Vatican News
திருத்தந்தை 12ம் பயஸ் திருத்தந்தை 12ம் பயஸ் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-11

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், ஆப்ரிக்கா மற்றும், ஆசிய மறைப்பணித்தளங்களில் இரண்டாம் உலகப் போரில் சேதமடைந்த திருஅவையின் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மீண்டும் சீர்படுத்தினார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை 12ம் பயஸ்-4

திருத்தந்தை 12ம் பயஸ் (2,மார்ச்,1939-9,அக்.1958) அவர்கள், 1939ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி, திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர் (1,செப்.1939-2,செப்.1945) துவங்கி முடிவடைந்திருந்த காலக்கட்டத்தில், பணியாற்றிய இவர், இப்போரினால் கடும் வறுமையில் வாடிய மக்கள், கைவிடப்பட்ட சிறார் போன்ற எல்லாருக்கும் உதவினார். இவர், போருக்குப்பின், கத்தோலிக்கத் திருஅவையின் உலகளாவியப் பண்பை விரிவுபடுத்தினார். கத்தோலிக்கத் திருஅவை, பல நூற்றாண்டுகளாக, சீன மக்களைத் தொடர்புகொள்ள இயலாமல் இருந்தது. சீனாவில் பழமையான கன்பூசிய மத வழக்கப்படி, இறந்த குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை செய்யும் முறை, கத்தோலிக்க கோட்பாட்டிற்கு முரணாக உள்ளது என்று கருதி, அதனை கத்தோலிக்கத் திருஅவை அங்கீகரிக்காமல் இருந்ததே இதற்கு காரணம். திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், தலைமைப்பணியைத் தொடங்கிய சில மாதங்களிலே, திருஅவையின் கொள்கைகளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்தார். திருத்தந்தையின் விண்ணப்பத்தின்பேரில், நற்செய்தி அறிவிப்பு பேராயம், 1939ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, புதிய அறிவிப்புக்களை வெளியிட்டது. அதன்படி, சீன பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகளாக இனிமேல் கருதப்பட மாட்டாது. அதற்கு மாறாக, அவை, தங்களின் உறவினர்களை மரியாதை செய்யும் பழக்கமாக நோக்கப்படும். எனவே கத்தோலிக்கர் அவற்றை அனுமதிக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டது. அதன் விளைவாக, சீன அரசு, குறுகிய காலத்திலேயே, வத்திக்கானுடன் தூதரக உறவை உருவாக்கியது. திருத்தந்தையின் நடவடிக்கைகள், சீனாவில் திருஅவையின் நிலைமையை, புரட்சிகரமான வழியில் மாற்றின. திருஅவை சீனாவில் மலரத் தொடங்கியது. திருத்தந்தை, தலத்திருஅவைக்கு சீனாவைச் சேர்ந்த ஒருவரை தலைவராக நியமித்தார். பெய்ஜிங் பேராயரான இறைவார்த்தை சபை பேராயர் Thomas Tien Ken-sin அவர்கள், கர்தினால்கள் அவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆயினும், 1949ம் ஆண்டில் மாவோ சே துங்கின் கம்யூனிச ஆட்சி உருவாகிய பின்னர், சீனாவில் திருஅவையின் முன்னேற்றம் தேக்கநிலை கண்டது. ஆயிரக்கணக்கான அருள்பணியாளர்களும், விசுவாசிகளும் நசுக்கப்பட்டனர்.

கொரியா

1947ம் ஆண்டில் கொரியா, ஜப்பானியர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையாகிய சில காலத்திலேயே, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், அருள்பணி Patrick James Byrne அவர்களை, முதல் திருப்பீட பிரதிநிதியாக கொரியாவுக்கு அனுப்பினார். திருப்பீட நிரந்தர பிரதிநிதி ஒருவரை கொரியாவுக்கு அனுப்பியதன் வழியாக, கொரியாவை, சுதந்திர நாடாக முதலில் அங்கீகரித்த உலக நாடுகளில் வத்திக்கானும் ஒன்றாகப் பெயர் பெற்றது. Maryknoll மறைப்பணியாளர் சபையைச் சார்ந்த அமெரிக்கரான அருள்பணி Patrick James Byrne அவர்கள், 1950ம் ஆண்டில் கொரியப் போர் துவங்கியபோது கடத்தப்பட்டு சிறையில் இறந்தார். அச்சமயத்தில், தென் கொரிய அரசு, பாரிசில் நடந்த கருத்தரங்கிற்கு தன் பிரிதிநிதியை அனுப்பியது. அக்கருத்தரங்கில், கொரிய பிரதிநிதிக் குழு, பல கத்தோலிக்க நாடுகளின் பிரதிநிதிகளிடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்கு, திருப்பீடமும், பாரிசில் திருப்பீட தூதராகப் பணியாற்றிய கர்தினால் ஜான் ரொன்காலி அவர்கள், பின்னாளைய புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களும் பெரிதும் உதவினர்.

ஆப்ரிக்கா, ஆசியா

ஆப்ரிக்கா மற்றும், ஆசிய மறைப்பணித்தளங்களின் பெருமளவான பகுதிகளில், நூற்றுக்கு அதிகமான ஆண்டுகளாக, சிறப்பு மருத்துவமனைகள் மற்றும், பல்கலைக்கழகங்களை, திருஅவை எழுப்பியிருந்தது. இரண்டாம் உலகப் போர், இந்த மறைப்பணித்தளங்களில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. வெளிநாடுகளில் மறைப்பணியாற்றுவதற்காக, ஐரோப்பாவில், தங்கள் உறுப்பினர்களை தயாரித்துவந்த பல்வேறு துறவு சபைகளின் இல்லங்கள் காலியாக இருந்தன. வெளிநாடுகளில் பணியாற்றிய ஐரோப்பிய அருள்பணியாளர்கள், அருள்சகோதரர்கள், ஆசிரியர்கள், செவிலியர் போன்றோர், இராணுவத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டனர். மறைப்பணியாளர்கள், தாங்கள் பணியாற்றிய நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர், அல்லது தவறான கடவுச் சீட்டுகளால் தண்டனை பெற்றனர். ஜப்பான் போரை அறிவித்தபின், பிலிப்பீன்ஸ், இந்தோசீனா உட்பட, ஆசியாவின் பெரும் பகுதிகள் போர்க்களங்களாக மாறின. கத்தோலிக்க ஆலயங்கள், மருத்துவமனைகள் மற்றும், பள்ளிகள் அழிக்கப்பட்டன மற்றும், மூடப்பட்டன. ஜப்பானின் ஆக்ரமிப்பில், பல மறைப்பணியாளர்கள் வதைமுகாம்களில் வாழ்ந்தனர் மற்றும், முறைகேடாக நடத்தப்பட்டனர். எனவே இரண்டாம் உலகப் போருக்குப்பின், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இந்த நிறுவனங்களின் இருப்பை மீள்கட்டமைத்தார். அவை அந்தந்தப் பகுதிகளின் திருஅவை அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படுமாறு செய்தார்.

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 81ம் ஆண்டு நிறைவான வருகிற மார்ச் 2, திங்களன்று, அத்திருத்தந்தையின் இரகசிய ஆவணங்கள் ஆய்வாளர்களுக்குத் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

26 February 2020, 10:12