தேடுதல்

Vatican News
இத்தாலி வாழ் இந்தியர்கள் அமைதிக்காக செபம் இத்தாலி வாழ் இந்தியர்கள் அமைதிக்காக செபம்  (Biju_Madathikunnel_CSsR)

இத்தாலி வாழ் இந்தியர்கள் ஒற்றுமை, அமைதிக்காக செபம்

ஒவ்வோர் இந்தியரின் இதயத்திலும், பாதுகாப்பு உணர்விற்கு உறுதியளிக்கவும், நாட்டின் அடிப்படை உண்மைகள் காக்கப்படவும் வேண்டுமென்று, இத்தாலியில் வாழ்கின்ற இந்தியர்கள், இந்திய குடியரசுத்தலைவருக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில் வாழ்கின்ற பல்வேறு மதங்களைச் சார்ந்த இந்தியர்கள், உரோம் நகரில் கூடி, இந்தியாவின் ஒற்றுமை, ஒருங்கமைவு, அமைதி மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் பாதுகாக்கப்படுவதற்காக இறைவனிடம் மன்றாடி, அவற்றிற்காக குரல் எழுப்பினர்.

உரோம் நகரில் இயேசு சபையினரின் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், அண்மையில் ஏறத்தாழ இருநூறு இந்தியர்கள் கூடி, இந்தியாவில் அமைதியும் சனநாயகமும் ஒற்றுமையும் காக்கப்பட, பல்சமய வழிபாடு ஒன்றை நடத்தினர்.

இந்திய நடுவண் அரசு கொண்டுவந்துள்ள, CAA, NRC, NPR எனப்படும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு, அரசியலைமப்பு எண் 370ஐ நீக்குதல் போன்றவற்றால், இந்தியாவின் சனநாயகம் மற்றும், சமயச்சார்பற்ற நிலைக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது என்ற உணர்வு, இந்நிகழ்வில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இந்திய அரசின் இத்தகைய தீர்மானங்கள், மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளதால், நாட்டில் சனநாயக மதிப்பீடுகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக, எல்லாரும் இறைவேண்டல் செய்தனர்.

இந்தியக் கொடியின் முன்பாக விளக்கேற்றி, மெய்மையிலிருந்து உண்மைக்கு என்னை அழைத்துச் செல் இறைவா என்று பொருள்படும் Asatoma Sadgamaya என்ற பாடலுடன் இந்நிகழ்வு துவங்கியது. உபநிடதம், விவிலியம், குரான் ஆகிய புனித நூல்களிலிருந்து ஒரு சிறிய பகுதி வாசிக்கப்பட்டது. எனது நாட்டை விழித்தெழச் செய்வாய் இறைவா என்ற தாகூர் அவர்களின் செபம், அசிசி நகர் புனித பிரான்சிசின் செபம் போன்றவையும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.

இறுதியில், இத்தாலியில் வாழ்கின்ற இந்தியர்கள் சார்பில், இந்திய குடியரசுத்தலைவர்  ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கு மடல் ஒன்று அனைவரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டது. அதன் நகல், உரோம் நகரிலுள்ள இத்தாலிய தூதருக்கும் அனுப்பப்பட்டது.

அம்மடலில், இந்தியாவில், மாணவ சமுதாயம் மற்றும், பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட வன்முறைகள், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளன என்றும், இவை, நாட்டின் அஹிம்சை மற்றும், கருணை ஆகிய பண்புகளுக்கு எதிர் சான்றாக உள்ளன என்றும், இவை நாட்டின் உண்மையான உருவத்தைக் கடுமையாய் சீர்குலைக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒவ்வோர் இந்தியரின் இதயத்திலும், பாதுகாப்பு உணர்விற்கு உறுதியளிக்கவும், நாட்டின் அடிப்படை உண்மைகள் காக்கப்படவும் குடியரசுத்தலைவருக்கு  அம்மடலில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

28 February 2020, 15:02