தரும் பெரும்பாலான செய்திகள், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்ற பழிவாங்கும் செய்திகளே. பழிக்குப் பழி என்று, மனித வரலாற்றை, இரத்தத்தில் எழுதுவோரைப்பற்றி, ஒரு சீனப் பழமொழி இவ்வாறு சொல்கிறது: "பழிக்குப் பழி வாங்க நினைப்பவர், இரு சவக் குழிகளைத் தோண்ட வேண்டும். ஒன்று மற்றவருக்கு, மற்றொன்று தனக்கு."

இவ்வுலகை, ஒரு கல்லறைக்காடாக மாற்றிவரும் பழிக்குப் பழி என்ற உலக மந்திரத்திற்கு எதிராக, இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்வு, அனைவர் மனதிலும் அழியாமல் பதிந்திருக்கும் என்பது, என் நம்பிக்கை. ஒடிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியினரிடையே, குறிப்பாக, தொழுநோயாளர்கள் மத்தியில் உழைத்து வந்த Graham Staines என்ற கிறிஸ்தவப் போதகரையும், Philip, Timothy என்ற, அவரது இரு மகன்களையும் 1999ம் ஆண்டு சனவரி மாதம் உயிரோடு எரித்துக்கொன்ற தாரா சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை இரத்து செய்யுமாறு, கொல்லப்பட்ட போதகரின் மனைவி, Gladys Staines அவர்கள் கேட்டுக்கொண்டார் என்ற செய்தியை நாம் அறிவோம். “மன்னிப்பில் மட்டுமே நம்பிக்கை வளரும்” என்று Gladys அவர்கள் சொன்னதும் நமக்கு நினைவிருக்கலாம்.

மன்னிப்பதால், மறுகன்னத்தைக் காட்டுவதால், இவ்வுலகம் நம்பிக்கையில் வளரும் என்பதை அனைவரும் உணரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று மன்றாடுவோம். மறுகன்னத்தை நாம் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களின் மனங்களை மாற்றும் கனிவையும், துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

22 February 2020, 15:13