பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Miguel Ayuso பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Miguel Ayuso  

மனித குலம், தனித்துவங்களை இழந்துவிடும் கலவை அல்ல

மனித உடன்பிறந்த நிலை என்ற ஏடு வலியுறுத்தும் நட்புணர்வு, அமைதி, ஒருங்கிணைந்து வாழ்தல் என்ற மூன்று முக்கியத் தூண்கள், மனிதர்கள் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய அரிச்சுவடி - கர்தினால் Ayuso

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித உடன்பிறந்த நிலை என்ற சூழலை உலகெங்கும் வளர்ப்பதே இன்றைய காலக்கட்டத்தின் மிக முக்கியத் தேவை என்று, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள் கூறினார்.

“உலக அமைதிக்கும், ஒன்றிணைந்து வாழ்வதற்கும், மனித உடன்பிறந்த நிலை”என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏடு கையெழுத்திடப்பட்டதன் ஓராண்டு நிறைவை சிறப்பிக்க, அபு தாபியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட கர்தினால் Ayuso அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இந்த ஏடு வலியுறுத்தும் நட்புணர்வு, அமைதி, ஒருங்கிணைந்து வாழ்தல் என்ற மூன்று முக்கியத் தூண்கள், மனிதர்கள் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய அரிச்சுவடி என்பதை கர்தினால் Ayuso அவர்கள், தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

ஒருங்கிணைந்து வாழ்வது என்று கூறும்போது, அது, நம் தனித்துவத்தையும், நம் மத நம்பிக்கையையும் தியாகம் செய்து மற்றவரோடு வாழ்வது அல்ல என்பதை தெளிவுபடுத்திய கர்தினால் Ayuso அவர்கள், மனித குலம் அனைத்து தனித்துவங்களையும் இழந்துவிடும் ஒரு கலவை அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார்.

வேற்றுமைகள் நிறைந்த மனிதர்கள் ஒருங்கிணைந்து வாழ்வதே மனிதகுலத்தின் அழகு என்று எடுத்துரைத்த கர்தினால் Ayuso அவர்கள், இத்தகைய வாழ்வுக்கு, உரையாடலும், சந்திக்கும் கலாச்சாரமும் பெரும் துணை செய்கின்றன என்பதை, தன் பேட்டியில் தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2020, 15:23