தேடுதல்

Vatican News
பிரித்தானிய எரிசக்தி நிறுவனம் பிரித்தானிய எரிசக்தி நிறுவனம்   (AFP or licensors)

நிலத்தடி எரிசக்தி நிறுவனங்களிலிருந்து விலகும் இயேசு சபை

நிலத்தடி எரிசக்தியை உருவாக்கும் நிறுவனங்களில் இயேசு சபையினர் முதலீடு செய்துவந்ததை, நிறுத்தப்போவதாக பிரித்தானிய இயேசு சபை மாநிலம் முடிவெடுத்துள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றம் இன்றைய உலக சந்திக்கும் மிகப்பெரும் சவால் என்றும், இந்த நெருக்கடியால் வறுமைப்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் பேரிடர்களைச் சந்தித்து வருகின்றனர் என்றும் பிரித்தானிய இயேசு சபை மாநிலத் தலைவர், அருள்பணி டேமியன் ஹாவர்ட் (Damian Howard) அவர்கள் கூறியுள்ளார்.

நிலத்தடி எரிசக்தியை உருவாக்கும் நிறுவனங்களில் இயேசு சபையினர் முதலீடு செய்துவந்ததை, நிறுத்தப்போவதாக பிரித்தானிய இயேசு சபை மாநிலம் முடிவெடுத்துள்ளதை செய்தியாளர்களிடம் கூறிய அருள்பணி ஹாவர்ட் அவர்கள், சுற்றுச்சூழல் நெருக்கடியைக் குறித்து தன் கவலையை வெளியிட்டார்.

நிலத்தடி எரிசக்தி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த பல்வேறு உலக நிறுவனங்கள் வெளியேறியதால், 14,000 கோடி டாலர்களை இந்நிறுவனங்கள் இழந்துள்ளன என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

உலகெங்கும் அண்மைய ஆண்டுகளில் உருவாகியுள்ள இயற்கைப் பேரிடர்கள், மற்றும் அவற்றின் பின்விளைவாக எழும் நோய்கள் ஆகியவை, பிரித்தானிய இயேசு சபையினரின் முடிவுக்கு முக்கிய காரணங்கள் என்று சொல்லப்படுகிறது.

இவ்வாண்டு நவம்பர் மாதம் Glasgowவில் நடைபெறவிருக்கும் COP26 உலக உச்சி மாநாட்டில், கார்பன் வெளியேற்றம், உலக வெப்பத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகிய முக்கிய முடிவுகளை, உலக அரசுகள் எடுக்கும் என்று தாங்கள் நம்புவதாக, இயேசு சபை மறைப்பணிகளின் ஒருங்கிணைப்பாளரான Paul Chitnis அவர்கள் கூறியுள்ளார்.

தற்போது துவக்கப்பட்டுள்ள தவக்காலம் மாற்றங்களைக் கொணரும் காலம் என்பதாலும், காயங்களை ஆற்றும் காலம் என்பதாலும், இவ்வுலகின் மீது உருவாக்கப்பட்டுள்ள காயங்களை ஆற்றும் ஒரு முயற்சியாக, இயேசு சபையினர் நிலத்தடி எரிசக்தி நிறுவனங்களிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று, மாநிலத் தலைவர், அருள்பணி ஹாவர்ட் அவர்கள் கூறியுள்ளார். (ICN)

26 February 2020, 15:12