தேடுதல்

சிறுமி ஜெசிந்தாவை புனிதராக உயர்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அப்புனிதரின் உருவத்திற்குமுன் செபித்தல் சிறுமி ஜெசிந்தாவை புனிதராக உயர்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அப்புனிதரின் உருவத்திற்குமுன் செபித்தல் 

புனித ஜெசிந்தா மார்த்தோ – மரணத்தின் முதல் நூற்றாண்டு

புனித ஜெசிந்தா மார்த்தோ, 1920ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி இறையடி சேர்ந்ததன் முதல் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில், பாத்திமா திருத்தலத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா திருத்தலத்தில், அன்னை மரியாவின் காட்சியைக் கண்ட மூன்று இடையர் குல சிறார்களில் ஒருவரான ஜெசிந்தா மார்த்தோ அவர்கள் மரணமடைந்த நாளின் முதல் நூற்றாண்டு, அத்திருத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஜெசிந்தா, பிரான்ஸிஸ்கொ, மற்றும் லூசியா என்ற மூன்று இடையர்கள், 1917ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி அன்னை மரியாவை முதல் முறை காட்சியில் கண்டதையடுத்து, பாத்திமா திருத்தலம், உலகப் புகழ்பெற்ற திருத்தலமாகத் திகழ்ந்து வருகிறது.

இந்த மூவரில், ஜெசிந்தா அவர்கள், 1920ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி இறையடி சேர்ந்ததன் முதல் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் பாத்திமா திருத்தலத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

பிப்ரவரி 20, இவ்வியாழனன்று, காலை 10 மணிக்கு, அன்னை மரியா காட்சியளித்த சிற்றாலயத்தில் செபமாலை சொல்லப்பட்டபின், ஜெசிந்தா, பிரான்ஸிஸ்கொ ஆகியோரின் திரு உருவங்கள் ஓர் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் என்றும், இவ்வியாழன் முழுவதும், அத்திருத்தலத்தில், பல்வேறு மொழிகளில், திருப்பலிகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கும் என்றும், அத்திருத்தலம் அறிவித்துள்ளது.

மேலும், லிஸ்பன் நகரில், புனித ஜெசிந்தா இறையடி சேர்வதற்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்த Estefânia மருத்துவமனையில், கர்தினால் Manuel José Macário அவர்கள், இவ்வியாழனன்று, சிறப்புத் திருப்பலியை தலைமையேற்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகச் சிறிய வயதில் இறையடி சேர்ந்த ஜெசிந்தா, பிரான்ஸிஸ்கொ என்ற இருவரையும், திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், 2000மாம் ஆண்டு அருளாளர்களாக உயர்த்தினார்.

2017ம் ஆண்டு மே 13ம் தேதி, பாத்திமா அன்னை காட்சியளித்த முதல் நூற்றாண்டு கொண்டாட்டங்களின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாத்திமா திருத்தலத்தில், இவ்விரு சிறாரையும் புனிதர்களாக உயர்த்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2020, 14:56