தேடுதல்

Vatican News
லிபியக் கடற்கரையில், கொலைசெய்யப்பட்ட எகிப்தியர்களின் நினைவிடத்தில் உறவினர்கள் - கோப்புப் படம் லிபியக் கடற்கரையில், கொலைசெய்யப்பட்ட எகிப்தியர்களின் நினைவிடத்தில் உறவினர்கள் - கோப்புப் படம்   (AFP or licensors)

21 எகிப்திய மறைசாட்சிகளுக்கு நினைவிடம்

லிபியக் கடற்கரையில், 2015ம் ஆண்டில், ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பால், கொலைசெய்யப்பட்ட 21 கிறிஸ்தவர்களில் இருபது பேர் எகிப்தையும், ஒருவர் கானாவையும் சார்ந்தவர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், லிபியா நாட்டு கடற்கரையில் தலைகள் வெட்டபட்டு கொலைசெய்யப்பட்ட கிறிஸ்தவ மறைசாட்சிகளின் நினைவாக, எகிப்து காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை, பிப்ரவரி 15, கடந்த சனிக்கிழமையன்று நினைவிடம் ஒன்றைத் திறந்துள்ளது.

தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்க மறுத்ததற்காக, எகிப்து காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையைச் சார்ந்த 21 கிறிஸ்தவ ஆண்கள், லிபியக் கடற்கரையில், ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பால், 2015ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி, கொலைசெய்யப்பட்டனர். இவர்களில் இருபது பேர் எகிப்து நாட்டையும், ஒருவர் கானா நாட்டையும் சார்ந்தவர்கள்.

இவர்கள் கடத்தப்பட்ட ஈராண்டுகள் சென்று கொல்லப்பட்ட செய்திகள் வெளியாயின. இந்த 21 பேரும், முழங்காலில் வைக்கப்பட்டு தலைவெட்டப்பட்டனர். பின்னர் இவர்களது உடல்கள், பெரிய குழியில் போடப்பட்டன.

இவர்கள் கொல்லப்பட்ட ஈராண்டுகள் சென்று, இந்த மறைசாட்சிகளில் பெரும்பாலானவர்களின் சிறிய Al Our கிராமத்தில் நினைவு திருத்தலம் எழுப்பப்பட்டது. அதோடு, கடந்த சனிக்கிழமையன்று, நினைவிடமும் துவங்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம், இந்த மறைசாட்சிகளுக்குப் பின்புறம், பெரிய கிறிஸ்து திருவுருவம், கரங்களை விரித்தவண்ணம் அவர்களை அணைப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மறைசாட்சிகளின் சாட்சியங்கள் கொண்ட அருங்காட்சியகமும் திறக்கப்பட்டுள்ளது.  இந்த நினைவிடம் எழுப்பப்படுவதற்கு எகிப்து அரசு உதவியுள்ளது. (AsiaNews/Agencies)

18 February 2020, 15:18