தேடுதல்

Vatican News
சிறுபான்மையினரின் உரிமை வேண்டி...... சிறுபான்மையினரின் உரிமை வேண்டி...... 

இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட

இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இந்தியாவின் 130 கோடி மக்களில், ஏறத்தாழ 27 விழுக்காடாக இருக்கும், தலித் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தைப் பாதிக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அரசு வேலைவாய்ப்பு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோர எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று, இந்திய உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 7, கடந்த வெள்ளியன்று வழங்கியுள்ள தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு, இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த தீர்ப்பு, அரசுப் பணிகளில் பணியாற்றுவதற்கு, சமுதாயத்தில் வறிய மக்களுக்குள்ள வாய்ப்புக்களைப் பாதிக்கும் என்று கூறியுள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், இந்த தீர்ப்பு, இந்தியாவின் 130 கோடி மக்களில், ஏறத்தாழ 27 விழுக்காடாக இருக்கும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.

அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.ஸி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கு வேண்டும் என்ற, எந்த கட்டாயமும் இல்லை, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கோருவதற்கு எந்த தனி நபருக்கும் அடிப்படை உரிமை இல்லை. இட ஒதுக்கீடு வழங்கிடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இத்தீர்ப்பு குறித்து யூக்கா செய்தியிடம் பேசியுள்ள, இந்திய ஆயர் பேரவையின் பழங்குடியின மற்றும், பிற்படுத்தப்பட்ட மக்களின் பணிக்குழு செயலர் அருள்பணி விஜயகுமார் நாயக் அவர்கள், இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திலிருந்து வந்திருப்பதால், இதன் எதிர்தாக்கம் இந்தியா முழுவதும் தெரியும் என்று கூறினார். (UCAN)

உத்தரகாண்ட் மாநில அரசு கடந்த 2012-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் சில அரசுப் பணியிடங்களை நிரப்ப எஸ்சி,எஸ்டி இட ஒதுக்கீடு இல்லாமல் அறிவித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் அந்த அறிவிப்பை இரத்துசெய்து இட ஒதுக்கீட்டுடன் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் உத்தரகாண்ட் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. (இந்து தமிழ் திசை)

11 February 2020, 14:42