திருத்தந்தை 12ம் பயஸ் திருத்தந்தை 12ம் பயஸ் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-10

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், மனித மாண்பைக் காப்பதற்கு அச்சமின்றி பாடுபட்டார். உரோம் திருஅவை, அநியாயமாய்த் தாக்கப்பட்டு, பொதுவான எதிர்ப்புக்களை சந்தித்தபோதிலும், திருஅவை தன் பிறரன்புப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றச் செய்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை 12ம் பயஸ்-3

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இரண்டாம் உலகப் போருக்குப்பின், திருஅவையின் பிறரன்புப் பணிகள், கத்தோலிக்கத் திருஅவையை உலகளாவிய திருஅவையாக அமைப்பது, கிழக்கு ஐரோப்பா, சீனா, வியட்நாம் போன்ற கம்யூனிச அரசுகளில் கத்தோலிக்கர் எதிர்கொண்ட சித்ரவதைகளை நிறுத்துவது, அமெரிக்க ஐக்கிய நாட்டுடன்   உறவுகளை உருவாக்குவது போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தினார். இரண்டாம் உலகப் போருக்குப்பின், கிழக்கு ஐரோப்பாவில் ஏறத்தாழ ஆறு கோடி கத்தோலிக்கர் கம்யூனிச அரசுகளின்கீழ் இருந்தனர். போரை எதிர்கொண்ட மத்திய கிழக்கில், கிறிஸ்தவம், யூதம், மற்றும், இஸ்லாம் மதங்களுக்கு இடையே நன்மதிப்பு நிலவவும்,  புனித இடங்களுக்கு, குறிப்பாக, எருசலேமுக்கு மக்கள் எளிதில் செல்வதற்கு வழியமைக்கப்படவும் அழைப்பு விடுத்தார். போர்க்காலத்தில் இவர் வெளியிட்ட செய்திகளில், உலக அளவில், ஒழுங்குமுறை காக்கப்படவும், பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்கப்படவும் வலியுறுத்தினார். அதனால், அந்நிறுவனங்களுக்கு திருப்பீடத்தின் பிரதிநிதிகளையும் நியமித்தார். 1957ம் ஆண்டில் உரோம் ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, அப்போது உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத் தலைவர், இன்னும், நாடுகள் மற்றும், அரசுகளின் தலைவர்களை, திருத்தந்தை சந்தித்தார்.            

பிறரன்பு கொள்கைகள், செயல்கள்

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1946ம் ஆண்டு சனவரி மாதம் 6ம் தேதி Quemadmodum என்ற திருமடலை வெளியிட்டு, உடனடி பிறரன்புப் பணிகளுக்கு அழைப்பு விடுத்தார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலட்சக்கணக்கான மக்கள் துன்புறுகின்றனர், எனவே உலகினர் அனைவரும் அவர்களுக்கு உதவுமாறு வலியுறுத்தினார். குறிப்பாக, குடும்பங்கள், உணவு மற்றும், குடியிருப்புக்களை இழந்திருந்த இலட்சக்கணக்கான சிறார் மீது மிகுந்த அக்கறை காட்டினார். பிறரன்புப் பணிகளுக்கென உருவாக்கப்பட்ட பாப்பிறை அமைப்பு, ஐரோப்பாவில் உதவி அதிகம் தேவைப்பட்ட மக்களுக்கு, 90 ஆயிரத்திற்கு அதிகமான உணவுப்பொருள்கள் கொண்ட பெட்டிகளை, வத்திக்கான் இரயில் நிலையம், மற்றும், கப்பல் வழியாக பல நாடுகளுக்கு, அனுப்பியது. 1946ம் ஆண்டில், திருத்தந்தை, ஐம்பதாயிரம் சிறாரை வத்திக்கானுக்கு வரவழைத்து, அவர்களுக்கு உணவு வழங்கினார். இதற்கு உதவிய ஐ.நா. நிறுவன நன்கொடையாளர்களுக்கு திருத்தந்தை நன்றி கூறினார். உரோம் ஆயர் என்ற முறையில், ஒவ்வோர் ஆண்டும் முப்பது இலட்சமாக இருந்த வத்திக்கான் இலவச உணவு மையங்களை, 1947ம் ஆண்டிலிருந்து, நாற்பது இலட்சமாக உயர்த்தினார். 1944ம் ஆண்டு கிறிஸ்மஸ் பெருவிழாவன்று, மூவாயிரம் உரோம் சிறார்க்கும், அவ்விழாவிற்கு அடுத்துவந்த திருக்காட்சி விழாவன்று, மேலும் நான்காயிரம் சிறார்க்கும் திருத்தந்தையே பரிசுப்பொருள்களை வழங்கினார். இத்திருத்தந்தை, 1945ம் ஆண்டில், நாற்பதாயிரம் பரிசுப்பொட்டலங்களை வைத்திருந்தார். சுவீடன் அரசர் 5ம் குஸ்தாவ் அவர்கள், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களின் பிறரன்புப் பணிகளைப் பாராட்டி, “கார்ல் இளவரசர் (Prince Carl Medal)” என்ற பதக்கத்தை வழங்கினார். அவர், தனது பிறரன்பு கொள்கைகளைத் தாக்கிய கம்யூனிசத் தலைவர்களுக்கு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா செய்தியில் பதில் அளித்தார்.

மரண தண்டனைக்கு எதிர்ப்பு  

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், போர்க் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கப்படுமாறு விண்ணப்பித்தார். 1948ம் ஆண்டில் போர்க் குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் தடை நீக்கப்பட்டதையடுத்து, மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட எல்லாருக்கும் முழு மன்னிப்பு வழங்கப்படுமாறு அழைப்பு விடுத்து, மரண தண்டனை வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். போருக்குப் பின்னும், வத்திக்கான் தன் தகவல் பணிகளைத் தொடர்ந்தது. வத்திக்கான் வானொலி, கைதிகளுக்கும், தென்னாப்ரிக்கா, காங்கோ, வட ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, மற்றும், வட அமெரிக்காவுக்கு, கைதிகளாக அனுப்பப்பட்டவர்களுக்குமென ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கியது. பல்லாயிரக்கணக்கான போர்க் கைதிகளுக்கு எவ்வித அடையாளமும் இல்லாததால், வத்திக்கான் பிறரன்புப் பணி அதிகாரிகள் மற்றும், செஞ்சிலுவை சங்கத்தால், அடையாளச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

புலம்பெயர்வு உரிமைகள்

இரண்டாம் உலகப் போரால், ஐரோப்பா எங்கும் இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள், வீடுகள் அல்லது, தங்குவதற்கு இடமின்றி இருந்தனர். எனவே திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், புலம்பெயர்வு, ஓர் அடிப்படை உரிமை மற்றும், கடமை என்பதை வலியுறுத்தினார். 1946ம் ஆண்டில், அனைத்து மக்களும் புலம்பெயர்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர், ஏனெனில், படைத்தவராம் இறைவனே, பொருள்வளங்களை நாம் பெறுவதற்கு வழியமைத்து கொடுத்திருக்கிறார் என அறிவித்தார். பரிவன்பும், புலம்பெயர்வோரின் உரிமைகளுக்கு ஆதரவளிக்க வைக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார். திருத்தூதர் என்பவர், நற்செய்தியையும் கிறிஸ்துவையும் அறிவிப்பவர். ஆயினும், ஐரோப்பிய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், அந்நிய மண்ணில் இடம்பெயரச் செய்வதற்கு தனது அலுவலகம் வலியுறுத்தவில்லை, மாறாக, ஐரோப்பியர்கள், கிறிஸ்தவ வாழ்வு மற்றும், அதன் அறநெறி கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றே விரும்புகிறேன், மனித மாண்பை பாதுகாக்கும் எந்தக் கலாச்சாரத்தையும் ஏற்கிறேன் என்று, 1944ம் ஆண்டில் திருத்தந்தையின் மறைப்பணி கழகத்தினரிடம் கூறினார் அவர். முத்தாய்ப்பாகச் சொல்லவேண்டுமெனில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், மனித மாண்பைக் காப்பதற்கு அச்சமின்றி பாடுபட்டார். மேலும் அவர், உரோம் திருஅவை, அநியாயமாய்த் தாக்கப்பட்டு, பொதுவான எதிர்ப்புக்களை சந்தித்தபோதிலும், திருஅவை தன் பிறரன்புப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றச் செய்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2020, 12:48