ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதை கொண்டாடிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதை கொண்டாடிய மக்கள் 

பிரெக்ஸிட் பற்றி ஐரோப்பிய கிறிஸ்தவ தலைவர்கள்

கத்தோலிக்க திருஅவை, மக்களின் கருத்து சுதந்திரம் மற்றும், சனநாயகத்தை ஆதரிக்கின்றது. எனவே, 2016ம் ஆண்டில் பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பில் பிரித்தானியர்கள் வெளிப்படுத்தியதை மதிக்கின்றது – ஐரோப்பிய ஆயர் பேரவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் 47 ஆண்டு காலமாக உறுப்பு நாடாக இருந்த பிரிட்டன், சனவரி 31, இவ்வெள்ளி நள்ளிரவு, அதிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளதையொட்டி ஐரோப்பாவின் கத்தோலிக்கத் தலைவர்கள் உட்பட, பிரித்தானியாவின் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், தங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய ஆயர் கூட்டமைப்பின், ஆயர் மரியானோ குரோசாத்தா அவர்கள் வத்திக்கான் செய்திகளிடம் கூறுகையில், ஐரோப்பியர், ஒரு புதிய உத்வேகம் பெறுவதற்கு, பிரெக்ஸிட் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறினார்.

ஐரோப்பிய கத்தோலிக்க திருஅவை, பிரெக்ஸிட் குறித்து வருத்தமடைந்தாலும், கருத்து சுதந்திரம் மற்றும், சனநாயகத்தை ஆதரிக்கின்றது என்பதால், பிரித்தானியாவில் 2016ம் ஆண்டில் கருத்து வாக்கெடுப்பில் மக்கள் வெளிப்படுத்தியதை மதிக்கின்றது என்றும், ஆயர் குரோசாத்தா அவர்கள் கூறினார்.

பிரித்தானிய கிறிஸ்தவ சபைகள்

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியுள்ள பிரித்தானிய அரசு, வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்வோர், சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளோர் போன்றோருக்கு ஆதரவாகச் செயல்படுமாறு, பிரித்தானிய கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில், அனைத்து மக்களின் வாழ்வு வளம்பெறும் வகையில், நீதியான பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், புலம்பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.

இனம் அல்லது நாட்டை காரணம் காட்டி வெறுக்கப்படுவோர் மீது சகிப்புத்தன்மை காட்டுமாறும் பரிந்துரைத்துள்ள அத்தலைவர்கள், காலநிலை மாற்றம் முன்வைக்கும் நெருக்கடி, உலகளாவிய சமத்துவமின்மை மற்றும், போர்களை அகற்றுவதற்கு, பன்னாட்டு ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூறியுள்ளனர்.

பிரெக்ஸிட், பிரித்தானிய சமுதாயத்தில் ஆழமான பிளவுகளுக்கு இட்டுச்சென்றுள்ளது என்று கூறியுள்ள அத்தலைவர்கள், பிரெக்ஸிட் நடவடிக்கையை ஏற்காதவர்களை கனிவுடனும், மதிப்புடனும் நடத்துமாறும், அனைவரும் பொதுநலனுக்கு உழைக்க தங்களை அர்ப்பணிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர். (ICN)

பிரெக்ஸிட் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற வளாகத்தில் இருந்து பிரிட்டன் கொடிகள் இறக்கப்பட்டன .பிரிட்டன் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 73 பேர் தங்களது பதவியை இழக்கின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நீல நிறத்துக்கு, பிரிட்டன் கடவுச்சீட்டுகள் மாறும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

பிரெக்ஸிட்’ நினைவாக ‘ஜனவரி 31’ தேதியை தாங்கிய அரை பவுண்ட் மதிப்புள்ள 50 பென்ஸ் நாணயங்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2020, 14:44