தொற்று நோய் பயத்தால் வெறிச்சோடியிருக்கும் சீனாவின் Jiujiang வீதி தொற்று நோய் பயத்தால் வெறிச்சோடியிருக்கும் சீனாவின் Jiujiang வீதி 

‘கொரோனா’வால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்காக செபம்

கொரோனா நுண்கிருமி முதலில் தோன்றியதாக நம்பப்படும் வுகான் நகர மக்கள், மற்ற நகரங்களுக்கு வந்தவுடன், அவர்கள் எலிகள் போன்று நடத்தப்படுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்காக, கிறிஸ்தவர்கள் அனைவரும் செபிக்குமாறு, சீன அருள்பணியாளர் ஒருவர் உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நோய்க்கிருமி முதலில் தோன்றியதாக நம்பப்படும் வுகான் நகரில் வாழ்ந்த மக்கள் மற்ற நகரங்களுக்கு வந்தவுடன், அவர்கள் எலிகள் போன்று நடத்தப்படுகின்றனர் என்றும், இம்மக்கள் மீது பரிவன்பும், ஒருமைப்பாடும் காட்டப்படுமாறும், அவர்களுக்காகச் செபிக்குமாறும், அந்த அருள்பணியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

சமுதாய பதட்டநிலைகள் அதிகமாக உருவாகக்கூடிய ஆபத்துக்கள் நிலவுவதாகவும், இதனை செபத்தினால் தணிக்க முடியும் எனவும், கொரோனா நுண்கிருமி தொற்று நோய் நிலவரம், நாளுக்கு நாள் அனைவர் மனதிலும் அச்சத்தை அதிகப்படுத்தி வருகின்றது எனவும், அந்த அருள்பணியாளர் இணையத்தில் எழுதியுள்ளார்.

வுகான் நகரைவிட்டு 50 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என்று அந்நகர மேயர் அறிவித்துள்ளார் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் வெறுப்பையும், அதேநேரம் அன்பையும்  அனுபவிக்கின்றனர் என்றும், எழுதியுள்ள சீன அருள்பணியாளர், இப்பதட்டநிலைக்கு மத்தியில், மனிதாபிமானம் மலர்ந்து வருகின்றது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா நுண்கிருமியால், சீனாவில் 11,823 பேரும், வெளிநாடுகளில் 129 பேரும் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், 259 பேர் இறந்துள்ளனர். சீனாவில் இந்நோய்க்கிருமியால் தாக்கப்பட்டதாக சந்தேகத்தின்பேரில், 18 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறைந்தது 243 பேர், இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று ஆசியச் செய்தி கூறுகின்றது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2020, 14:34