தேடுதல்

பொய்க் குற்றம் சாட்டப்பட்டு   விடுவிக்கப்பட்ட ஏழு கந்தமால் கிறிஸ்தவர்கள் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்ட ஏழு கந்தமால் கிறிஸ்தவர்கள்  

இந்திய ஆயர்கள் முன் சாட்சி பகர்ந்த ஏழு கிறிஸ்தவர்கள்

கந்தமால் பகுதியில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளின் தொடர்பாக, பொய்குற்றம் சுமத்தப்பட்டு, அண்மையில் விடுவிக்கப்பட்ட ஏழு கிறிஸ்தவர்கள், இந்திய ஆயர்கள் முன் தங்கள் சிறை அனுபவங்களை சாட்சியங்களாகப் பகிர்ந்துகொண்டனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், 2008ம் ஆண்டு கந்தமால் பகுதியில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளின் தொடர்பாக, பொய்குற்றம் சுமத்தப்பட்டு, அண்மையில் விடுவிக்கப்பட்ட ஏழு கிறிஸ்தவர்கள், இந்திய ஆயர்கள் முன், தங்கள் சிறை அனுபவங்களை, சாட்சியங்களாகப் பகிர்ந்துகொண்டனர்.

பெங்களூரு, புனித யோவான் தேசிய மருத்துவ கல்லூரியில், பிப்ரவரி 13ம் தேதி துவங்கி, பிப்ரவரி 19, இப்புதனன்று நிறைவுற்ற இந்திய ஆயர் பேரவையின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில், கடந்த பத்தாண்டுகளாக சிறையில் தாங்கள் அடைந்த துயரங்களையும், அவ்வேளையில் தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் குறித்து, ஏழு கிறிஸ்தவர்கள் பேசினர்.

இந்த ஏழு கிறிஸ்தவர்களை கந்தமால் சிறையில் பலமுறை சென்று சந்தித்த ஊடகவியலாளரும், மனித உரிமை ஆர்வலருமான Anto Akkara அவர்கள், ஆயர்கள் முன் இந்த ஏழுவரையும் அறிமுகம் செய்துவைத்த வேளையில், அவர்களில் ஆறுபேர், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்றும், ஒருவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறினார்.

இத்தனை அநீதிகளையும், துன்பங்களையும் தாங்கிய வேளையில், இவ்வேழு கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கை மேலும் ஆழமானது என்று, இவர்கள் வழங்கிய சாட்சியத்தில் எடுத்துரைத்தனர்.

பிணையத்தொகை செலுத்தி, சிறையிலிருந்து வெளியேறி இருக்கும் இந்த ஏழு கிறிஸ்தவர்களின் வழக்கைத் தொடர்வதற்கும், அவர்கள் வாழ்வுக்கும் இந்திய ஆயர்கள் உதவி செய்யவேண்டும் என்ற விண்ணப்பத்தை, ஊடகவியலாளர் Akkara அவர்கள் முன்வைத்தார்.

2008ம் ஆண்டு கந்தமால் பகுதியில், இலட்சுமானந்த சரஸ்வதி என்ற இந்து மதத் தலைவர் கொல்லப்பட்டதற்கு, அப்பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களே காரணம் என்று தவறாக குற்றம் கூறி, இந்து அடிப்படைவாதிகள் மேற்கொண்ட வெறித்தனமான வன்முறையில், 100க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், 300க்கும் அதிகமான கிறிஸ்தவ கோவில்களும், நிறுவனங்களும் சேதமடைந்தன, மற்றும், 50,000த்திற்கும் அதிகமானோர், தங்கள் வீடுகளை இழந்தனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2020, 15:10