CBCI இந்திய ஆயர் பேரவையின் தலைவராக, மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால் கிரேசியஸ் CBCI இந்திய ஆயர் பேரவையின் தலைவராக, மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால் கிரேசியஸ் 

CBCI பேரவையின் புதிய நிர்வாகக் குழு

CBCIயின் தலைவராக, கர்தினால் கிரேசியஸ், உதவித் தலைவர்களாக, பேராயர் Njaralakattம், ஆயர் Ignathios ஆகிய மூவரும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பேராயர் Felix Machado அவர்கள், பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

CBCI எனப்படும் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவராக, மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார், மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

பெங்களூரு, புனித யோவான் தேசிய மருத்துவ கல்லூரியில், இந்தியாவின் மூன்று வழிபாட்டுமுறைகளின் ஏறத்தாழ 200 கத்தோலிக்க ஆயர்கள் கலந்துகொள்ளும் 32வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில், பிப்ரவரி 17, இத்திங்களன்று, CBCI பேரவையின் உதவித் தலைவர்களாக, Tellicherry சீரோ-மலபார் வழிபாட்டுமுறை பேராயர் Mar George Njaralakatt அவர்களும், Mavelikkara சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை ஆயர் Joshua Ignathios அவர்களும், மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Vasai பேராயர் Felix Machado அவர்கள், CBCI பேரவையின் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி 75 வயதை நிறைவு செய்துள்ள கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், நவம்பர் மாதமே பதவி விலகுவதற்குரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளபோதிலும், திருத்தந்தையின் வேண்டுகோளின்படி, மும்பை உயர்மறைமாவட்ட நிர்வாகப் பணிகளை கவனித்துவரும் நிலையில், இந்திய ஆயர் பேரவையின் தலைவராக, மேலும் இரண்டு ஆண்டுகள் செயல்பட ஆயர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மனித வாழ்வு காக்கப்பட..

இந்த 32வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்தியாவில் வாழ்வு கலாச்சாரத்தையும், மனித உடன்பிறந்த நிலையையும் ஊக்கப்படுத்துமாறு வலியுறுத்தினார்.

இந்திய திருப்பீட தூதர் பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ அவர்கள் உரையாற்றுகையில், அன்றாட வாழ்வுச் சூழலில் நற்செய்தியை அறிவிப்பது மற்றும், அதை வாழ்வது, இந்தியாவிலுள்ள ஆயர்கள் மற்றும், கத்தோலிக்கரின் முதல் தூதுரைப்பணி என்று கூறினார்.

கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள், கருணை, பரிவன்பு ஆகிய நற்செய்தி விழுமியங்களை அறிவிக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளனர் என்றும் கூறினார் பேராயர் திகுவாத்ரோ.

இக்கூட்டத்தில் உரையாற்றிய, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவைத் தலைவரான, கோவா பேராயர் பிலிப்நேரி பெராரோ அவர்கள், மனித உடன்பிறந்தநிலை மற்றும், அமைதியை நிலைநாட்டுவதில் இன்னல்களை எதிர்கொண்டாலும், நாட்டின் நன்மைக்காகத் தொடர்ந்து சேவையாற்றுவோம் என்று ஆயர்களிடம் கூறினார்.

இத்திருப்பலியில், சீனாவிலும், உலகெங்கும் கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பான மன்றாட்டுகள் எழுப்பப்பட்டன.

“உரையாடல்: உண்மை மற்றும், பிறரன்புக்குப் பாதை” என்ற தலைப்பில் நடைபெற்றுவரும், இக்கூட்டத்தில், இந்தியாவின் இலத்தீன், சீரோ-மலபார், சீரோ-மலங்கார ஆகிய மூன்று வழிபாட்டுமுறைகளின் 174 மறைமாவட்டங்களைச் சார்ந்த ஏறத்தாழ 200 ஆயர்கள் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டம், பிப்ரவரி 19, இப்புதனன்று நிறைவடையும். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2020, 15:04