தேடுதல்

டெல்லி கலவரம் டெல்லி கலவரம் 

டில்லி வன்முறைகளுக்கு கத்தோலிக்கரின் பதிலிறுப்பு

டில்லியில் இடம்பெற்றுள்ள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கத்தோலிக்கர் உதவிகள் செய்யவேண்டும், கத்தோலிக்க பள்ளிகள், மற்றும், பங்குத்தளங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புகலிடம் தரவேண்டும் – பேராயர் அனில் கூட்டோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டில்லி நகரை, திடீரெனத் தாக்கியிருக்கும் வன்முறைகளின்போது, நமது செபங்கள் வழியே பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்யவும், அவர்களுக்குத் தேவையான துயர் துடைப்பு பணிகளில் ஈடுபடவும் அழைப்பு விடுக்கிறேன் என்று, டில்லி பேராயர் அனில் கூட்டோ (Anil Cuoto) அவர்கள், தன் பெரு மறைமாவட்ட மக்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பிப்ரவரி 23, கடந்த ஞாயிறு முதல் டில்லியில் உருவாகியுள்ள வன்முறை நிகழ்வுகளைக் குறித்து கவலை வெளியிட்டுள்ள பேராயர் கூட்டோ அவர்கள், தவக்கால முயற்சிகளில் ஒன்றாக, கத்தோலிக்கர் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யவேண்டும் என்றும், கத்தோலிக்க பள்ளிகள், மற்றும், பங்குத்தளங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புகலிடம் தரவேண்டும் என்றும் இம்மடலில் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ள இந்தக் கொடுமையின்போது, கிறிஸ்தவர்கள், அருகில் நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர்த்து, தாக்கப்பட்டவர்களை, தங்கள் உடன் பிறந்தோராகக் கருதி, உடனடி செயல்களில் ஈடுபடவேண்டும் என்று, டில்லியில் இயங்கும் சிறுபான்மை கழகத்தின் உறுப்பினரான அருள் சகோதரி அனஸ்தாசியா கில் (Anastasia Gill) அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, டில்லியில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து வந்த ஒரு போராட்டத்தைக் கலைக்க, மத அடிப்படைவாதிகள் மேற்கொண்ட வன்முறை நிகழ்வுகளில், இதுவரை 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2020, 15:32