ஹாங்காங்கில் கொரோனா தொற்றுக்கிருமி எச்சரிக்கை ஹாங்காங்கில் கொரோனா தொற்றுக்கிருமி எச்சரிக்கை 

ஹாங்காங்கில் இரு வாரங்களுக்கு திருப்பலிகள் இரத்து

கொரோனா தொற்றுக்கிருமி குறித்து கலக்கம் அடைய வேண்டாம், கடவுளில் நம்பிக்கையை ஆழப்படுத்தி, நமக்கு அடுத்திருப்பவர்கள் மற்றும், எல்லார் மீதும் கிறிஸ்தவ அன்பைக் காட்டுங்கள் - ஹாங்காங் கர்தினால்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சீனாவின் வுகான் நகரில் தோன்றி, பல நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுக்கிருமி காரணமாக, ஹாங்காங் மறைமாவட்டம், திருநீற்றுப்புதன் திருவழிபாடு உட்பட, இரு வாரங்களுக்கு, திருப்பலிகள் மற்றும், திருவழிபாடுகள் பொது இடங்களில் நிறைவேற்றப்படுவதை இரத்து செய்துள்ளது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள, ஹாங்காங் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் ஜான் டாங் (John Tong) அவர்கள், வருகிற இரு வாரங்கள் கொரோனா தொற்றுக்கருமிகளைக் கட்டுப்படுத்துவதற்கு மிக முக்கியமான காலம் என்றும், இதனால் இந்த இரு வாரங்களில், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும், வார நாள்களில் பொதுவில் நிறைவேற்றப்படும் திருப்பலிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அறிவித்துள்ளார்.

இவ்வாறு தீர்மானம் எடுப்பது எளிதானது அல்ல என்பதை எல்லாரும் புரிந்துகொள்வார்கள் என்று, தான் நம்புவதாகத் தெரிவித்துள்ள கர்தினால் டாங் அவர்கள், பிப்ரவரி 15, இச்சனிக்கிழமை முதல், பிப்ரவரி 28ம் தேதி வரை, அனைத்து பொது திருவழிபாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

அதேநேரம், கொரோனா தொற்றுக்கிருமி குறித்து கலக்கம் அடைய வேண்டாமென்றும், கடவுளில் நம்பிக்கையை ஆழப்படுத்தி, நமக்கு அடுத்திருப்பவர்கள் மற்றும், எல்லார் மீதும் கிறிஸ்தவ அன்பைக் காட்டுமாறும், ஹாங்காங் கர்தினால் அழைப்பு விடுத்துள்ளார்.

இணையதளங்கள் வழியாக நிறைவேற்றப்படும் திருப்பலிகளில் பங்குபெற்று, ஆன்மீக முறையில் திருநற்கருணை வாங்குமாறும், திருமறை நூல்களை வாசித்து தியானிக்குமாறும், செபமாலைகள் செபிக்குமாறும், கர்தினால் கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தங்கள் குடும்பங்களில், குறிப்பாக வயது முதிர்ந்தவர்களின்  நலவாழ்வில் அக்கறை காட்டுமாறும், தன் செய்தியில் கூறியுள்ள கர்தினால் டாங் அவர்கள், தொற்றுக் கிருமி தடுப்பு பொருள்களை ஒருவருக்கொருவர் உதவி, செபித்து, நற்செய்தி அறிவுரைகளின்படி வாழுமாறு கூறியுள்ளார். (Fides)

இதற்கிடையே, கொரோனா தொற்றுக்கிருமியால் சீனாவில் 1,381 பேர் இறந்துள்ளனர், 6,728 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தாக்கப்பட்டுள்ள 63,932 பேரில், 10,204 பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2020, 14:58