முதலில், அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத். 5: 24) முதலில், அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத். 5: 24) 

பொதுக்காலம் 6ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

"ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்ற சொற்களின் வழியே, மோசே சட்டங்களை ஒருபடி மேலே உயர்த்தும் இயேசு, கிறிஸ்தவ வாழ்வுக்கு, மூன்று சவால்களை முன் வைக்கிறார்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 6ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

சென்ற ஞாயிறு நற்செய்தியில் இயேசு கூறிய உப்பு, ஒளி ஆகிய இரு உருவகங்கள் நம் உள்ளங்களில் பதிந்தன. இந்த ஞாயிறன்று, வேறு இரு உருவகங்கள் இன்றைய முதல் வாசகத்தின் வழியே நமக்கு வழங்கப்படுகின்றன. சீராக்கின் ஞானம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம், நீர், நெருப்பு என்ற இரு உருவகங்களை தருவதோடு, எளிய சொற்களில், அழகான, ஆழமான வாழ்க்கைப் பாடங்களையும் நமக்கு உணர்த்துகின்றது. இவ்வாசகத்தின் அறிமுகப் பகுதி இதோ:

சீராக்கின் ஞானம் 15: 15-17

நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொருத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி, உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன், வாழ்வும், சாவும், வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.

நீரா, நெருப்பா, எதை கைநீட்டி எடுப்பது? வாழ்வா, சாவா, எதை விரும்புவது? என்ற கேள்விகளுக்கு, அறிவுப்பூர்வமாக, எளிதில் பதில் சொல்லிவிடலாம். ஆனால், வாழ்வில், அறிவு மட்டுமா நம்மை வழிநடத்துகிறது? இல்லையே! ஆசைகள், ஏக்கங்கள், உணர்வுகள், பல்வேறு பழக்கங்கள் என்று, வேறு பல சக்திகளும் நம்மை வழிநடத்துகின்றனவே. இத்தகையச் சக்திகளால் உந்தப்பட்டு, நாம், நெருப்பை, கைநீட்டி எடுத்த நேரங்களை நினைத்துப் பார்க்கலாம்.

தனிப்பட்டவர்களாக மட்டுமல்ல, இன்றையச் சூழலில், நம் ஒட்டுமொத்த சமுதாயமும், நெருப்புடன் விளையாடுவதை, பழக்கப்படுத்திக்கொண்டு வருகிறதோ என்ற கவலை எழுகிறது. குறிப்பாக, சுற்றுச்சூழல் சீரழிவு என்ற நெருப்புடன் விளையாடுவதில், வர்த்தக நிறுவனங்களும், உலக அரசுகளும் தீவிர ஆர்வம் கொண்டுள்ளன என்பது, வேதனையான உண்மை. சுற்றுச்சூழல் சீரழிவினால், ஆஸ்திரேலியா, கடந்த சில மாதங்கள், நெருப்புடனும், தற்போது நீருடனும் போராடிவருவதை நாம் அறிவோம். அங்கு நிகழ்ந்தவை, நமக்குத் தேவையான பாடங்களைச் சொல்லித்தந்துள்ளனவா என்ற கேள்விக்கு, காலம்தான் பதில்சொல்லும்.

கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில், மூன்று மாதங்களாக, 600,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட காடுகளும், ஊர்களும் பற்றியெரிந்ததற்கு, அங்கு நிலவிய வறட்சியே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது, ஆஸ்திரேலியாவின் பல பகுதிகள், வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. உலகின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியும், வேறு பகுதிகளைச் சூழும் பெரு வெள்ளமும், வர்த்தக உலகினரின் கட்டுக்கடங்காத பேராசையால் உருவாக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் சீரழிவின் எதிரொலிகள் என்று, அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் சீரழிவுபற்றிய எச்சரிக்கைகளைக் காணமறுத்து, கண்களைக் கட்டிக்கொண்டு, நெருப்புடன் விளையாட விரும்பும் உலகத் தலைவர்களும், அத்தலைவர்களின் ஆபத்தான விளையாட்டை கண்டும், கண்களை மூடி வாழும் நாம் அனைவரும், விழித்தெழவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் (பிப்ரவரி 12ம் தேதி), ஒரு மடல் வழியே விண்ணப்பித்துள்ளார்.

உலகின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் பகுதிக்கு இழைக்கப்படும் அழி்வுகளையும், அவற்றைத் தடுக்கும் வழிகளையும் மையப்படுத்தி, வத்திக்கானில், சென்ற ஆண்டு, அக்டோபர் மாதம் (6 முதல் 27ம் தேதி முடிய) நிகழ்ந்த ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு திருத்தூது அறிவுரை மடலை எழுதியுள்ளார். “அன்புக்குரிய அமேசான்” என்று பொருள்படும், “Querida Amazonia” என்ற தலைப்பில் திருத்தந்தை எழுதியுள்ள இம்மடலில், அமேசான் நிலப்பகுதியைக் குறித்து தான் காண விழையும், சமுதாயக் கனவு, கலாச்சாரக் கனவு, சுற்றுச்சூழல் கனவு, மற்றும் திருஅவைக் கனவு என்ற நான்கு கனவுகளை, விளக்கிக் கூறியுள்ளார்.

அமேசானைப்பற்றிய கனவுகள், நீரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகப் பெரிய நதியெனக் கருதப்படும் அமேசான், பல கவிஞர்களின் கனவாக உள்ளது என்பதை தன் மடலில் கூறும் திருத்தந்தை, கொலம்பியா நாட்டு கவிஞர், Juan Carlos Galeano அவர்கள், நதியைப்பற்றி கூறும் ஒரு கவிதையின் சில வரிகளை மேற்கோளாக வழங்கியுள்ளார்:

நதியை, ஒரு கயிறாக, விளையாட்டுப் பொருளாக

எண்ணி வருவோர், தவறிழைக்கின்றனர்.

நதி, உலகின் முகத்தில் ஓடும் இரத்தக் குழாய்.

நதி, மிருகங்களையும், மரங்களையும் ஒருசேரக் கட்டிவைக்கும் கயிறு.

அந்தக் கயிற்றை, மிக இறுக்கமாகக் கட்டினால்,

அது வெடித்துச் சிதறக்கூடும்.

அப்படி அது சிதறும்போது, நம் முகங்களில்,

தண்ணீரும், இரத்தமும் தெளிக்கப்படும்.

கவிஞர் Galeano அவர்கள் கூறியிருக்கும் இவ்வுண்மை, உலகில் ஓடும் அனைத்து நதிகளுக்கும் பொருந்தும். இறைவன் வழங்கியுள்ள இயற்கையின் ஒப்பற்ற கொடைகளான, நீர், நெருப்பு இரண்டும் நல்லவையே. ஆனால், அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்து, நன்மையோ, தீமையோ விளையலாம். மனித குலத்தின் பொதுச்சொத்தாக, இறைவன் வழங்கியுள்ள நீரை, தனியாரின் சொத்தாக மாற்றும் முயற்சிகள், நமக்குள் போர்களை உருவாக்குகின்றன. இப்போர்களில், இறைவன் வழங்கியுள்ள மற்றொரு கொடையான நெருப்பை, ஆயுதங்கள் வழியே, மழையாகப் பொழிந்து வருகிறோம்.

சீராக்கின் ஞானம் எழுப்பும் மற்றொரு கேள்வி - வாழ்வா, சாவா... எதை விரும்புவது? அறிவுப்பூர்வமாய்ச் சிந்தித்தால், இதுவும் மிக எளிதான கேள்விதான். சாவை எப்படி விரும்பமுடியும்? வாழ்வைத்தான் விரும்பவேண்டும் என்று, எளிதில் பதில் சொல்லிவிடலாம். சீராக் கூறும் வாழ்வு, சாவு இவை குறித்து, இயேசுசபை அருள்பணியாளர், Walter Burghardt அவர்கள் கூறும் விளக்கம், இக்கேள்வியை, இன்னும் சிறிது ஆழமாய் ஆய்வுசெய்ய அழைக்கின்றது.

இறைவாக்கினர் சீராக்கைப் பொருத்தவரை, மூச்சு விடுதல், இதயம் துடித்தல் போன்ற, வெறும் உடல் சார்ந்த செயல்களை மட்டும் கொண்டது வாழ்வு அல்ல. மாறாக, இறைவன் மீது பற்றுகொண்டு, அவர் வழி நடப்பதே வாழ்வு. எனவே, இறைவாக்கினர் சீராக், வாழ்வையும், சாவையும் நம்முன் வைக்கும்போது, இறைவனின் வழி நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியை நம்முன் வைக்கிறார். இதுவே, அருள்பணி Burghardt அவர்கள் தரும் விளக்கம்.

இறைவனின் வழி வாழ்வது என்பதை, இறை சட்டங்களின்படி, அதாவது, மோசே தந்த சட்டங்களின்படி வாழ்வது என்ற அளவில் மட்டுமே நினைத்துப் பார்த்தனர், இஸ்ரயேல் மதத்தலைவர்கள். அத்துடன், மோசே தந்த சட்டங்களையும், தங்கள் வசதிக்கேற்ப அவர்கள் வளைத்துக்கொள்ள முயன்றனர். எனவே, சுயநலக் கணக்குகளோடு சட்டங்களைப் பின்பற்றி, அவர்கள் வாழ்ந்த வாழ்வு, வெறும் மூச்சுவிடும் நடைப்பிணங்களின் வாழ்வு என்பதை, இயேசு, தன் மலைப்பொழிவில் மட்டுமல்ல, தன் வாழ்நாள் முழுவதும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

"முன்னோர் கூறிய சட்டங்களைக் கேட்டிருக்கிறீர்கள்.... ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று, இன்றைய நற்செய்தியில் பலமுறை கூறி, சட்டத்தையும் தாண்டிய ஒரு மேலான வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறார், இயேசு. சட்டங்களை, வெறும் சடங்காக, சம்பிரதாயமாக, நிறைவேற்றாமல், அச்சட்டங்களின் பின்னணியில் உள்ள ஆத்மாவை, அர்த்தத்தைக் கண்டுபிடித்து, அதை நிறைவேற்ற வேண்டும் என்பதை, இயேசு தெளிவுபடுத்துகிறார்.

மோசே வழங்கிய சட்டங்களில் கூறப்பட்டுள்ள 'கொலை செய்யாதே', 'விபச்சாரம் செய்யாதே', 'பொய்யாணை இடாதே' என்ற கட்டளைகளை, "ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்ற சொற்களின் வழியே, இன்னும் ஒருபடி மேலே உயர்த்தும் இயேசு, கிறிஸ்தவ வாழ்வுக்கு, மூன்று சவால்களை முன் வைக்கிறார். இம்மூன்று சவால்களில் ஒன்றை மட்டும் ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம்.

கொலை செய்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவர் என்பது முன்னோர் வழங்கிய சட்டம். ஆனால், கோபம் கொள்வதும், தன் உடன்பிறப்பை பழித்துரைப்பதும், நம்மை, தண்டனைக்கு, அதிலும், 'எரிநரகம்' என்ற தண்டனைக்கு உள்ளாக்கும் என்று, இயேசு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையின் வழியே, கோபமின்றி வாழக்கூடிய உயர்வான ஒரு நிலைக்கு நம்மை அழைக்கிறார். வாழ்வில் கோபத்தை விலக்குமாறு கூறிய இயேசு, குறிப்பாக, ஆலயங்களுக்குச் செல்லும் வேளைகளில் கோபம், பகைமை என்ற உணர்வுகள் இன்றி அங்கு செல்லுமாறு அழைப்பு விடுக்கிறார். கோவிலில் காணிக்கை செலுத்துவதுபற்றி மோசே தந்த சட்டங்களை, இயேசு எவ்விதம் மாற்றி சிந்தித்துள்ளார் என்பதை, இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

மோசே தந்த காணிக்கைச்சட்டங்கள், கோவிலுக்குக் கொண்டுவரப்படும் காணிக்கை போருள்களைப் பற்றியே அதிகம் பேசின. காணிக்கையாகக் கொண்டுவரப்படும் ஆட்டுக்குட்டிகள், புறாக்கள், காய்கறிகள், பழவகைகள் ஆகியவை, எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை, மோசேயின் சட்டங்கள் வலியுறுத்தின. இயேசு ஒருபடி மேலே செல்கிறார். வெளிப்புறமாக, நம் கரங்களில் ஏந்திவரும் காணிக்கைகளைக் காட்டிலும், காணிக்கை செலுத்தவரும் நம் உள்புறம் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதைச் சிந்திக்க, இயேசு அழைக்கிறார்.

நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டு, போய், முதலில், அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத். 5: 23-24)

காணிக்கை செலுத்தும் நேரத்தில், ஒருவருக்கு, தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல் எழுகிறது.. உறவுகள் சரியில்லாமல் போனதற்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? என்ற கேள்வியும் எழுகிறது. "காணிக்கை செலுத்த வரும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் மீது, நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, அவர் விடுக்கும் சவால், இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... உடன்பிறப்புக்கள் நடுவே உருவாகும் மனத்தாங்கலுக்கு, நாம் காரணமாக இல்லாமல், அடுத்தவர் காரணமாக இருந்தாலும், அதை உணர்ந்த உடனேயே, நாம் செய்யவேண்டியதென்ன? நமது காணிக்கைச் சடங்குகளை நிறுத்திவிட்டு, முதலில் அவர்களுடன் நல்லுறவை உருவாக்க நாம் செல்லவேண்டும். காணிக்கைகள் காத்திருக்கலாம் என்று இயேசு சொல்கிறார்.

சரி... பிறர் நம்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதற்கு பதில், நாம் அவர்கள் மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதாக உணர்ந்தால், என்ன செய்வது? இக்கேள்விக்கு, இயேசுவின் பதில் எப்படி இருந்திருக்கும் என்று, எளிதில் கற்பனை செய்துகொள்ளலாம். உன் சகோதரர், சகோதரிகள் மீது நீ மனத்தாங்கல் கொண்டிருந்தால், காணிக்கை செலுத்துவதைப் பற்றியே சிந்திக்கவேண்டாம். முதலில் நல்லுறவை உருவாக்க முயற்சி செய். பின்னர், உனது காணிக்கையைப் பற்றி சிந்திக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்லியிருப்பார் இயேசு.

காணிக்கைச் சட்டங்களைப் போலவே, அடுத்தவர் மீது தொடுக்கப்படும் வழக்குகள், பெண்களை மாண்புடன் நடத்தும் முறை, மணவிலக்கு, பொய்யாணை என்ற பல விடயங்களில், மோசே தந்த சட்டங்களைத் தாண்டி, இன்னும் உயர்ந்ததோர் உன்னத வழியைப் பின்பற்றவேண்டும் என்று, இயேசு சவால்களை விடுத்துள்ளார்.

தன் மலைப்பொழிவின் வழியே, இயேசு, உன்னதச் சவால்களை நம்முன் வைத்துள்ளார். இப்படியும் வாழமுடியுமா என்ற பிரமிப்பை எழுப்பும் சவால்கள் இவை. இப்படி வாழ்ந்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்குமே என்ற ஏக்கத்தை எழுப்பும் சவால்கள் இவை. நல்லவற்றை நடைமுறைப்படுத்த நம் மனதில் எழும் கேள்விகள், பிரமிப்புகள், ஏக்கங்கள், கனவுகள் அனைத்தும், நம்மைப் புனிதத்தின் சிகரம் நோக்கி அழைத்துச் செல்லும் படிகற்கள். இந்தப் படிகளில் பணிவோடு ஏறிச்செல்லும் பக்குவத்தை இறைவன் வழங்கவேண்டுமென்று மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2020, 14:30